நஃப்ஸைத் தூய்மைப் படுத்துவோம்!
உலகத்தில் மனிதர்களைப் படைத்திருக்கின்ற இறைவன், மனிதர்கள் தங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும். உள்ளங்களில் படிந்திருக்கின்ற அசுத்தங்களை நீக்குவதற்காகவும். நம்முடைய வாழ்க்கையில்நாம் செய்து வருகின்ற ஏராளமான பாவங்களிலிருந்து நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும் ஏராளமான வாய்ப்புகளை மனிதர்களுக்கு வழங்குகின்றான்.
மனிதர்களின் வாழ்க்கையில் உடல் உறுப்புக்கள் ரீதியாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற பொழுது, ஏதேனும் நோய் ஏற்படுகின்ற போது அவற்றைச் செய்வதற்காகவும்.குணப்படுத்துவதற்காகவும் மனிதன் பலவிதமான மேற்கொள்கின்றான். முயற்சிகளை நீண்ட நெடிய காலம் வாழ வேண்டும் என்பதற்காகத் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற
நோய் குணமாக வேண்டுமானால், எவ்வளவு உச்சபட்சமாகப் பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை!எனக்கு ஏற்பட்டிருக்கின்ற நோய் நீங்க வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கினாலும் பரவாயில்லை! எனக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பு சரிசெய்யப்பட வேண்டும். எவ்வளவு உயர்தரமான மருத்துவமனைகளில் சேர்த்துப் பணம் செலவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை! எனக்கு ஏற்பட்டிருக்கின்ற துன்பம் நீங்க வேண்டும்! என்று தன்னுடைய உயிரைக் காப்பாற்ற மனிதன் போராடுகின்றான்.
பயங்கரமான முறையில் மரணத்தின் வாசற்கதவுகளை தட்டி விட்டு வருகின்ற வேதனைகள் நிறைந்த வைத்தியமாக இருந்தாலும், என்னுடைய உயிரைக் காப்பாற்றி விட்டால் போதுமானது என்று சொல்லி மனிதன் எவ்விதச் சோதனைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கின்றான்.
உன்னுடைய உடல் உறுப்புக்களில் சில பாதிப்புக்கள் இருக்கின்றது. உன்னுடைய காலின் விரல்களை எடுக்க வேண்டும். உன்னுடைய கால்களின் அனைத்து விரல்களையும் எடுக்க வேண்டும். உன்னுடைய கால்களில் பாதியை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட நீங்கள் என்னுடைய உடல் உறுப்புக்களில் எதை வேண்டுமானாலும் வெட்டி எடுத்து கொள்ளுங்கள்! என்னுடைய உயிரை மட்டும் காப்பாற்றி விடுங்கள்! என்று சொல்லி மனிதன் தனது உயிரைக் காப்பாற்ற அவ்வளவு துடிக்கின்றான்.
என்னுடைய உடலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, என்னால் கேட்க முடியவில்லையா? என்னால் பார்க்க முடியவில்லையா? என்னால் பேச முடியவில்லையா? என்னால் நடக்க முடியவில்லையா? எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய உயிர் மட்டும் என்னுடைய உடலில் இருந்தால் போதுமானது! என்று சொல்லி மனித உயிருக்காக அந்தளவிற்கு உச்சபட்ச முக்கியத்துவத்தை வழங்குகின்றான்.
மனிதன் தன்னுடையை வாழ்க்கையில் உயிரைக் காப்பாற்ற எந்தளவிற்குப் போராடுகின்றானோ, அதே போன்று தன்னுடைய உள்ளங்களில் அசுத்தங்கள் கலந்து விடாமலும், உள்ளங்கள் கறைபடிந்த உள்ளங்களாக மாறிவிடாமலும் இருக்க நஃப்ஸைத் தூய்மைப்படுத்த அளவிற்குப் போராட வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது.
