எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் தொடர்கிறார்கள்.

இஸ்லாம் அல்லாத வேறுவேறு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், வேறுவேறு சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சிரமம், பாதிப்பு, சோதனை என்பது மிகமிகக் குறைவு தான் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

ஆனால் உலகத்தில் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்பவர்களுக்கும், நான் ஒரு முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கும் சொல்லெணாத் துன்பங்களும், துயரங்களும் ஏற்படுவதையும், அராஜகங்களும், அக்கிரமங்களும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதையும் நிதர்சனமாகக் காண முடிகின்றது.

இந்த உலகத்தை விட்டு இஸ்லாத்தை அழித்து விடுவதற்கும், இஸ்லாமியர்களின் உடற்கூட்டிலிருந்தும், உள்ளங்களிலிருந்தும், இஸ்லாத்தை அகற்றி விடுவதற்கும் கயவர்கள் அரும்பாடுபட்டு பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.

இஸ்லாத்தை அழிப்பதற்காகவே பெருங்கூட்டங்கள் களத்தில் நின்று பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அழிப்பதற்கு எதிரிகள் பல வகைகளில் சூழ்ச்சி செய்து, சதித்திட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.

* இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு

* மதத்தை வளர்க்கிறார்கள் என்ற தவறான கருத்தை விதைத்து சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமிய மதரஸா பாடத்திட்டத்தில் விஷக் கருத்தை விதைப்போம் என்று சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமியப் பெண்களின் ஃபர்தாவை இழிவுபடுத்தி சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமியர்கள் எங்கள் மதத்திற்கு மாறினால் பெரும்பகுதியான பணமதிப்பை பரிசாக வழங்குவோம் என்று சூழ்ச்சி செய்தல்!

* கர்வாப்சி என்ற பெயரால் மதம் மாற்றும் சதித்திட்டம் செய்து சூழ்ச்சி செய்தல்!

* மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம் களை கொலை செய்து சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று கூறி சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து சூழ்ச்சி செய்தல்!

* பள்ளிவாசல்களை இடித்து சூழ்ச்சி செய்தல்!

* இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறித்து நாட்டை விட்டு விரட்ட நினைத்து சூழ்ச்சி செய்தல்!

இவ்வாறு பலதரப்பட்ட வகைகளில் கயவர்களின் சூழ்ச்சிகளும், கயமைத்தன சிந்தனையாளர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்தனை சூழ்ச்சிகளையும் அராஜகங்களையும் தொடுப்பதற்கான மிக முக்கியமான அடிப்படைக் காரணம், இஸ்லாத்தை அழித்தொழித்து விட வேண்டும் என்ற வெறித்தனம் தான்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் சதி வலைகளையெல்லாம் கீறிக் கிழித்துக் கொண்டு இஸ்லாம் எனும் சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து, பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

சூழ்ச்சிகளை சுக்குநூறாக்கும் இறைவன்

உலகத்தில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்ற எதிரிகள், கலகக்காரர்கள், அராஜகப் பேர்வழிகள் என்று யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய சூழ்ச்சிகளை இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டாலும், எதிரிகளால் இஸ்லாத்தை ஒருக்காலும் அழிக்கவே இயலாது; எதிரிகளின் சூழ்ச்சிகளை இறைவன் தவிடுபொடியாக்கி விடுவான் என்று ஆணித்தரமான வார்த்தைகளின் மூலம் திருக்குர்ஆன் பறைசாற்றுகின்றது.

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை நாடு கடத்தவோ இறைமறுப்பாளர்கள் சூழ்ச்சி செய்ததை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் சிறந்தவன்.

(அல்குர்ஆன்: 8:30)

சூழ்ச்சி செய்பவர்கள் எத்துணை பெரிய கொம்பனாக இருந்தாலும், அதிகார பலத்தைக் கைகளில் வைத்திருந்தாலும், இறைவனுக்கு எதிராகவும், இறைவனின் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்தால், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். அல்லாஹ்வே சிறந்த சூழ்ச்சியாளன்.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்.

அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம்.

