12) முஹம்மது நபிக்கு சிலையில்லை
சாதாரண அரசியல் கட்சித் தலைவரே ஒரு தொண்டனுக்கு “இதய தெய்வமாக” ஆகி விடுகின்ற இந்த காலகட்டத்தில், மேற்கூறப்பட்ட பெருமைகளுக்கும் வியத்தகு பண்புகளுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து, ஒரு மிகப்பெரிய சித்தாந்தத்தையே உலகில் பிரச்சாரம் செய்து, கோடானு கோடியை தொடும் அளவிற்கு இன்றளவும் அவரை பின்பற்றக் கூடிய மக்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடவுளாக வழிபட்டிருக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்??
இன்றளவும் முஸ்லிம்களில் நபிகள் நாயகத்தை கடவுள் என்று நம்பியவர் ஒருவராவது இருக்கிறாரா?
அல்லது, மனிதர் தான் என சொல்லிக் கொண்டே, இறைத்தன்மை வழங்கப்பட்ட மனிதப் புனிதர்களாக இன்று எவரையெல்லாம் போலியாக காட்சிப் படுத்துகிறோமோ அப்படியான எந்தவொரு பண்பினையாவது நபிகள் நாயகம் கொண்டிருப்பதாக நாம் சொல்லியிருக்கிறோமா?
நிச்சயம் இல்லை.
இறைத்தன்மை இருப்பதாக நம்புவதை விடுவோம், அப்படிப்பட்ட மாமனிதருக்கு ஒரு சிலையை கூட இஸ்லாமிய சமூகம் வடித்தது கிடையாது.. அவரை இதுவரை உருவகப்படுத்தி கூட பார்த்தது கிடையாது என்பது எத்தனை பெரிய வியப்புக்குரிய விஷயம்?
முஹம்மது நபிக்கு 1400 ஆண்டுகளாக ஒரு சிலை கிடையாது. அவர் எப்படி இருப்பார் என்பது அவர் வாழ்ந்த காலத்து மக்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, அதன் பிறகு வந்த தலைமுறைக்கு தன்னை உருவகப்படுத்துவதை தடுத்து விட்டு மறைந்த மாமனிதர் அவர்.
உருவகப்படுத்துதல் என வரும் போது, அங்கே வழிபாடும் நம்மையறியாமல் வந்து விடும்.
நான் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான். என்னை கடவுளாக்கி விடாதீர்கள். கடவுளுக்குரிய எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது என்பதை போதனை செய்வதற்கு தான் முஹம்மது நபி இவ்வுலகில் இறைவனால் தேர்வு செய்யப்படவே செய்தார்கள் எனும் போது, தம்மையே இறைவனாக வணங்கப்பட வாய்ப்பளிக்கின்ற கடுகளவு காரிணியையும் முளையிலேயே கிள்ளி வீசி விடுவதில் மிகுந்த முனைப்பு காட்டினார் அவர்.
தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொள்ள விரும்பாத எந்த தலைவரையும் இன்றைய காலத்தில் பார்ப்பது அரிது.
தனெக்கென தனி அந்தஸ்து, தனெக்கான எழுந்து நிற்றல், தனது காலில் விழுதல், பொன்னாடை போர்த்துதல். ஆஹா ஓஹோ என புகழுதல் என, புகழுக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்று நாம் சொல்கிற போது, முஹம்மது நபியவர்கள் முற்றிலும் மாறுபட்ட தனித்த மனிதராக விளங்கியதோடு, இதையே ஒவ்வொரு மனிதர்களும் தன் வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும் என்று போதித்து விட்டு சென்றார்.
இன்றைய தகுதியற்றவர்களை புகழலாம் என்றால் முஹம்மது நபியை அதை விட ஆயிரம் தடவை புகழலாம். இவர்களுக்கு சிலை வைக்கலாம் எனில், அதை விட பல நூறு அதிக சிலைகளை முஹம்மது நபிக்கு வைக்கலாம்.
ஆனால், இஸ்லாத்தில் அத்தகைய தனி மனித வழிபாட்டுக்கு அறவே அனுமதியில்லை.
அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில், உலகில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்த மிகப்பெரிய மனிதர்கள் என பட்டியலிட்டு, அதில் முஹம்மது நபியையும் ஒருவர் என தேர்வு செய்து அவருக்கு அங்கே சிலை வடித்தார்கள்.