மனிதனுடைய உள்ளங்கள் சரியாகவும், சீராகவும் இருந்தால் தான், அவன் வாழ்கின்ற வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைந்திருக்கும். மனிதனுடைய உள்ளங்கள் அசுத்தமாகி விட்டால், தீமைகளில் அதிகமாக மூழ் விட்ட உள்ளங்களாக இருந்தால் உடலில் உயிரில்லாத உறுப்புக்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லையோ, அதே போன்று தான், அகத்தம் நிறைந்த உள்ளங்களோடு வாழ்வது எந்த விதமான பயனும் இல்லாமல் போய் விடும்.
உயிரைப் பாதுகாக்க மனிதன் எவ்வாறு பல வகைகளில் முயற்சி எடுத்து போராடுகின்றானோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஒருவருடைய உள்ளம் தூய்மையாக வேண்டுமானால், சரி செய்யப்பட வேண்டுமானால் அதற்காக மனிதன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாமிய மார்க்கம் பலதரப்பட்ட பாடங்களை நமக்கு நடத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிந்து கொள்க: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்,
ஆதாரம்: (புகாரி: 52)
ஒரு மனிதனின் உடல் சீராக வேண்டுமானால், அவனது உள்ளம் சீராக வேண்டும். ஒரு மனிதனுடைய உள்ளம் சீரழிந்து விட்டாள் அவனது உடலும், உடலில் ஏனைய உறுப்புக்களும் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும் என்று உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் ஆழமாக எடுத்துரைத்தார்கள்.
மனிதனின் நன்மையின் தொடக்கமாக இருந்தாலும் அவன் செய்வதின் தூண்டுதலாக இருந்தாலும் அதனுடைய
ஆரம்பப் புள்ளி உள்ளத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள்ளத்தை சரிப்படுத்தப் பாடுபட வேண்டுமா? இல்லையா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கோரை கோரையாக வைத்துப் பாய் பின்னப்படுவதைப் போன்று மக்கள் உள்ளங்களில் சோதனைகள் பின்னப்படும். எந்த உள்ளம் அந்தச் சோதனைகளில் அமிழ்ந்துவிடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி இடப்படும். எந்த உள்ளம் அவற்றை நிராகரித்து விடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு வெண்புள்ளி இடப்படும்.
இவ்வாறு சோதனைகள் இரு விதமான உள்ளங்களில் ஏற்படுகின்றன. ஒன்று, வெண்பாறை போன்று தூய்மையானது; வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும்வரை எந்தச் சோதனையும் அதற்கு இடரளிக்காது. மற்றொன்று, சிறிதளவு வெண்மை கலந்த கருமையான உள்ளம். அது தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜாவைப் போன்று நல்லதை அறியவும் செய்யாது; தீமையை நிராகரிக்கவும் செய்யாது.மனோஇச்சையில் அமிழ்ந்து கிடப்பது ஒன்றுதான் அதற்குத் தெரிந்ததெல்லாம்!
ஆதாரம்: (முஸ்லிம்: 231)
வானம் பூமி நிலைத்திருக்கிற காலம் வரைக்கும் எந்த சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நம்முடைய உள்ளங்கள் வெண்பாறைகள் போன்று தூய்மையாக்கப்பட வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் ஆழமாக வலியுறுத்துகின்றார்கள்.
தூய்மையான ஆடைகளையும், வண்ண நிறங்களிலான ஆடைகளையும் அணிந்து நம்முடைய உடலை மறைந்து வெளியே அலங்காரமாக காட்டிக் கொள்கின்றோம்! மனிதன் தன்னிடத்தில் இருக்கின்ற ஏதேனும் ஒரு பொருளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்கின்றான். தான் வசிக்கின்ற இருப்பிடத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான அனைத்து விதமான வேலைகளையும் செய்கின்றான்.
