மனிதனைப் பக்குவப்படுத்தும் மறுமை நம்பிக்கை
மறுமையை நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
மனிதர்களைச் சீர்திருத்த அனுப்பப்பட்ட அத்தனை இறைத்தூதர்களும் தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்தது போலவே மறுமை நம்பிக்கையையும் போதித்தார்கள்.
இவ்வுலகத்துடன் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே அனைத்து மனிதர்களும் ஒன்று திரட்டப்பட்டு இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். அவ்வுலகில் மனிதர்களின் செயல்களுக்குரிய கூலி வழங்கப்படும். நன்மை செய்தால் அதற்குரிய கூலியும், தீமை செய்தால் அதற்குரிய தண்டனையும் இறைவனால் வழங்கப்படும். எனவே அந்நாளை அஞ்சி வாழுங்கள் என்று ஒவ்வோர் இறைத்தூதரும் மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இறைத்தூதர்களின் முதன்மை அறிவுரைகளில் ஒன்றாக மறுமை நம்பிக்கையும் இடம் பிடிப்பதிலிருந்து ஒரு முஃமினுக்கு அது எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.
மறுமையை நம்பாமல் இறைநம்பிக்கை முழுமை பெறுவதில்லை என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் (நாட்டமாகிய) விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 9)
நம்ப வேண்டியவற்றை நம்பாமல், குறிப்பாக மறுமையை நம்பாமல் வேறு எந்த நற்செயலைச் செய்தாலும் அதில் நன்மை கிடைக்காது எனும் கருத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவதில் (மட்டுமே) நன்மை இல்லை. மாறாக, அல்லாஹ்வையும், மறுமை நாளையும். வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு, அவன்மீதுள்ள அன்பின் காரணமாக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும். ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும். இரந்து கேட்பவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் செல்வத்தை வழங்கி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுபவர்களும், கடும் வறுமையிலும், நோயிலும், போர்க் காலத்திலும் பொறுமையை மேற்கொள்வோருமே நன்மை செய்வோராவர். அவர்களே உண்மையாளர்கள். மேலும் அவர்களே இறையச்சமுடையவர்கள்.
எனவே முஃமினின் வாழ்வில் மறுமை நம்பிக்கைக்குப் பெரிய இடமுண்டு.
திருக்குர்ஆனில் முஃமின்களின் செயல்கள் ஒவ்வொன்றையும் அவர்களின் மறுமை நம்பிக்கையைக் குறிப்பிட்டே சீர்படுத்துகிறான்.
நீங்கள் மறுமையை நம்புவோராக இருந்தால் இன்னின்ன நற்காரியங்களைச் செய்யுங்கள் என்று ஒரு பக்கம் நல்லறங்களின் பால் ஆர்வமூட்டுகிறான்.
அதே போன்று மறுமை நம்புவோராக இருந்தால் இன்னின்ன தீய செயல்களை விட்டு விடுங்கள் என்று அச்சமூட்டுகிறான்.
சிறிதோ, பெரிதோ நமது அனைத்து செயல்களுக்கும் மறுமை நம்பிக்கையையே அடிப்படை ஆதாரமாக இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.
திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இதற்குப் பல சான்றுகளைக் காணலாம்.
“நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு (தூதுச்செய்தி) அறிவிக்கப்படுகிறது. எனவே தமது இறைவனைச் சந்திக்க விரும்புபவர் நற்செயல் செய்யட்டும். தமது இறைவனை வணங்குவதில் யாரையும் அவர் இணையாக்க வேண்டாம்” என்று (நபியே!) கூறுவீராக!
மறுமையில் இறைவனைச் சந்திக்கும் நாளை நம்புபவர் தனது செயல்களை சீர் செய்து கொள்ள வேண்டும் என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும். மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர். (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6018)
பேசினால் நல்லதை மட்டுமே பேசட்டும் என்பதற்கு கூட மறுமை நம்பிக்கையை நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.
பிறருக்கு எவ்வித அநீதியையும் இழைத்து விடக் கூடாது. சிறிய அளவில் பிற மக்களுக்கு அநீதி இழைத்தாலும் அதற்கு மறுமையில் இறைவன் முன்னிலையில் பதில் சொல்லியாக வேண்டும் என்று மறுமை நம்பிக்கையைக் கொண்டு முஃமின்களுக்கு அச்சமூட்டப்படுகின்றது.
இதோ நபியவர்கள் கூறும் எச்சரிக்கையைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கக்கூடும். ஆகவே, எவரது (சாதுரியமான) சொல்லை வைத்து அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை (அவருக்குரியது) என்று நான் தீர்ப்பளித்துவிடுகிறேவோ அவருக்கு நான் நரக தெருப்பின் ஒரு துண்டைத்தான் ஒதுக்கித் தருகிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: (புகாரி: 2680)
“திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, “யாரிடத்தில் பணமும், பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தாள்” என்று தபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது கமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4678)
நாம் அடுத்தவர்களுக்குத் தீங்கிழைத்தால் அது இவ்வுலகத்துடன் முடிவதில்லை. நாளை மறுமையில் இறைவன் முன்னிலையில் நிற்கும் போது, பிறருக்குச் செய்த அநீதி, அக்கிரமங்கள் குறித்து இறைவனிடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அவற்றுக்கு முறையான பதில் சொல்லாமல் இறைவனின் விசாரணை மன்றத்திலிருந்து தப்பிக்க இயலாது எனும் வலிமையான அச்சத்தை மறுமை நம்பிக்கை தருகிறது.
