02) விமர்சனத்தின் அளவுகோல்
ஒருவரின் செயலை விமர்சிக்கும் முன் அவரின் காலத்திலுள்ள நடைமுறை என்ன என்ற தெளிவான பார்வையும் விருப்பு வெறுப்பற்ற சரியான மனநிலையும் இருத்தல் அவசியமாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபரல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் செயலை அக்காலத்திய சூழலைப் புறந்தள்ளிவிட்டு, தற்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தால் அது நேர்மையாக இருக்காது.
பழங்காலத்தில் கூழோ கஞ்சியோ குடித்து தான் வாழ்க்கையைக் கழித்தார்கள். அதுதான் அப்போது பிரதான உணவாக இருந்தது.
இந்த நூற்றாண்டைச் சார்ந்த ஒருவர். ‘என்னவொரு கஞ்சத் தனம், வேறு நல்ல உணவை உட்கொள்ளலாம் அல்லவா?’ என்று விமர்சித்தால் அது முறையாகுமா?
அன்றைய காலகட்டத்தில் நவீன மருத்துவ முறைகள் இல்லை. பல ஊர்களில் மருத்துவமனைகளே கிடையாது. வீட்டில் தான் மருத்துவம் செய்து வந்தார்கள்.
‘என்னவொரு காட்டுமிராண்டித்தனம், உயிர் மேல் அக்கறையற்று இருந்துள்ளார்களே!’ என்று இன்றைய காலத்தில் உள்ளவர் கூறினால் அது ஏற்புடையதா?
அது போலத்தான் நபிகள் நாயகம் அவர்கள் பல திருமணம் செய்துள்ள காரணத்தால் அவர்கள் மீது பழி சுமத்தும் முன்பு அந்தக் காலத்து நடைமுறை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.