(அல்குர்ஆன்: 27:50-51)

நீங்கள் எவ்வளவு பயங்கரமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டாலும், எதிரிகளும், கயவர்களும் அறியாதவாறு அல்லாஹ் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று கடுமையான முறையில் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

மேலும், எதிரிகள் செய்த சூழ்ச்சி என்னவானது என்பதை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும் என்றும், சூழ்ச்சி செய்வோரை அல்லாஹ் அழித்தொழித்து இல்லாமல் ஆக்குவான் என்றும் இறைவன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறான்.

இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் உள்ள குற்றவாளிகளில் பெரும்புள்ளிகளை அதில் சதி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தங்களுக்கே சதி செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உணர்வதில்லை.

(அல்குர்ஆன்: 6:123)

ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய குற்றத்தை செய்த குற்றவாளிகள் சூழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.ஆனால் அவர்கள் தங்களுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்.

மிகப் பெரும் சூழ்ச்சியை அவர்கள் செய்தனர்.

(அல்குர்ஆன்: 71:22)

காலம் காலமாக மிகப்பெரிய சூழ்ச்சியைச் செய்து, முஸ்லிம்களை இல்லாமல் ஆக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்படும் என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

இறை மறுப்பாளர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்துபவன்.

(அல்குர்ஆன்: 8:18)

யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும், எத்தனை பெரிய பிரம்மாண்டமான படைகளை தனக்குக் கீழ் வைத்திருந்தாலும், அல்லாஹ்வை மறுப்பவர் சூழ்ச்சியில் ஈடுபடும் போது, அந்த சூழ்ச்சி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இறைவன் சவால் விடுகின்றான்.

இறை மறுப்பாளர்களுக்கு அவர்களது சூழ்ச்சி அழகாக்கப்பட்டு, நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டு விட்டனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

(அல்குர்ஆன்: 13:33)

சூழ்ச்சி செய்து இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு அவர்களின் சூழ்ச்சி அழகாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் இறுதியில் அந்த சூழ்ச்சி நிச்சயம் தோல்வியைத் தான் தழுவும்.

அவர்கள் தமது சூழ்ச்சிகளைச் செய்தனர். மலைகள் பெயர்ந்து விடும் அளவுக்கு அவர்கள் சூழ்ச்சி செய்தாலும், அவர்களது சூழ்ச்சி(யின் முடிவு) அல்லாஹ்விடமே இருக்கிறது.

(அல்குர்ஆன்: 14:46)

எதிரிகளே! அராஜகம் செய்பவர்களே! நீங்கள் பிரம்மாண்டமான மலைகளையே புரட்டுகின்ற அளவிற்கு சூழ்ச்சிகளில் ஈடுபட்டாலும், அதற்கு வெற்றி அளிப்பது இறைவனின் கைவசமே உள்ளது.

எனவே அயோக்கியர்கள் செய்கின்ற அத்தனை சூழ்ச்சிகளும் வெற்றியில் முடியும் என்று எதிரிகள் பகல் கனவு காணக் கூடாது.

அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 21:70)

இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் யார் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் அது நஷ்டத்தில் போய் முடியும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

இதுபோன்ற ஏராளமான திருக்குர்ஆனின் வசனங்கள் சூழ்ச்சி குறித்தும், சூழ்ச்சியாளர்கள் குறித்தும் மரண அடி கொடுக்கின்ற வார்த்தைகளாக, திருக்குர்ஆன் நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது.

எதிரிகளின் சூழ்ச்சி, இஸ்லாத்திற்கு வளர்ச்சியே!

இந்த உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்காமல் இருப்பதற்கும், மக்கள் இஸ்லாத்தில் இணையாமல் இருப்பதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு காரியங்களை சதித்திட்டமாகத் தீட்டி அதை செயல்படுத்தியும் வருகின்றார்கள்.

உலகத்தில் எந்த அளவுக்கு இஸ்லாம் எதிர்க்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு வானளாவிய அளவில் மேலோங்கி நிற்பதை நம் கண்களுக்கு முன்னால் பல்வேறு ஆய்வறிக்கைகள் நிரூபிக்கின்றன.

இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அது மட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான்.

இவ்வாறு அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்து வரும் வேளையில், அதிகமான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் இஸ்லாமிய மார்க்கம் மனித அறிவின் சிந்தனையின் அடிப்படையில் பார்த்தால் வீழ்ச்சியடைந்து அழிவை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி உள்ளதா? இல்லவே இல்லை.

இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்று முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்கள் என்பதால் நமது மார்க்கத்திற்கு ஆதரவாக நாம் பொய் சொல்கின்றோம் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால், நம்மை எதிர்க்கும் எதிரிகளின் நாவிலிருந்தே இஸ்லாத்தின் வளர்ச்சியையும், உச்சக் கட்ட எழுச்சியையும் உலகமே நம்பும் வகையில் சில ஆதாரங்களோடும், புள்ளி விபரங்களோடும் சமர்ப்பிக்க வைத்திருக்கின்றான் இறைவன். அல்ஹம்துலில்லாஹ்!

அதிகம் பரவி வரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும் போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த, மதம் மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030-ம் ஆண்டு நெருக்கத்தில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அசுர வளர்ச்சியடையும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 23.4சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 3.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 3.5 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்பகுதிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர்.

அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3 பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அசுர வளர்ச்சி நீடித்தால் 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

1990லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.

‘2027ல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும் இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது.

நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர்லாந்தில் முஸ்லிம்கள் 50% சதவிகிதமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025-ல் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050-ல் ஜெர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது.

மேற்கண்ட ஆய்வுகளும், புள்ளி விபரங்களும் இந்த உலகிற்குப் பறைசாற்றுகின்ற செய்தி என்ன? உலக மக்கள் எழுப்புகின்ற அத்துணை கேள்விகளுக்கும், படைத்த இறைவனின் அற்புதமான பதில் இதோ!

அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

(அல்குர்ஆன்: 61:8-9)

இஸ்லாம் இறைவனின் மார்க்கம்! இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம்! எதிரிகள் படை சூழ இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எதிர்க்க வேண்டும் என்று எவ்வளவுதான் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தாலும், அல்லாஹ் இஸ்லாமிய ஒளியைப் பூரணப்படுத்தியே தீருவான்.

இன்னும் மென்மேலும், ஒவ்வொரு நாளும் இஸ்லாம் எதிர்க்கப்படுகின்ற அளவுக்கும், ஏறி மிதிக்கப்படுக்கின்ற அளவுக்கும் உச்சக்கட்ட அசுர வளர்ச்சியை மக்களின் மனங்கவரும் வளர்ச்சியை கண்டிப்பாக எட்டும் என்று எதிரிகளுக்கு அல்லாஹ் அபாய சங்கை ஒலித்திருக்கின்றான்.

சூழ்ச்சியும் வளர்ச்சியும்!

இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் எதிர்கள் நாலாப்புறங்களிலிருந்தும் எதிர்ப்புக் கணைகளை கக்கிக் கொண்டும் தொடுத்துக் கொண்டும் தான் இருப்பார்கள் என்பதற்குக் கடந்த கால வரலாறுகள் நமக்கு அற்புதமான சான்றாக அமைந்திருக்கின்றன.

இஸ்லாத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்க வந்த இறைத்தூதர்கள் முதல், இறைவனின் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், சோதனைகளுக்கும், சிரமங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் எதிரிகளின் எல்லா சூழ்ச்சிகளையும் இறைவன் தவிடுபொடியாக்கி விட்டான் என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம்!

ஸஜ்தாவில் வைத்தே கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை ஸஜ்தாவிலிருந்து எழ முடியாத அளவிற்கு எதிரிகள் சூழ்ச்சி செய்து சித்ரவதை செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து எடுத்து விட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: (புகாரி: 3854)

ஒட்டகக் குடலை முதுகிலே போட்டு இஸ்லாத்தையும், நபிகளாரையும் கொன்று விட வேண்டும் என்று எதிரிகள் கங்கணம் கட்டினார்கள். ஆனால் எதிரிகளின் சூழ்ச்சியை இறைவன் தோல்வியில் முடியச் செய்து, இஸ்லாத்தை மேம்படுத்தினான்.

கழுத்தை நெறித்துக் கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது வலுவான போர்வையால், கழுத்தை முறித்தும், நெரித்தும் கொன்று விட வேண்டும் என்று எதிரிகள் சூழ்ச்சி செய்தார்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், “இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’’ என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், “என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?’’(40:28) என்று கேட்டார்கள்.