இந்த வகையில் மறுமை நம்பிக்கையே முஃமின்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கேடயமாக திகழ்கின்றது.
நாம் பிறருக்கு அந்தியிழைப்பதிலிருந்தும் நமக்குப் பிறரால் அநீதி இழைக்கப்படுவதை விட்டும் காக்கும் அரணாக இந்த மறுமை நம்பிக்கை அமைந்து விடுகிறது.
இந்த வகையில் ஒரு இறைநம்பிக்கையாளனின் வாழ்வில் மறுமை நம்பிக்கை பெரும் தாக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது என்பதை அறியலாம்.
இவ்வுலகத்துடன் மனித வாழ்வு முடிந்து போகாது. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு எனும் நம்பிக்கையே அறிவுப்பூர்வமாகவும் சரியாக உள்ளது.
ஏனெனில் நன்மை செய்வோர் யாவரும் மறுமையில் அதற்கான வெகுமதி கிடைக்கும் என்பதாலேயே செய்கிறார்கள். மறுமை என்ற ஒன்று இல்லையாயின் நன்மை செய்வோருக்கு நாம் ஏன் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். பலரும் தம் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது தாம் மட்டும் ஏன் குறிப்பிட்ட வரையறைப்படி வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள்.
கொலை செய்பவர்கள், மோசடி செய்பவர்கள், பிறரது பொருளை திருடி உண்பவர்கள். ஒழுக்க சீர்கேட்டிலேயே உழல்பவர்கள் என இவர்கள் எல்லாம் இவ்வுலகில் எவ்விதத் தண்டனையும் இல்லாமல் சொகுசாக வாழ்வதைப் பார்க்கும் போது இவர்களுக்கு இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
இல்லை என்றால் தீயவர்கள் எல்லாம் நிம்மதியாக இவ்வுலகில் வாழும் போது நாம் மட்டும் ஏன் நல்லவர்களாக வாழ வேண்டும் என்று அதிகமானோர் கருதும் நிலை ஏற்படும்.
அவ்வாறு ஏற்பட்டால் அது தறிகெட்ட தீமைகள் நிறைந்த மோசமான வாழ்க்கைக்கே வழிவகுக்கும்.
எனவே நல்லவர்கள் ஏன் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்கு விடையாக மறுமை நம்பிக்கை இருக்கின்றது.
இவ்வுலகத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. நாம் செய்யும் நற்செயல்கள் எதுவும் வீணாகாது. அதற்கு இறைவன் மறுமையில் பரிசளிப்பான். அதேவேளை தீயவர்கள் இவ்வுலகத்திலிருந்து தப்பினாலும் மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
இவ்வாறு மறுமையை உறுதியாக நம்பும்போது நமது இவ்வுலக வாழ்வு சரியான பாதையை நோக்கி நகர்வதைக் காணலாம்.
மறுமை தாளை நம்புவதே மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். அதை மறுப்பதற்கு மனிதருக்குத் தகுதியில்லை. அதையும் தாண்டி ஒருவர் மரணத்திற்குப் பிறகு நாம் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம் என்று கூறினால் அவர்களுக்குக் கடும் எச்சரிக்கையை அல்லாஹ் விடுக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகள் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது. “அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப என்னால் முடியாது’ என்று அவன் எண்ணியதேயாகும்.
அவன் என்னை ஏசியது, ‘எனக்குக் குழந்தை உண்டு’ என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்” என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: (புகாரி: 4482)
இறைமறுப்பாளர்களிடம் “எனது வசனங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படவில்லையா? நீங்கள் கர்வம் கொண்டு, குற்றவாளிகளின் கூட்டமாக இருந்தீர்கள்” (என்று கூறப்படும்) “அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. மறுமை நாள் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை” என்று கூறப்பட்டபோது “மறுமை நாள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. (அது) கற்பனை என்றே நினைக்கிறோம். நாங்கள் உறுதி கொள்வோர் இல்லை” என்று கூறினீர்கள். அவர்கள் செய்த தீமைகள் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டு விடும். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். “உங்களுடைய இந்நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்று இன்று நாமும் உங்களை மறந்து விட்டோம். உங்களின் தங்குமிடம் நாகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாகக் கருதியதே இதற்குக் காரணம். உலக வாழ்வும் உங்களை ஏமாற்றி விட்டது” என்று கூறப்படும். அவர்கள் இன்று நரகிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் பொருத்திக் கொள்ளப்படவும் மாட்டார்கள்.
மறுமை வாழ்வை மறுப்போர் எவராயினும் இறைவனின் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும்.