இவைகளை எல்லாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்ற மனிதன், ஆசைப்படுகின்ற மனிதன், அதற்காக வேண்டி திட்டம் தீட்டுகின்ற மனிதன் தன்னுடைய உள்ளத்தின் அகத்தத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றானா? உள்ளங்களை சுத்தப்படுத்தப் பாடுபடுகின்றானா? அவற்றைச் சீர் செய்ய முயல்கின்றாளா? என்று கேட்டால், இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.
மனிதர்கள் தங்களின் உள்ளங்களை சுத்தப்படுத்தத் தவறி விட்ட காரணத்தில் உள்ளங்களின் நிலைமை குறித்து இறைவன் திருக்குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றான்.அவ்வாறல்ல! அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்களில் கறையாகப் படிந்து விட்டன.
உங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தத் தவறிய காரணத்தினால், பயன்படுத்தப்படாத இரும்பு எவ்வாறு துருப்பிடித்து விணாக போய் விடுமோ, அதே போன்று உள்ளங்களும் தீமையின் காரணமாக துருவாகப் படிந்து வீணாகி விடும் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றான்.
நாம் செய்து வருகின்ற செயல்களின் காரணமாக நமது உள்ளத்தில் துரு படிந்து விட்டது. நமது உள்ளத்தில் படிந்திருக்கின்ற துருவை அகற்ற வேண்டுமானால், நாம் செய்கின்ற செயல்களை, காரியங்களை சீர்தூக்கி பார்த்து சரி செய்ய முற்படும் போது தான், நம்முடைய உள்ளங்களில் படிந்திருக்கின்ற துருவை நீக்கி, நம்முடைய உள்ளங்களை பரிசுத்தப்படுத்த முடியும் என்று இறைவன் பாடம் நடத்துகின்றான்.
மனிதர்களின் வாழ்க்கையில் செய்கின்ற எந்தத் தீமையாக இருந்தாலும், அது உள்ளத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. மனிதன் பேசுகின்ற பொய்யாக இருந்தாலும், பிறரைப் பற்றிப் பேசுகின்ற புறமாக இருந்தாலும், பிறரைப் பற்றிப் பேசுகின்ற அவதூறாக இருந்தாலும், பிறரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதாக இருந்தாலும் கெட்ட சிந்தனையாக இருந்தாலும் இப்படி ஏராளமான பாவங்களின் தொடக்கப் புள்ளி உள்ளத்தில் இருந்து தான் வெளிப்படுகின்றது.
என்னுடைய உள்ளம் எந்த நிலையில் இருக்கின்றது? என்னுடைய உள்ளம்
பரிசுத்தமான நிலையில் இருக்கின்றதா? அல்லது அசுத்தமான நிலையில் இருக்கின்றதா? என்று நம்முடைய உள்ளத்தை நாம் ஒவ்வொருவரும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதாக இறைவன் தெளிவுபடுத்துகின்றான்.
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையே நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடந்தால் வழிதவறியோர் உங்களுக்கு எந்த தீங்கும் இழைக்க முடியாது! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பி செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
நம்முடைய நஃப்ஸை நாம் கண்டிப்பாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். நான் எப்படி இருக்கின்றேன்? என்னுடைய உள்ளம் எந்த நிலையில் இருக்கின்றது? என்னுடைய உள்ளத்தில் இறையச்சத்தின் சார்ஜ் இருக்கின்றதா? என்பன போன்ற பலதரப்பட்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டு, பரிசோதனை செய்ய வேண்டும்.
அவ்வாறு நாம் பாதுகாத்துக் கொண்டால் உள்ளத்தை சீர் செய்ய, சரி செய்ய முயற்சித்தால் எந்த வழிகெட்டவளாலும் நம்மை ஒருக்காலும் வழிகெடுக்க முடியாது என்று அல்லாஹ் உறுதியாக பதிய வைக்கின்றாள்.
உள்ளங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்! உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதில் தான் மகத்தான வெற்றி இருக்கின்றது என்று மிகச் சிறப்பான முறையில் அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.
அதே வேளையில், உள்ளங்களைத் தூய்மைப்படுத்தத் தவறி விட்டால், உள்ளங்களைக் களங்கப்படுத்தி விட்டால் அவனுக்குச் கேடுதான்! அவனுக்கு நாசம்தான் என்று இறைவன் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றான்.
