11) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 35

விவாகரத்து செய்யப்பட்டவர்

திருமணத்தின் போது நபியின் வயது 59

நபியுடன் வாழ்ந்த காலம் 5 வருடம்

இவர் நபியின் மாமி மகளாவர்.

தனது மாமி மகளுக்கு தன்னுடைய வளர்ப்பு மகனை நபி ஸல் அவர்கள் திருமணம் முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் இல்லற வாழ்வு சுமூகமாக இல்லை. இருவரின் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடு அதிகரித்த தால் திருமண வாழ்வு முறிந்தது.

அதனால் வாழ்க்கை இழந்து நிற்கிற தனது மாமி மகளுக்கு தானே மறுவாழ்வு அளித்தார்கள்.

அன்றைய காலத்தில் வளர்ப்பு மகனை சொந்த மகனாகவே பார்க்கும் சூழல் இருந்தது. வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்வது கூடாது என்ற எண்ணத்தில் அம்மக்கள் இருந்தார்கள்.

மக்களின் இந்த தவறான எண்ணத்தை போக்கும் விதமாக நபியின் இந்த திருமணம் அமைந்தது.

வளர்ப்பு மகன் சொந்த மகனாக மாட்டான். எனவே வளர்ப்பு மகனின் மனைவி மருமகளாக மாட்டார் எனும் இறை சட்டத்தை தெளிவுபடுத்தும் விதமாகவும் இந்த திருமணம் அமையப்பெற்றுவிட்டது.

இது இறைவனின் உத்தரவுப்படியே நடைபெற்ற திருமணம் ஆகும்.

திருக்குர்ஆன் இதற்கு சான்றளிக்கின்றது.

ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:37)

பெண்கள் மீதுள்ள மோகத்தினால் திருமணம் செய்வதாக இருந்தால் துவக்கத்திலேயே தனது மாமி மகளை நபி ஸல் அவர்கள் திருமணம் செய்திருக்கலாம். யாரும் அதை கேள்விக்குள்ளாக்கியிருக்க மாட்டார்கள்.

இருவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தார்கள். அந்த இல்லற வாழ்வு சரியாக அமையாத காரணத்தினால் தானே முன்வந்து வாழ்வளித்துள்ளார்கள்.

இதில் மோகம், இச்சை என்ற பேச்சுக்கு துளியும் இடமில்லை. பார்க்க (முஸ்லிம்: 2798), (அஹ்மத்: 12554)