04) ஜிப்ரயீலை இழிவுபடுத்தும் ஹுசைன் மவ்லிது
ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபு, பொய்யான ஹதீஸ்கள் மண்டிக் கிடக்கும் – ஷியாக்களின் போலிச் சரக்குகள் நிரம்பி வழியும் சவக்கிடங்கு என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஷியாக்களின் மறுபதிப்பாக இந்த மவ்லிதுக் கிதாபு அமைந்திருக்கின்றது. ஹதீஸ்கள் என்ற பெயரில் ஷியாக்களின் கதைகளை அளந்து விட்டிருக்கின்றாôர்கள். அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு வருகிறோம்.
அந்த அடிப்படையில் இவ்விதழில் ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள மேலும் சில பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம்.
இமாம் ஸஃபவிய்யி அறிவிக்கின்றார்: (இமாம் என்று அடைமொழியிட்டிருக்கும் இவர் ஒரு ஷியா புறம்போக்கு என்பதை இந்தக் கதையைப் படித்தவுடன் அறிந்து கொள்ளலாம்.)
மற்றொரு தடவை ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து ஓர் ஆப்பிளைக் கொண்டு வந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் வைத்தார்கள். ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்தனர். அவ்விருவருமே தங்களுக்குத் தான் ஆப்பிளைத் தரவேண்டும் என்று கேட்டனர். அப்போது ஜிப்ரயீல், “அவ்விருவரையும் மல்யுத்தம் செய்ய விடுங்கள். வெற்றி பெறுபவருக்கு ஆப்பிள் கிடைக்கும்” என்று கூறினார். ஆனால் ஜிப்ரயீல் ஹுஸைனுடனும், நபி (ஸல்) அவர்கள் ஹஸனுடனும் இருந்தார்கள். அவ்விருவரில் எவரும் மற்றவரை வெற்றி கொள்ளவில்லை. உடனே ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து மற்றோர் ஆப்பிளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இது தான் ஹதீஸ் என்ற பெயரில் ஹுஸைன் மவ்லிதில் அளந்து விடப்பட்டுள்ள அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு ஆகும். இந்தப் பொய்ச் செய்தி, ஹதீஸ் நூற்களில் எதிலும் இடம்பெறவில்லை. ஷியாக்களுடைய நூற்களில் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது.
ஜிப்ரயீல் (அலை) அவர்களின் முக்கியப் பணி அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது தான்.
“நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் உண்மையுடன் இறக்கினார்” என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆனை இறக்குகின்ற ஆற்றல்மிகு ஜிப்ரயீலை, ஹஸன் ஹுஸைனுக்கு விளையாட்டுக் காட்டுவதற்கு ஆப்பிள் கொண்டு வருகின்ற அடிமைச் சேவகராக இந்த ஷியாக்கள் சித்தரிக்கின்றனர்.
ஸஃபவி என்ற அனாமதேயம், பொய் சொல்லும் ஷியா புளுகித் தள்ளியிருக்கின்றது. இது ஹதீஸ் என்ற பெயரில் ஹிகாயத் எனும் கதையாகவும், கவிதையாகவும் இடம்பெற்றிருக்கின்றது.
சாம்பிராணி போட்டு, சந்தனம் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி இந்தக் கதைகளை வணக்கம் என்று நம்பி ஓதுகின்றார்கள் என்றால் இவர்கள் ஷியாக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
ஹஸன், ஹுஸைனுக்காக ஏதோ மண்ணில் இருக்கும் பழத் தோட்டத்திலிருந்து ஆப்பிள் பழங்களைப் பறித்து வருவது போல் காட்டுகின்றனர். அல்லாஹ் தனது கட்டளைப்படியே ஜிப்ரயீல் இறங்குவதாகத் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்.)
ஹஸன், ஹுஸைன் விளையாடுகின்ற இந்த விளையாட்டை அல்லாஹ், ஜிப்ரயீல், முஹம்மது (ஸல்) ஆகியோர் வேலையில்லாமல் உட்கார்ந்து ரசிப்பது போன்று இந்த ஷியாக்காரன் குறிப்பிடுகின்றான்.
வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.
இந்த வசனத்தில் விளையாடுவது தனது வேலையல்ல என்று அல்லாஹ் தெளிவாக அடித்துச் சொல்லிவிடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொடர்ந்து பசியும் பட்டினியுமாகவே கிடந்திருக்கின்றார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 5416)
அப்போதெல்லாம் ஆப்பிள் கொண்டு வராத ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இந்த விளையாட்டுக்காக ஆப்பிள் கொண்டு வந்தார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?