உள்ளத்தின் மீதும், அதை நெறிப்படுத்தியவன் மீதும் சத்தியமாக!
அதன் பாவத்தையும், நன்மையையும் அதற்கு உணர்த்தினான்!
அவ்வுள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றி பெற்று விட்டார்!
அதை மாசுபடுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்!
இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தான் படைத்த பல பொருட்களின்மீது சத்தியம் செய்து விட்டு,மனிதனின் உள்ளங்களின்மீதும் சத்தியம் செய்கின்றான்.
இறைவன் உள்ளத்தை நெறிப்படுத்தி இருக்கின்றான். தேரான பாதை எது? பாவமான பாதை எது? நன்மை எது? தீமை எது? என்பதையும் உள்ளத்திற்கு உணர்த்தி இருக்கின்றான்.
இவற்றை எல்லாம் மீறி, தன்னுடைய உள்ளத்தை யார் அகந்தப்படுத்துகின்றாரோ அவர் நிச்சயம் தோல்வியைச் சந்திப்பார் என்றும். இறைவனுக்குக் சுட்டுப்பட்டு உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவர் மகத்தான வெற்றி பெறுவார் என்றும். இறைவன் நமது உள்ளங்களில் பதிய வைக்கின்றான்.
ஒரு மனிதனின் உள்ளத்தை சீர்படுத்துவதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால். நாம் செய்கின்ற பாலத்திளால் நம்முடைய உள்ளங்களில் உறுத்துதல் ஏற்பட வேண்டும்.
உள்ளத்தை அப்படியே குடைந்து எடுக்க வேண்டும். ஐயோ! இந்தப் பாவத்தை நாம் செய்து விட்டோமே! இப்படிப்பட்ட ஒரு பாவத்தில் ஈடுபட்டு விட்டோமே என்றெல்லாம் எண்ணி வருந்த வேண்டும்.
இப்படிப்பட்ட மனிதர்கள் இறைவனுக்கு அஞ்சியவர்களாகத் தங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த முற்படுகின்றார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்ற உள்ளங்கள் இறைவனின் பார்வையில் மிகச் சிறந்த உள்ளமாக பார்க்கப்படுகின்றது.
நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சார் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை (அல்பிர்கு) மற்றும் தீமை (அல்இஸ்மு) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.
ஆதாரம் (முஸ்லிம்: 4992)
(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்கப்படுகின்றது. நன்மை என்பது நல்ல பண்புகள் என்று பதில் அளித்து விட்டு, தீமை என்றால் என்ன? என்பது குறித்து மிக முக்கியமான செய்தி ஒன்றை பதிய வைக்கின்றார்கள்.
அதாவது தீமை என்பது நீ செய்கின்ற ஒரு செயலின் காரணமாக உன்னுடைய உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட்டு, மக்களுக்கு தெரிந்து விடுவதை கண்டு நீ வெட்கப்பட்டு வெறுப்பாய்! அதுதான் தீமை என்றார்கள்.
நான் ஒரு பாவமான காரியத்தில் ஈடுபடுகின்றபோது நான் செய்கின்ற அந்தப் பாவம் குறித்து என் உள்ளம் எனக்கு எச்சரிக்கை செய்யும். இந்தக் காரியத்தைச் செய்யாதே! இந்தச் செயலில் ஈடுபடாதே! இது தடுக்கப்பட்ட காரியம்! இது தவிர்க்க வேண்டிய செயல் என்றெல்லாம் ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை மணி அடிக்கும்!
உள்ளத்தின் எச்சரிக்கைகளை மீறிச் சென்றுதான் ஒருவன் பாவமான காரியங்களில் ஈடுபடுகின்றான். உள்ளத்தில் ஏற்படும் உறுத்தலுடனும். நெருடலுடனும்தான் பாவங்களைச் செய்கின்றான். மக்கள் பார்த்து விடக்கூடாது மக்களுக்குத் தெரிந்து விட்டால் அயமானமாகி விடும் என்ற அச்சத்தில்தான் பாவமான காரியங்களில் ஈடுபடுகின்றான்.
நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் வெளியே சொல்வதற்கு அஞ்சக் பாரதூரமான சில விஷயங்கள் எங்களில் உள்ளங்களில் தோன்றுகின்றன” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்களா?” அதற்கு, ஆம் என்று கேட்டார்கள். என்று நபித்தோழர்கள் பதிலளித்தார்கள். “இதுதான் சரியான அமாஸ்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஆதாரம்: (முஸ்லிம்: 5111)
நபித்தோழர்களில் சிலர், வெளியே சொல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான விஷயங்கள் எங்களின் உள்ளங்களில் தோன்றுகின்றது என்று அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கேட்ட போது, உள்ளங்களில் இதுபோன்ற எண்ணங்கள் தோன்றுகின்றதே என்று உங்களின் உள்ளங்கள் உறுத்துகின்றது என்றால் நீங்கள் சரியான ஈமானில் இருக்கின்றீர்கள் என்று பதிலளிக்கின்றார்கள்.
ஆனால் நம்மில் சிலர் பாவமான எண்ணங்கள் உள்ளத்தில் தோன்றுவதையெல்லாம் தாண்டி, அந்தப் பாவப் பேச்சுக்களை வெளியே பேசி விடுகின்ற அளவிற்கு. தம்முடைய செயல்கள் மிகவும் மோசமாக அமைந்து விடுகின்றது.
மனிதர்கள் பாவம் செய்கின்ற போது. அவர்களுடைய உள்ளங்கள் அதைத் தடுப்பதற்கான வேலைகளில் நிச்சயம் ஈடுபடும் என்பதை மிகச்சிறந்த உதாரணத்தின் மூலம் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேரான பாதைக்கு ஒரு உதாரணம் கூறப்படுகின்றது. நேரான பாதைக்கு இரண்டு சுவர்கள் உள்ளன. அவ்விரண்டிலும் திறக்கப்பட்ட கதவுகள் உள்ளன. அந்தக் கதவுகளின் மீது மூடப்பட்ட திரை ஒன்று போடப்பட்டுள்ளது. பாதையின் வாயிலில் நின்று கொண்டு ஒரு அழைப்பாளர் அழைக்கின்றார்.
மக்களே! நேராக பாதையில் நுழையுங்கள்! (வலதோ, இடதோ தடுமாறி விட வேண்டாம் என்று கூறுவார்.
பாதையின் மேற்பகுதியிலிருந்து அழைப்பாளர் அழைப்பார். இந்த வாசல்களின் கதவுகளில் ஏதேனும் ஒன்றைத் திறந்து விட்டால், உணக்கு கேடுதான்! அதிலே மூழ்கடிக்கப்பட்டு விடுவாய் என்று அழைப்பார்.
பிறகு ஒவ்வொன்றுக்கும் விளக்கம்கொடுத்தார்கள்.
நேரான பாதை என்பது. அது தான் இஸ்லாம்! இரண்டு சுவர்கள் என்பது, அவைதான்
அல்லாஹ்வின் வரம்புகள்!
திறக்கப்பட்ட கதவுகள் என்பது, அவைதான் அல்லாஹ் தடுத்தவைகள்!
பாதையின் வாசலில் நின்று கொண்டு அழைத்தது, அதுதான் அல்லாஹ்வின் வேதம்!
பாதைக்கு மேலே இருந்து அழைத்தது.
அதுநாள் ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தின் கட்டளை என்று விளக்கமளித்தார்கள்.
ஆதாரம்: (அஹ்மத்: 17671)
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் ஏராளமான பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். அதில் முத்தாய்ப்பாக, ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளமும் தவறின்பால் அவனைச் செல்ல விடாமல் கட்டளைகளைப் போட்டு தடுத்து நிறுத்தும்.