முஹம்மது நபியை நாங்கள் மனிதராக தான் மதிப்போமே தவிர, சிலை வைத்து வழிபாடு நடத்த மாட்டோம் என கூறி அதை அகற்ற செய்தது முஸ்லிம் சமூக மக்கள் தாம்.!
சிலை வடிப்பது மட்டுமல்ல, காலில் விழுவது மட்டுமல்ல, தம்மை வரம்புகள் கடந்து புகழ்வதைக் கூட தடுத்து விட்ட சென்ற மாமனிதர் அவர்.
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார்கள்.
நூல்: (அஹ்மத்: 12093)
ஆக, ஆன்மீகம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடை யிலானநேரடி தொடர்புடைய விஷயம். இறைத்தூதர்களாகவே இருந்தாலும், அவர்களையும் சாதாரண மனிதர் எனும் இடத்தில் வைத்தே இஸ்லாம் அவர்களை பார்க்கிறது. அவர்களுக்கே இறைத் தன்மை யை பெறுவதற்கோ அல்லது குறைந்தபட்சம், நம்மை இறைவனுடன் நெருக்கி வைப்பதற்கான அதிகாரமோ இல்லை என்பதில் உறுதியான புரிதல் வந்து விடுமானால், ஆன்மீகத்தின் பெயரால் நாம் வேறு எவரிடமும் ஏமாற மாட்டோம்.
காலமெல்லாம் ஜோசியத்தின் மூலம் நமது வருங்காலத்தை கணிப்பதாக கூறக்கூடியவர்கள், ஒரு காலும் தமது வருங்காலத்தை கணித்தவராக இருக்க மாட்டார். ஜோசியர் வாகன விபத்தில் பலி என பத்திரிக்கைகளில் செய்தி படிக்கிறோம்.
வருங்காலத்தை கணிக்கக் கூடியவர் என்றால் தனக்கு இந்த தேதியில் இந்த இடத்தில் விபத்து நிகழும் என்பதையும் சேர்த்தே அல்லவா கணித்திருக்க வேண்டும்? அப்படி கணித்திருந்தால் அவர் அந்த விபத்தை எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்க முடியுமே?
தன்னை குட்டி கடவுளாக காட்டிக் கொண்ட சாய் பாபாவை நாம் கேள்விபட்டிருக்கிறோம். வாயிலிருந்து லிங்கம் எடுத்துத் தருகிறேன், தலையிலிருந்து எலுமிச்சை எடுத்துக் காட்டுகிறேன் என மக்களை நம்ப வைத்து பல காலம் ஏமாற்றி வந்ததை பிபிசி தொலைக்காட்சி குழுமம் ஒரு முறை அம்பலப்படுத்தியது. ஏற்கனவே கைகளில் மறைத்து வைத்திருந்ததை தான் மக்கள் கவனிக்காத வேளையில் புதிதாக எடுப்பதை போன்று எடுத்துக் காட்டுகிறார் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு அவரது வண்டவாளங்களை தோலுரித்தது.
இன்னும் ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டு, இன்னொரு பக்கம் பெண் சல்லாபம், பணத்தாசை என சொகுசு வாழ்க்கை வாழும் பல போலிச் சாமியார்களைப் பற்றிய செய்திகளையும், மத போதகர்களின் உண்மை முகங்களையும் நாம் அனுதினமும் செவியுறுகிறோம்.
இறைவனின் பெயரை சொல்லி ஏமாற்றுகிற அளவிற்கு வேறு எந்த துறையிலும் இந்த அளவிற்கு பித்தலாட்டங்கள் இல்லை என சொல்கின்ற அளவிற்கு மத பேதமில்லாமல் எல்லா மதங்களிலும் போலி ஆன்மீகவாதிகள் நிறைந்து காணப்படுகின்றனர்.
மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறை தண்டனை பெறுகின்றனர்.
நாம் கொண்டாடும் சினிமா நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்த்தால், ஒழுக்கத்தை விரும்புகிற சாதாரண நடுத்த குடும்பம் கூட அருவருக்கத்தக்க வகையிலான இழிவுகளை கொண்டதாக அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது.
ஆக, ஒரு மனிதனின் தோற்றமோ, அவன் வகிக்கின்ற துறையோ, அவனது செல்வாக்கோ, அவனுக்கிருக்கும் சமூக அங்கீகாரமோ எந்த வகையிலும் சக மனிதனை விட மேன்மைக்குரியவராக அவனை ஆக்கி விடாது என்பதற்கு இவையெல்லாம் சான்றாக இருக்கின்றன.