சுவனத்தின் பழங்களைச் சாப்பிடுவது என்பது சாதாரணமான காரியமல்ல.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(தப் பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1052)
இந்த ஹதீஸ் சுவனத்துக் கனியின் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொல்கின்றது. சுவனத்தின் பழங்களை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் இந்த உலகில் சாப்பிட்டதில்லை. சுவனத்தின் உணவு மறுமையில் தான் கிடைக்குமே தவிர இந்த உலகில் அல்ல! இதை யாரும் இவ்வுலகில் அனுபவிக்கவில்லை, சுவைக்கவுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்‘ என்னும் (32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 3244)
அப்பேற்பட்ட கனியை, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஏதோ ஹஸன், ஹுஸைனின் எடுபிடி போன்று சுவனத்திலிருந்து எடுத்து வந்ததாக இந்தப் பொய்யர்கள் அளக்கின்றார்கள். இவர்கள் தங்களது ஐந்து கடவுள்கள் மீது கொண்டுள்ள காதல், வெறியானது மலக்குகளின் மாபெரும் தலைவரான ஜிப்ரயீலின் மரியாதை, மதிப்பைத் தெரியாத அளவிற்குக் கண்ணை மறைக்கின்றது.
இவர்களுடைய மார்க்கம் முழுவதும் இந்த ஐந்து கடவுள் என்ற மையப்புள்ளியைக் கொண்டு தான் அமைந்திருக்கின்றது.
தமிழக ஆலிம்கள் இந்த மவ்லிதைப் பற்றி ஒருபோதும் கண்டுகொள்வது கிடையாது. கண்டிப்பதும் கிடையாது. மாறாக இவர்களும் அந்த சங்கீத சபையில் உட்கார்ந்து சங்கையாக ஓதுகின்றனர்.
இவர்கள் கால்வாசி, அரைவாசி ஷியாக்கள் கிடையாது. முழுமையான ஷியாக்கள் என்பதற்கு ஹுஸைன் மவ்லிது சரியான ஆவணமாக அமைந்துள்ளது.
தமிழக ஆலிம்களில் 99 சதவிகிதத்தினர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விஷயத்தில், எது சரியான ஹதீஸ்? எது பலவீனமான ஹதீஸ் என்று பிரித்துப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறினால் நரகமே தண்டனையாகக் கிடைக்கும் என்ற எச்சரிக்கையைப் பற்றிக் கடுகளவு கூட அச்சமில்லாமல் சகட்டுமேனிக்குத் தங்கள் சொற்பொழிவுகளில் நாவில் வருவதையெல்லாம் நபிமொழிகள் என்று அடித்து விடுகின்றனர். இதிலிருந்து இவர்கள் தங்களை ஷியாக்களின் மறுவடிவம் என்பதை ஒளிவு மறைவில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.
இந்த அபத்தங்களைத் தாங்கிய ஹுஸைன் மவ்லிது கூறும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் பாத்திமா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடமிருந்து ஹஸனும் ஹுஸைனும் காணாமல் போய்விட்டனர். அவர்கள் இருக்கும் இடம் எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னார். உடனே ஜிப்ரயீல் (அலை) வந்து, “அவ்விருவரும் இன்ன இடத்தில் உள்ளனர். அவ்விருவரையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் ஒரு மலக்கை நியமித்து விட்டான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வந்து, அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியவர்களாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருவரை தமது வலது புஜத்திலும், மற்றொருவரை தமது இடது புஜத்திலும் சுமந்து கொண்டு வந்தார்கள்.
அபூபக்ர் (ரலி), நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ஒரு பையனை என்னிடத்தில் கொடுங்கள்; நான் சுமக்கிறேன் என்று வாங்கிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்விருவரின் வாகனம் சிறந்த வாகனமாக அமைந்துவிட்டது. இவ்விரு பயணிகளும் சிறந்த பயணிகளாகி விட்டனர்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததும், “முஸ்லிம் சமுதாயமே! பாட்டனார், பாட்டியார் மக்களில் சிறந்த ஒருவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். “ஹஸன், ஹுஸைனின் பாட்டனார் அல்லாஹ்வின் தூதர். அவ்விருவரின் பாட்டி கதீஜா” என்று கூறினார்கள்.
