01) முன்னுரை
உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்.
இன்றைய தேதியில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
நிற மொழி பேதமின்றி. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
மேலை நாடுகளின் பல முக்கிய நகரங்கள் கூட பள்ளிவாசல்களால் நிறைந்து திணறும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வழியேதுமில்லையா? என விழிபிதுங்கி நிற்கும் எதிரிகள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையில் பொய்யெனும் சேற்றை வாரி இறைத்தார்கள்: இறைக்கின்றார்கள்.
. இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது
. பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது
. முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது
என்றெல்லாம் பல்வேறு பொய்களை அள்ளி வீசினர்.
இவர்கள் கூறும் அத்தனை பொய்களையும் தாண்டி இஸ்லாம் எழுச்சி நடைபோடுகிறது எனில் உண்மையின் வலிமை அது!
காரிருள் கிழித்து, கதிரவன் தனது வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சுகின்ற போது அதன் முன்னே இருளால் தாக்குப்பிடிக்க முடியாதல்லவா?
அதுபோலவே இஸ்லாமிய மார்க்கத்தில் பொதிந்துள்ள உண்மை வெளிப்படும் போது பொய்கள் தானாகவே விலகிவிடுகிறது.
இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்படும் மக்களின் ஆர்வத்தைப் பொய்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு முன்வைக்கப்படும் அவதூறுகளில் முக்கியமானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிவைத்துச் சொல்லப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும்.
. முஹம்மத் நபி, பெண்கள் மீது மோகம் கொண்டவர்
. பெண்கள் மீது கொண்ட மோகத்தினால் தான் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை முஹம்மத் திருமணம் செய்தார்
. சிறுமியைத் திருமணம் செய்து கொண்டார்
இவ்வாறெல்லாம் கூறி, தங்கள் குற்றச்சாட்டை வலுவாக்க முயற்சிக்கின்றனர்.
எந்தெந்த வகையில் இந்த நச்சுக் கருத்தை மக்களிடையே பரப்ப இயலுமோ அதையெல்லாம் செய்கின்றனர்.
அமெரிக்காவின் ஜில்லேண்ட் போஸ்ட் பத்திரிக்கை நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கார்ட்டூன். டென்மார்க் பத்திரிக்கை, பிரான்ஸின் சார்லி ஹெப்டோவின் கார்ட்டூன்கள், இன்னோஸன்ஸ் ஆப் முஸ்லிம் எனும் ஆவணப்படம் என அத்தனை முயற்சிகளின் நோக்கமும் ஒன்று தான்.
முஹம்மத் (ஸல்) அவர்களை வீழ்த்த வேண்டும். எப்படியேனும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பெண்கள் மீது மோகம் கொண்டவராக மக்கள் மனதில் பதிய வைத்து விட வேண்டுமென பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நயவஞ்சகர்கள் பரப்பும் இத்தகைய அவதூறுகளுக்கு சில அப்பாவிகளும் பலியாகி விடுகின்றனர்.
முஹம்மத் அவர்களுக்கு பெண்கள் மீது அவ்வளவாக ஆசை எதுவும் இல்லை என்றால். எதற்காகப் பத்துக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
குறிப்பாக, சிறுமியை ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
வறண்ட பாலைவனத்தில், எழுத்தறிவில்லாத சமூகத்தில் பிறந்து, ஆடு மேய்ப்பவராக வளர்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபர் இத்தனை வலிய மாற்றங்களை வரலாற்றில் ஏற்படுத்த முடியுமா? என்று வியக்குமளவுக்கு நபிகள் நாயகத்தின் வாழ்வு அமைந்துள்ளது.
உலகில் எத்தனையோ தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தில் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள். ஆனால் அவர்களால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தீண்டாமை இல்லாத சமூகத்தை உருவாக்கி காட்டினார்கள்.
நிற, இன, மொழி பேதங்களைக் கடந்த, சாதிய அடையாளங்களைத் துறந்த, தங்களின் முன்னோர் எந்த சாதி என்பது கூடத் தெரியாத பல கோடி இஸ்லாமியர்கள் உலகில் உள்ளனர். இப்படியான தீண்டாமையற்ற சகோதரத்துவக் கட்டமைப்பு நபிகள் நாயகம் ஏற்படுத்திய மிகப்பெரும் புரட்சியாகும்.
மதுவிலேயே ஊறித் திளைத்த ஒரு சமூகத்தை மதுவின் வாடை கூட இல்லாத அளவுக்குப் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மாற்றிக் காட்டியதும் நபி (ஸல்) அவர்களின் மிகப்பெரும் சாதனையாகும்.
வலியவன் எளியவன் பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி என்பதை அமல்படுத்திய நபிகளாரின் சிகரம் தொட்ட நேர்மையை யாரும் சிலாகிக்காமல் இருக்க முடியாது.
நபிகள் நாயகம் ஆட்சியில் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்த யூதர்கள் கூடத் தங்களின் பிரச்சனையை நபிகளாரிடம் முறையிட்டுத் தீர்வு பெற்றுக் கொள்ளும் அளவு சமூகநீதி அடிப்படையில் நபிகளாரின் ஆட்சி முறை அமைந்திருந்தது.
அதிகாரத்திற்கு வந்து விட்ட பிறகு மலை போல் சொத்துக்களைக் குவிக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் தனக்கென்று மதிக்கத்தக்க எந்தச் சொத்தையும் சேர்க்காமல் சிறிய மண் வீடு, விரிப்புகள் இல்லாத சாதாரண பாய் என ஆடம்பரமற்ற வாழ்வை வாழ்ந்தது…
தான் விட்டுச் செல்லும் எந்தச் சொத்திலும் தன் குடும்பத்திற்கு உரிமையில்லை. அவை யாவும் பொதுவுடமை என்று அறிவித்துவிட்டுச் சென்ற நபியின் நேர்மை மற்றும் எளிய வாழ்வு…
அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வு சாமானிய மக்களைப் பாதிக்கும் போது, அதுகுறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாத, அலட்சியவாத ஆட்சியாளர்கள் இருக்கின்ற போது குடிமக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மறைந்த நபிகளின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு…
இப்படி நபிகளுடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களால் பலரும் ஈர்க்கப்படும் வேளையில், நபிகளாரின் திருமணம் குறித்து திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகளின் அடிப்படையில் ஒருசிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இவர்களின் சந்தேகத்திற்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வது அவசியம். எனவே நபிகள் நாயகம் பல திருமணங்களை ஏன் செய்தார்கள்? நபிகள் நாயகம் அவர்களைப் பெண்கள் மீது மோகம் கொண்டவராகச் சித்தரிக்கும் கயவர்களின் குற்றச்சாட்டு உண்மையா? அதற்கான விளக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.