உள்ளத்தின் கட்டளைகளை மீறி ஒருவன் பாவமான காரியங்களில் மூழ்கி, தன்னைத்தானே அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மாயிஸ் என்ற ஒரு நபித்தோழர், தான் செய்த ஒரு தவறின் காரணத்தினால், தன்னுடைய உள்ளத்திலே ஏற்பட்ட அசுத்தத்தின் காரணத்தினால். கறைபடிந்த நிலையில் இருக்கின்ற தன்னுடைய உள்ளத்தின் அசுத்தத்தை நீக்கி, தூய்மைப்படுத்தக் கடுமையான முறையில் போராடிய மெய்சிலிர்க்க வைக்கின்ற செய்திகளை ஹதீஸ்களில் நம்மால் பார்க்க முடிகின்றது.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்து விட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்” என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, “தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது என்று கருதுகிறார்” என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை ‘பகீடீல் ஃகர்கத்’ பொது மைய வாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ என்ற பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர் மீது ‘ஹர்ரா’வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகி விட்டார்.
ஆதாரம்: (முஸ்லிம்: 3497))
இந்தச் செய்தியை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! தன்னை அடிப்பதற்கான கற்கள் இல்லை என்று உணர்ந்தவுடன், ஹர்ரா பகுதியை நோக்கி விரைகின்றார். ஹர்ரா பகுதியில் பெரும் பாறாங்கற்களை கொண்டு எறிந்து அவருக்கான தண்டனையை நிறைவேற்றுகின்றார்கள். தன்னுடைய உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தப் போராடி மரணிக்கின்றார்.
….பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!” என்று வேண்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்” என்று கூறினார்கள்…
ஆதாரம்: (முஸ்லிம்: 3499)
தன்னுடைய உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்ட மாயிஸ் (ரலி) அவர்களின் சிறப்பை அல்லாஹ்வின் தூதர் அற்புதமாகப் பதிய வைக்கின்றார்கள்.
இன்னும் சொல்வதாக இருந்தால் தன்னைச் சுற்றி இருக்கின்ற மனிதர்கள் தன்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்களே! கேவலமாக நினைப்பார்களே! இத்தனை காலம் நல்லவன் மாதிரி வேடம் போட்டாயா? என்று கேட்பார்களே! என்றெல்லாம் எண்ணி மாயிஸ் அவர்கள் தவறை நியாயப்படுத்தவில்லை. தன்னுடைய உள்ளம் பரிசுத்தப்படுத்தப்பட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு அடிப்படையை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவராகத் தான் செய்த தவறை நன்மையாக மாற்றுவதற்குப் போராடுகின்றார்.
ஊர் முழுக்க சேர்ந்து கல்லால் ஓட ஓட விரட்டிப் பிடித்து அடிக்கின்றார்கள். வேதனையின் உச்சத்திலே இருந்த நேரத்தில் கூட அந்த மாயிஸ் (ரலி) வாய் திறந்தாரா? இல்லை! உள்ளத்தின் அசுத்தத்தை நீக்கப் பாடுபட்டிருக்கின்றார் என்பதையெல்லாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்!
செய்த தவறை ஒப்புக் கொண்டு தண்டனையை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் போதுமானது என்று நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்ணியப்படுத்தினார்கள். இப்படி தன்னைத் தானே மாற்றிக்கொண்டு தன்னுடைய உள்ளத்தின் தூய்மைப்படுத்தியவர்களுக்கு அசுத்தத்தை இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது.
எனவே இனிவரும் காலங்களில், நம்முடைய வாழ்க்கையில் நாம் என்ன தவறுகளில் ஈடுபட்டிருந்தாலும், பாவமான காரியங்களைச் செய்திருந்தாலும் நான் என்னுடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்தப் பாடுபடுவேன் என்ற சபதத்தை ஏற்று, அல்லாஹ்விடத்தில் மகத்தான கண்ணியத்தைப் பெறுவோமாக!