13) ஜுவைரிய்யா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 36

விதவைப் பெண்மணி

திருமணத்தின் போது நபியின்      வயது 60

நபியுடன் வாழ்ந்த காலம் சுமார் 4 வருடம்

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு முஸ்லிம்களின் பகைவர் கூட்டங்களில் ஒன்றான பனூ முஸ்தலக் கோத்திரத்தினருடன் போர் நடந்தது. இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். எதிரிகளில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டனர். கைதிகளில் ஒருவராகத் தான் ஜுவைரிய்யா (ரலி) இருந்தார்கள். இப்போரில் அவர்களின் கணவர் முஸாஃபிஉ என்பவர் கொல்லப்பட்டார்.

போரில் கிடைத்த கைதிகளை பங்கிடும் போது ஜூவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்.

ஸாபித் அவர்களோ குறிப்பிட்ட அளவு வெள்ளிக்காசுகளை கொடுத்து விடுதலையாகலாம் என்று கூறுகிறார்.

உடனே ஜூவைரிய்யா அவர்கள் நான் கொல்லப்பட்ட எதிரியின் மனைவி. சில வெள்ளிக்காசுகளை வழங்கி விட்டால் நான் விடுதலையாகலாம் என்று ஸாபித் கூறுகிறார். நான் விடுதலை பெற எனக்கு உதவி செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்களிடம் முறையிட நபி ஸல் அவர்கள் உன்னை விடுதலை செய்து நானே திருமணமும் செய்து கொள்கிறேன் என்கிறார்கள்.

இதை அங்கீகரித்து ஜூவைரிய்யா அவர்களுக்கும் நபி ஸல் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.

நபி (ஸல்) அவர்கள் ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் புரிந்த செய்தி மற்ற நபித்தோழர்களிடம் எட்டியபோது நபி (ஸல்) அவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமையாக வைத்துக் கொள்வது? என்ற எண்ணத்தில் கைதிகளாக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து விட்டனர்.

“தம் கூட்டத்தினருக்குப் பெரும் பேருபகாரம் செய்த பெண்ணாக ஜுவைரிய்யாவைத் தவிர வேறு எவரையும் நான் கண்டதில்லை” என்று ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள்.

பார்க்க: இப்னு ஹிப்பான், 4055, அல்முன்கதா இப்னுல் ஜாரூத் 705, அல்இஸாபா 11002

ஸாபித் பின் கைஸ் அவர்களால் விற்கப்படுகிற நிலையில் உள்ள பெண்ணைத்தான் நபி ஸல் அவர்கள் விடுதலையாக்கி திருமணம் செய்துள்ளார்கள். எதிரியின் மனைவி, எதிர்க்கூட்டத்தின் தலைவி என்ற நிலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்கிற போது அவர்களது கூட்டத்தாரும் விடுதலை செய்யப்படும் நிலை உண்டாகிறது.

இச்சை, கவர்ச்சி போன்ற காரணங்களுக்காக திருமணம் செய்திருந்தால் கைதிகள் பங்கு வைக்கப்படுகின்ற போதே நபி ஸல் அவர்கள் ஜூவைரிய்யா அவர்களை தன் வசம் எடுத்திருக் கொண்டிருக்க முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

விரும்பி திருமணம் செய்யப்படும் நிலையில் ஜூவைரிய்யா இருந்திருந்தால் ஸாபித் பின் கைஸ் அவர்களே திருமணம் செய்திருப்பார்கள். சில வெள்ளிக்காசுகளுக்கு விற்கும் நிலைக்கு சென்றிருப்பார்கள்.

அவர்களை விடுவித்து திருமணம் செய்ய போட்டி போடும் நிலையும் இல்லை.

எனவே இந்த திருமணத்திற்கு ஒருபோதும் பெண்கள் மீதான ஆசை என்ற காரணத்தைக் குறிப்பிட இயலாது.