03) ஒருவனே தெய்வம்

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

குலம் எப்படி ஒன்றாக உள்ளதோ, அந்த குலத்தை உருவாக்கிய கடவுளும் ஒருவர் தான்.

மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; இன்று எதையெல்லாம் மனிதன், கடவுளாக கருதி வணங்கிக் கொண்டுள்ளானோ அவையாவுமே கடவுளால் படைக்கப்பட்டவை எனவே அவையும் கடவுளாக முடியாது.

தான் ஒருவன் மட்டுமே கடவுள், தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான்.

“மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே சொந்தம். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்” என்று (நபியே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:158)

நபிகள் நாயகம் அவர்கள் மரணிப்பதற்கு சில மாதங்கள் முன்பு நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் பேருரையில் இதனை தெளிவான முறையில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள்.

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓ அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!

நூல்: (அஹ்மத்: 22391)

இந்த தத்துவமானது, அர்த்தம் நிறைந்த பேருண்மையாக இருப்பது ஒரு புறமிருக்க இந்த நம்பிக்கை தான் உலகில் அமைதிக்கும், மனித குல ஒற்றுமைக்கும் வழிவகுக்குகின்ற ஒன்றாகவும் அமையும்.

பல சித்தாந்தங்களும் மதங்களும் இவ்வுலகில் இருந்தாலும், ஒரே கடவுள் கொள்கையை தெளிவான முறையில் இஸ்லாம் மட்டுமே இவ்வுலகிற்கு போதனை செய்கிறது.

பிறப்பால் கருப்பனும் வெள்ளையனும் எப்படி சமமோ. இறைவனின் படைப்பாலும் இருவரும் சமம் என்கிற எண்ண ஓட்டம் வருகிற போது, யாருக்கும் நான் சளைத்தவனில்லை,நான் அனைத்து வகையிலும், பிற மனிதர்களோடு சரி சமமான கண்ணியத்தைக் கொண்டவன் தான் என்கிற சுயமரியாதைக்கான வழித்தடம், சமூகத்தில் புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் மத்தியில் எழும்.

இந்த தத்துவம் நிலைபெறுகின்ற போது உலக மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமை என்றாகி விடுகின்றனர்.

வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

இந்த ஒற்றை தத்துவம் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இனம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்துத் திரைகளும், வேறுபாடுகளும் அகன்று விடுகின்றன.

இப்படிக் கடவுள் கொள்கையில் ஓர் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன் அங்கே மக்கள் தாமாகவே ஒரே குலம், ஒரே இனம் என்றாகி விடுகின்றார்கள்.