சோதனையின்றி சொர்க்கமில்லை

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

ஆரம்ப கால கட்டத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடி, உதை ஊர் நீக்கம், அடக்கத்தலம் தர மறுப்பு எனப் பல்வேறு விதமான சோதனைகளை கொள்கைச் சகோதரர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்தான் ஆறுதலாக எடுத்துச் சொல்லப்பட்டது.

“உங்களுக்கு முன்சென்றோருக்கு ஏற்பட்டதைப் போன்று உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும் நோயும் ஏற்பட்டது. இறைத்தூதரும் அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று கூறும் அளவிற்கு உலுக்கப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி அருகிலிருக்கிறது.

(அல்குர்ஆன்: 2:214)

இந்த வசனம்தான் திரும்பத் திரும்ப நினைவூட்டப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் ஒன்றைத் தலையணையாக சால்வை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், முன்னிருந்தவர்களிடையே “உங்களுக்கு ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட)  மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அந்தக் கொடுமை யானது அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட. அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழ்ச் செய்யவில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப் படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ‘ஹளா மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சுப்பாப் பின் அல்அரத் (ரலி)

நூல்: (புகாரி: 3612)

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சோதனைகளின்போது இந்த ஹதீஸும் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டது. அதனால் அப்போது கொள்கைச் சகோதரர்கள் தங்களுக்கு எதிரான அசத்தியவாதிகளின் அடக்கு முறைகளையும் அராஜக நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டனர்.

அதே சமயம் தங்கள் சக்திக்குட்பட்டு சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அன்றைய கால கட்டத்தில் தத்தமது வீடுகளில் கொள்கைப் பிரச்சாரத்திற்காகவும் குர்ஆன் வகுப்புக்காகவும் கொள்கைவாதிகள் கூடிய பொழுது வரம்பு மீறிய அசத்தியவாதிகள் வீடு புகுந்து தாக்குதல் தொடுத்தனர். சொந்த வீடுகளில் சின்னஞ்சிறு கூட்டத்திற்கே கொள்கைவாதிகள் அன்றைக்கு எதிர்ப்பலைகளையும் எரிமலைகளையும் சந்தித்தனர். அவர்களுக்கு அன்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் தெருமுனைக் கூட்டம் என்பதெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. போராட்டம் கற்பனை செய்யாத முடியாத ஒன்றாக இருந்தது.

அல்லாஹ்வின் அருளால் ஜமாஅத் வளர, வளர மர்கஸுகள் பெருகப் பெருக நமது ஜமாஅத் மக்கள் சக்தி கொண்ட பேரியக்கமாகப் பரிணமித்தது. இடஒதுக்கீடு கோரிக்கைக்காக வேறு எந்த ஓர் இயக்கமும் ஜமாஅத்தும் கூட்ட முடியாத அளவிற்கு இலட்சக்கணக்கில் மக்களை சங்கமிக்கச் செய்து சரித்திரத்தையும் சாதனையையும் படைத்தது. கோட்டையில் நமது குரல் எதிரொலிக்கும் அளவிற்கு நமது அமைப்பிற்கு ஓர் அடையாளத்தை மட்டுமல்ல! அங்கீகாரத்தையும் அல்லாஹ் தந்தான்.

அதன் விளைவு என்ன? நமது ஜமாஅத்தில் ஒரு மாநிலப் பொறுப்பாளரோ அல்லது பேச்சாளரோ கைது செய்யப்பட்டு விட்டால் குறைந்த பட்சம் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக அல்லது அடுத்த நாளுக்குள்ளாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது போன்ற ஓர் எதிர்பார்ப்பு கொள்கைச் சகோதரர்களிடத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்றது.ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள்.பேச்சாளர்கள் யாரும் சிறைவாசத்தை

அனுபவிக்கக் கூடாது; சோதனையின்றியே நமது கொள்கைப் பயணம் சொகுசாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் ஏற்பட்டு விட்டதாகவே அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அப்படி ஓர் எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலும் இருக்கும் கொள்கைச் சகோதரர்களுக்கு அன்றைய காலத்தில் பசுமரத்தில் ஆணியடித்தாற்போல் பதிய வைத்த மேற்கண்ட குர்ஆன் வசனத்தையும் தூதர் (ஸல்) அவர்கள் கொள்கைப்பிடிமான

ஹதீனையும் மருந்தாக இப்போது இங்கே

மறுபதிவு செய்து கொள்கின்றோம்.

அத்துடன் இறைத்தூதர் யூசுஃப் நபி (அ) அவர்களின் சிறை வாழ்க்கையையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

அவ்விருவரில் யார் விடுதலையடைவார் என எண்ணினாரோ அவரிடம் “உன் எஜமானிடம் என்னைப் பற்றிச் சொல்வாயாக!” என்று (யூஸுஃப்) கூறினார். ஆனால் தன் எஜமானிடம் சொல்வதை விட்டும் அவரை ஷைத்தான் மறக்கச் செய்தான். எனவே சில ஆண்டுகள் அவர் சிறையிலேயே தங்கியிருந்தார்.

(அல்குர்ஆன்: 12:42)

“அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று மன்னர் கூறினார். தூதுவர் யூஸுஃபிடம் வந்தபோது, “உமது எஜமானிடம் திரும்பிச் சென்று, ‘தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன?’ என்று அவரிடம் கேட்பீராக! அப்பெண்களின் சதியை எனது இறைவனே நன்கறிந்தவன்” என்று கூறினார்.

(அல்குர்ஆன்: 12:50)

யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க) அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: (புகாரி: 3372)

ஏகத்துவ அழைப்புப் பணி என்றாலே எல்லா நேரமும் ராஜ மரியாதை கிடைத்துவிடாது. அடி உதை, ஊர் நீக்கம், சிறைவாசம் என்று எண்ணற்ற சோதனைகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த சோதனைகளைத் தாண்டியே சொர்க்கம் செல்ல முடியும் என்பது தான் மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் உணர்த்தும் உண்மையாகும்.