வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்?

மற்றவை: மாற்றுமதத்தோரின் கேள்விகள்

நான் இந்து சகோதரரிடம் பிரச்சாரம் செய்யும் போது கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும், நம்மைப் படைப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்? அவரை வணங்க படைத்தாரென்றால் அவருக்கு அந்த வணக்கம் தேவையா? நன்மை செய்தால் சொர்க்கம் என்றும், தீமை செய்தால் நரகம் என்றும் கொடுத்து எதற்கு இந்த வேண்டாத வேலை? நம்மைப் படைத்ததே வேஸ்ட் தானே என்று கேட்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் பதில் கூறவும்.

– பாரூக், மைலாப்பூர்

அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. இறைவனைத் தொழ வேண்டும் என இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.

(நூல் – (முஸ்லிம்: 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின்பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள். போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறார்கள். இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல. மாறாக உங்கள் மகனின் நன்மைக்காவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள். மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான் என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.