இந்தச் செய்தியின் மையக் கருத்து ஹஸன் ஹுஸைன் காணாமல் போனது தான். இதை அச்சாணியாக வைத்துப் பல்வேறு விதத்தில் இந்தச் செய்தி பாதிவாகியுள்ளது. இந்தச் செய்தி தப்ரானியின் அல்முஃஜமுல் கபீரில் பின்வருமாறு இடம்பெறுகின்றது.
ஹஸன், ஹுஸைனைக் காணவில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து உம்மு ஐமன் (ரலி) முறையிடுகின்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஸன் ஹுஸைனைத் தேடுங்கள் என்று கூறினார்கள். பலரும் பல்வேறு வழிகளில் தேடிப் போனார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் போன திசையில் சென்றேன். அவர்கள் மலையடிவாரத்திற்கு வந்தார்கள். ஹஸனும், ஹுஸைனும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு நின்றிருந்தனர். அங்கே ஒரு பாம்பு (காவலுக்கு) நின்று கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்து நெருப்பு போன்று ஒரு பொருள் வெளியாகிக் கொண்டிருந்தது. அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் விரைந்ததும் அது நபி (ஸல்) அவர்களிடம் உரையாடியது. பின்னர் ஒரு பொந்தில் நுழைந்து கொண்டது. நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் தமது தோள் புஜங்களில் சுமந்து கொண்டு வந்தார்கள்.
இது அல்முஃஜமுல் கபீரில் 109/3ல் இடம்பெற்றுள்ள செய்தியாகும்.
ஷைக் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், இது கோளாறும், பலவீனமான அறிவிப்பாளர்களும் நிறைந்த தொடராகும். இதன் அறிவிப்பாளர் சிலர் ஷியாக்கள் ஆவர் என்கிறார்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகின்ற அல்ஹுஸைன் பின் முஹம்மத் அல் ஹன்னாத் என்பவருக்குரிய வாழ்க்கைக் குறிப்பே எனக்குக் கிடைக்கவில்லை.
அஹ்மத் பின் ருஷ்த் பின் குஸைம் அல்ஹிலாலி என்பவரை, இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சொல்லவில்லை. பொய்யான ஹதீஸை அடித்து விடுபவர் என்று ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்.
ஸயீத் பின் குஸைம் – இவர் மேற்கண்ட இரண்டாம் அறிவிப்பாளரின் சிறிய தந்தை ஆவார். இவரைப் பற்றி இப்னு ஹஜர், “உண்மையாளர், ஷியா என்று குற்றம் சாட்டப்பட்டவர், தவறான செய்திகளைக் கொண்டவர்’ என்று குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் அல் மலாயீ – இவரைப் பற்றி தஹபீ அவர்கள், இவரை ஹதீஸ் துறையினர் கைகழுவி விட்டனர் என்று முக்னியில் குறிப்பிடுகின்றார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹப்பத்துல் அர்னீ – இவர் ஷியா வெறியர்களில் உள்ளவர். “பத்ருப் போரில் பங்கெடுத்த 80 நபித்தோழர்கள் ஸிஃப்பீன் போர்க்களத்தில் அலீ (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டார்கள்” என்று புளுகியவர். இவ்வாறு ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்க்ள்.
உண்மையாளர், தவறான செய்திகள் உள்ளவர், ஷியாவில் வெறியர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் தமது தக்ரீபில் குறிப்பிடுகின்றார்கள்.
இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிடுகின்றார்கள்.
இது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைப் பற்றிய வண்டவாளங்கள் ஆகும். பக்கா ஷியா வெறியர்கள் புனைந்து தள்ளிய பொய்ச் சரக்கு தான் இந்த ஹதீஸாகும். இதைத் தான் ஹுஸைன் மவ்லிதில் இறக்குமதி செய்திருக்கின்றார்கள்.
இது சொல்ல வருகின்ற செய்தி என்ன?
ஹஸன், ஹுஸைன் புனிதமானவர்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கென்று தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார். வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) வஹீ கொண்டு வரும் வேலையை விட்டுவிட்டு அவர்களைக் கண்காணிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படித் தான் ஷியா ஷைத்தான்கள் சித்தரிக்கின்றார்கள்.
அஹ்லுல் பைத் என்னும் இந்த ஐவரையும் கடவுளாக்குகின்ற கதையையும், கவிதையையும் படிப்பதை வணக்கமாக்கிய இந்த ஆலிம்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று முத்திரை குத்திக் கொள்வது இந்த நூற்றாண்டின் இணையற்ற கேலிக்கூத்தாகும்.