11) தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்த நபிகள் நாயகம்

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

இவ்வகையான தனிமனித துதிபாடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்:

“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டது போல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (நூல்: புகாரி)

மேலும் ஒரு தனி மனிதனை பின்பற்றக் கூடியவர்கள் எத்தகைய பெரும்பான்மையுடையவராக இருந்தாலும் அவர்களைப் போன்று நாம் நடக்கக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.

பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தைத் தவிர எதையும் பின்பற்றவில்லை. அவர்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 6:116)

தனிமனித வழிபாடு மூலம் மக்களிடத்தில் பெரும் புகழையும் அந்தஸ்தையும் பெற்றவர்களோ அந்த மக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.

பாதிரிகளும், சன்னியாசிகளும், இன்னபிற போலி அவ்லியாக்களும் தங்களை தெய்வீகத் தன்மை பெற்றவர்களாக உயர்த்திக் கொண்டதன் நோக்கம் இதுவே என்பதை இது உணர்த்துகிறது.

இறைநம்பிக்கை கொண்டோரே! (வேதமுடையோரிலுள்ள) அறிஞர்களிலும், துறவிகளிலும் அதிகமானவர்கள் மக்களின் பொருட்களைத் தவறான முறையில் உண்கின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். “யார் தங்கம், வெள்ளியைச் சேர்த்து வைத்து, அதை அல்லாஹ்வின் பாதையில் செலவிடவில்லையோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:34)