இல்லறம் இனிக்க இனிய குர்ஆன்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இயற்கையாக மனிதன் சமுதாயத்தோடு குறிப்பாக குடும்பத்தோடு ஒன்றி வாழக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டுள்ளான். கூட்டாக சமூகத்தை சார்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்போடு வாழவே மனிதன் பழக்கப்பட்டுள்ளான். இவ்வாறு அவன் வாழும் நேரத்தில் அக்குடும்பத்தில் ஏற்படும் துன்பங்களை அதனால் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை நீக்க மனிதன் முயற்சி செய்தவனாக இருக்கின்றான். அதில் பல சந்தர்பங்களில் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான்.

இஸ்லாமிய மார்க்கம் எந்தப் பிரச்சனையில் தலையிட்டாலும் அதில் முழுமையாகவும், தெளிவாகவும், அறிவுக்குப் பொருத்தமாகவும், நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அணுகக் கூடிய ஒரு மார்க்கம்.

கடந்த காலங்களிலிருந்து தற்போதைய நிலையைக் கவனிக்கும் போது குடும்ப அமைப்பு நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. இப்படியெல்லாம் குடும்பங்கள் சீரழிவை நோக்கிச் செல்லக் காரணம், முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்களைத் தெரியாமல் அல்லது அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படாமலேயே இருப்பது தான். திருமறை குர்ஆன் மூலமாக, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து விளங்கி செயல்படுத்தினால், இல்லறம் இனிப்பது நிச்சயம்.

குடும்ப உறவுக்கு இஸ்லாம் சொல்லும் முக்கிய காரணம்:

எல்லா உயிரினங்களும் ஆண், பெண் என்கிற இனக்கவர்ச்சியின் மூலம் பெருகக் கூடியதாக இருந்தாலும், மனிதனுக்கு மட்டுமே குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. குடும்ப உறவில் சந்ததிகளை உருவாக்குவது முக்கிய முதல் காரணமாக அமைகின்றது. இதை அல்லாஹ் தனது திருமறை குர் ஆனில் குறிப்பிடுகிறான்.

“மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.”  (அல்குர்ஆன்: 4:1).

இரண்டாவதாக இந்த குடும்ப அமைப்புக்குள் மனிதன் வாழும் போது அது அவனை தவறான பாதையில் செல்வதை விட்டும் தடுக்கின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். “யாருக்கு திருமணம் செய்து பராமரிக்க சக்தி இருக்கிறதோ, அவர்கள் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் பிறர் மனை நோக்குவதை விட்டும், கற்பையும் காக்க கூடியதாக உள்ளது”. மேலும் மனிதன் மன அமைதி பெறுவதற்கு கணவன் மனைவி குடும்ப உறவை ஏற்படுத்தியதாக கூறுகிறான்

“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்”

(அல்குர்ஆன்: 7:189).

இந்த காரணங்களை மனித சமுதாயம் விளங்கினால் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் விளங்கும்.

குடும்ப அமைப்பின் நன்மைகள்:

அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் இயற்கை நியதியாக இருக்கின்ற குடும்ப அமைப்பில் மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப அமைப்பின் மூலம் நமது உடலுக்கும், மனதிற்கும், ஏன் இந்தச் சமூகத்திற்கும் கூட நன்மை கிடைக்கின்றது.

குடும்பம் என்றாலேயே ஒரு ஆண், பெண்ணிலிருந்து தான் துவங்கும். கணவனாக இருப்பவன் தந்தையாக மாறுவான். மனைவியாக இருப்பவள் தாய் என்ற அந்தஸ்தை அடைகிறாள். அதே போன்று இந்தக் கணவன், மனைவிக்குத் தாய், தந்தை இருந்தால் அவர்கள் தாத்தா பாட்டி என்ற உறவாகின்றார்கள். அவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்ற உறவுகள் இருந்தால் மாமன், அத்தை என்ற உறவு முறைக்குள் வருவார்கள். ஆக, குடும்பம் என்ற அமைப்பை வைத்துப் பார்த்தால் தான் ஒரு சமூகம் உண்டாகும். கோத்திரம் உண்டாகும். இப்படி அமையும் அமைப்பு தான் மனிதன் நெருக்கடியான சூழ்நிலை அடைகின்ற போது நெருக்கமாக வந்து நிற்பார்கள்.

