09) தனி மனித வழிபாடு
தனிமனித வழிபாடு என்பது ஒருவரிடம் இருக்கும் அபரிமிதமான திறமைகள், அவனது கல்வியறிவு, சிறந்த பேச்சாற்றல்,எதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் என
சாதாரண மக்களிடம் காணப்படாதவைகளாக அந்த மனிதரிடம் தனித்துவமாக இருப்பதை சிறப்பிப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை அளவு கடந்து புகழ்வதன் மூலம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்களை அதிகமாகப் புகழ்வதன் மூலம் சிலர் அவருக்கு கடவுள் தன்மையைக் கொடுத்து அவர் கூறுவதையெல்லாம் அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்களிடத்தில் முழுமையாக சரணடைந்து விடுகின்றனர்.
அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அரசுசார் அலுவலகங்கள் வரை இன்று தனி மனித புகழ் பாடுதல் தலை விரித்தாடுகின்றன.
எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு மனிதரை, ஏதோ ஒரு வழியில் வழிபட்டு வருகின்ற அவல நிலையினை காண்கிறோம்.
ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க மாமன்னன் வாழ்க, நின் கொற்றம் வாழ்க என வாழ்த்திய அரச காலம் முதல் இன்று தங்கத்தலைவர் வாழ்க, தானைத்தலைவர் வாழ்க, இதய தெய்வமே வருகஎன்று அரசியலிலும், மக்கள் திலகம், சூப்பர்ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார் என்று திரைத்துறையிலும், எங்களின் குருவே, ஆன்மாவே, சித்தரே என்று ஆன்மீகத் துறையிலும், அதிரடி ஆட்டக்காரர், ரன் குவிக்கும் இயந்திரம், கிரிக்கெட் கடவுள் என விளையாட்டுத் துறை வரை தனி மனித வழிபாடு எங்கும் வியாபித்து இருக்கிறது.