ஆதாரம்: (புகாரி: 3856)

‘அல்லாஹ் தான் இறைவன்’ என்று சொன்னதற்காக, கழுத்தை நெறித்து, பலமாக முறுக்கி அந்த இடத்திலேயே நபிகளாரைக் கொன்று விட வேண்டும் எதிரிகள் திட்டம் தீட்டி, அதை செயல்முறையும் படுத்திக் காட்டினார்கள். ஆனால் இறைவன் எதிரிகளின் சூழ்ச்சியை பலவீனப்படுத்தினான்.

கூட்டமாகச் சேர்ந்து கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்களை தனித்தனியாகவும், ஒவ்வொருவராகவும் கொலை செய்வதற்கு முயற்சி செய்து அந்த முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போனது. அதன்பிறகு ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்து நபி (ஸல்) அவர்களைக் கொன்று குவிப்பதற்குத் திட்டம் தீட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாத், உஸ்ஸா, ஆகிய சிலைகளுக்கு முன்னால் போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அங்கே வந்தார்கள். குறைஷிகள் செய்து கொண்ட சத்தியத்தைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களை சந்தித்து, தான் கண்டதைச் சொனார்கள். உங்களைப் பார்த்தாலே கொன்று விட வேண்டும் என்று குறைஷிகள் ரத்தவெறி கொண்டு அலைகின்றார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தண்ணீர் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரவே அதை வாங்கி நபி (ஸல்) அவர்கள் உளுச் செய்தார்கள். பிறகு பள்ளிவாசல் சென்று தொழுதார்கள்.

இந்த சமயத்தில் கொலை வெறி கொண்டு அலைந்த குறைஷிகள் அங்கே வந்து இந்தக் காட்சியைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து கையில் மண்ணை அள்ளி எதிரிகளின் மேல் எறிந்தார்கள். அந்த மண் அங்கே நின்றிருந்த முஷ்ரிக்குகள் எல்லோருடைய கண்களிலும் விழுந்தது.

ஆதாரம்: (அஹ்மத்: 2626)

ஒரு சேர அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து நபிகளாரைக் கொன்று விடலாம், அவ்வாறு கொலை செய்து விட்டால், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களின் வாயிலும், முகத்திலும் மண்ணை அள்ளி எறிய வைத்தான் இறைவன்.

சூழ்ச்சியாளர்களே உங்களைத்தான்!

எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், கொடுங்கோலனாக இருந்தாலும் அவனது முன் நெற்றி இறைவனின் கைவசமே இருக்கின்றது. சூழ்ச்சியாளன் போடுகின்ற ஆட்டத்தை அல்லாஹ் அடக்குவான்.

“நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள். என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் நெற்றியை அவனே பிடித்து வைத்துள்ளான். என் இறைவன் நீதி வழியில் உள்ளான்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 11:55-56)

இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் எதிரிகளே! இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வெறி கொண்டு திரியும் சூழ்ச்சியாளர்களே! முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்ற நினைக்கும் கயவர்களே! நீங்கள் எவ்வளவு தான் சதித்திட்டம் தீட்டினாலும் உங்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடிப்பான்.

நீங்கள் பொறுமையுடனும் இறையச்சத் துடனும் இருந்தால் அவர்களது சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிபவன்.

(அல்குர்ஆன்: 3:120)

குற்றவாளிகளுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும் கடும் வேதனையும் வந்தடையும்.

(அல்குர்ஆன்: 6:124)

இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்ய நினைத்தால், திட்டம் தீட்டினால் சிறுமைப்பட்டு, சீரழிந்து, கடும் வேதனைக்கு உள்ளாவீர்கள் என்று சூழ்ச்சியாளர்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

சூழ்ச்சியாளர்களுக்கு எதிராகக் கையேந்துவோம்!

அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு, படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தாரை தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’’ என்று அவர்களுக்குக் கேடு நேர நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: (புகாரி: 2933)

எதிரிகளின் சூழ்ச்சிகளையும், கொடூரமான சூழ்ச்சியாளர்களையும் நடுநடுங்கச் செய்வதற்கும், திணறடிப்பதற்கும், தோல்வியுறச் செய்வதற்கும் அல்லாஹ் போதுமானவன்!