குடும்ப உறவு வேண்டாம் என்பவர்கள் அவர்களது இளமை முறுக்கில் எல்லாம் சரியாகத் தெரிந்தாலும் பிற்காலத்தில் உடல் மற்றும் மனநோய்களுக்கு ஆளாக்கப்படுவதோடு அனாதைகளாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

குடும்பத்தை நாசமாக்கும் தவறான உறவுகள்:

கணவன் மனைவி என்கிற உறவை இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.

“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”.   (அல்குர்ஆன்: 2:187).

ஆடையினால் நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு, தன்மானம், தூய்மை, கண்ணியம் பேனல், கற்பொழுக்கம் போன்றவைகளை இல்லறம் என்ற உறவு மூலம் பரஸ்பரம் கணவன் மனைவி பேண வேண்டும் என திருக்குர்ஆன் அறிவுருத்துகிறது.

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிய பின்னர் அதன் அடிப்படையை சரிவர புரியாமல் பலர் அதனை நாசமாக்கி விடுகின்றனர். இதற்குக் காரணம், ஒரு பெண்ணின் கணவனாக இருந்து கொண்டே தவறாகப் பிற பெண்களிடம் தவறான பழக்கம் கொள்வதும், ஒரு ஆணுடைய மனைவியாக இருந்து கொண்டே பிற ஆண்களிடம் தவறான பழக்கம் கொள்வதுமேயாகும். எப்போது ஒருவன் மனைவியல்லாத வேறொரு பெண்ணின் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடுகிறானோ அப்போது அவனுக்கு மனைவி அசிங்கமாகத் தான் தெரிவாள். அதே போன்று கணவல்லாதவனின் பால் கவனத்தைத் திருப்பிய பெண்ணுக்கு அவளது கணவன் அருவருப்பாகத் தான் தெரிவான்.

அறிவியலின்படி கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பில் பெறும் இல்லறத்தினால் நிம்மதி கிடைக்கிறது. மன உளைச்சலுக்கும் உடற்கூறு பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இல்லறம் பயன்படுகிறது. ஆனால் வேலி தாண்டிச் செல்கிறவர்களுக்கு அந்த மருந்தே விஷமாக மாறிவிடுகிறது. அதாவது நல்லதைக் கெட்டதாக்கி விடுகிறார்கள். மருந்து என்பது நோயைக் குணப்படுத்துவதற்குத் தான். அந்த மருந்தே விஷமாகவும் நோயாகவும் மாறிவிட்டால் அதனால் என்ன பயன்?. தாம்பத்தியம் என்ற மருந்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் விஷமாக்கிக் கொண்டார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு தனது மனைவியிடமும் சரியான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. எந்த வழியில் தவறாக தாம்பத்தியத்தைப் பெறுகிறானோ அங்கேயும் முழுமையான சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்காது. இதே நிலை தடம் மாறிச் செல்கின்ற பெண்களுக்கும் பொருந்தும்.

அதனால் தான் அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறும் போது விபச்சாரம் செய்யாதே என்று சொல்லாமல் “விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே” என்று எச்சரிக்கிறான்.

“விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது”.     (அல்குர்ஆன்: 17:32)

“வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!”     (அல்குர்ஆன்: 6:151)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூட கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது மூமினாக இருந்து கொண்டு விபச்சாரம்புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மதுஅருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, பிறரது பொருளை அபகரித்துக்)கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) –(புகாரி: 2475, 5578, 6772, 6782, 6810).

விபச்சாரம் செய்கின்ற போது ஒருவன் முஃமினாக இருக்கவே மாட்டான் என்று நபியவர்கள்சொல்லிக் காட்டுகின்றார்கள். அப்படியெனில் விபச்சாரம் செய்கின்ற போது மரணம் வந்தால்,நிச்சயமாக அவர் முஃமினாக இருக்கவே முடியாது. மரணிக்கிற போது முஃமினாக இல்லாமல்மரணித்தால் நரகத்திற்குத் தான் செல்வான். மேற்கண்ட விஷயங்களை வைத்து பார்க்கும் போது தவறான உறவு குடும்ப வாழ்வை சீரழிக்கும். மேலும் மறுமையில் இழிவான நிலையை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மஹ்ரமான உறவுகள்:

தவறான உறவுகளுக்கு முக்கிய காரணம் ஆண், பெண் தனியாக இருப்பது மற்றும் பெண்கள் தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டுவதற்கு இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை சரியான முறையில் விளங்காமல் / பின்பற்றாமல் இருப்பது ஒரு முக்கிய காரணமாக அமைந்து இருப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

யாரைத் திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுடன் தனியாக இருக்கலாம். இதை திருமறையில் அல்லாஹ் விளக்கி காட்டுகிறான்

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.        (அல்குர்ஆன்: 4:23)

மேலே சொல்லப்பட்ட இந்த உறவு முறைகள் தான் ஓர் ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்டவர்கள். இவர்களல்லாத மற்ற எந்த உறவு முறைகளாக இருந்தாலும் அவர்கள் அந்நியர்களாவர். அவர்களுடன் தனிமையில் பேசவோ, அமரவோ, பழகவோ கூடாது என இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது.

குடும்ப நிர்வாகம்:

பெண்களை விட ஆண்களுக்கு ஒருசில உயர்வுகள் உள்ளது என்று அல்லாஹ் திருமறை குர்ஆனில் சொல்கிறான். இதை மனித உடற்கூறு மற்றும் மனநிலை குறித்த ஆராச்சிகளும் உறுதி படுத்துகின்றன.

“சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்”         (அல்குர்ஆன்: 4:34)

ஆண்கள் பொருளாதாரத்தைச் செலவழிக்கிற காரணத்தினாலும், உடல் ரீதியாக மேலோங்கியவர்களாக இருப்பதினாலும் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்கின்றனர். ஆக இஸ்லாமியக் குடும்ப அமைப்பில், மனைவியைக் கவனிக்கிற எல்லாப் பொறுப்புகளும் ஆண்களைச் சார்ந்தது. இது இஸ்லாமியக் குடும்பத்தில் இரண்டாவது முக்கிய நிபந்தனையாகும்.

இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இஸ்லாமிய குடும்ப அமைப்பு எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் உலகத்தில் இந்தச் சட்டம் பலரால் மீறப்பட்டு வருகிறது. பெண்களை ஆண்கள் தான் கவனிக்க வேண்டும் என்பதை விளங்காமல், பெண்களைச் சம்பாதிப்பதற்கு அனுப்புகின்ற காட்சிகளை அன்றாடம் காண்கிறோம். பெண்களும் நமக்கு கணவன்மார்கள்தான் பொறுப்பாளிகள், அவர்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை விளங்கிக் கொள்ளாமல் நம் வயிற்றுக்கு நாம்தான் சம்பாதிக்க வேண்டும் என்று தவறாக விளங்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

வேறு வழியில்லாமல் அல்லது மார்க்கம் அனுமதித்த வழிகளில் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குத் தான் இஸ்லாம் அனுமதிக்கிறதே தவிர, மற்றபடி கணவன்மார்கள் பொறுப்பாளியாக இருந்தும் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தாந்தம் வெறும் வறட்டுச் சித்தாந்தமாகவே பார்க்க முடியும்.

மனைவியிடம் ஆலோசனை கேட்பது:

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. “நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை.

பெண்கள் கூறும் ஆலோசனைகளை செவி சாய்த்து கேட்க வலியுறுத்துகின்றது. சில நேரங்களில் அது நமக்கு நன்மையாகவே முடியும்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நபி(ஸல்) அவர்கள் மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களின் ஆலோசனையின் படி நடந்து கொண்டதால் தான் ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டார்கள். இந்த உடன்படிக்கையின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக அல்லாஹ் கூறுகிறான்

“(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்”.      (அல்குர்ஆன்: 48:1-3)

மனைவியை புரிந்து கொள்வது:

நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 5184)

இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள். பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி விடலாம். வளைந்தேயிருக்கிற எலும்பை நிமிர்த்தப் போனால் அது நிச்சயம் உடையத்தான் செய்யும். பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு மனைவியை நிர்வாகம் செய்தால், விட்டுக் கொடுத்துப் போனால் அவளிடம் இன்பத்தை அடையலாம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அவளிடம் கோணல் இருக்கத் தான் செய்யும் என்று நபியவர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் மார்க்கத்திற்குப் புறம்பானவைகள் இருந்தால், பாரதூரமான விஷயங்களாக இருந்தால் கண்டிக்க வேண்டுமே தவிர மற்றபடி குணங்களில் ஆண்களைப் போன்று பெண்களிடம் எதிர்பார்க்கவே கூடாது.

இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டி உள்ள வாழ்க்கை முறையை நாமும் விளங்கி பின்பற்றினால் இல்லறம் இனிக்கும் இல்லறமாக மாறும்!!!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.