01) முன்னுரை

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பல விதமாக உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.

கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம், மிகப்பெரிய அருட்கொடையாக நமக்கு அருளப்பட்டிருக்கின்ற பகுத்தறி வினை சரிவர பயன்படுத்தாதனிடைய விளைவு, இன்று சாதி, மத, இன, மொழி போன்ற பேதங்களுடன் சர்ச்சைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்து இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம்.

ஆம்..! மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிப்பது என்பது நாம் கொண்டுள்ள மிக உயரிய கிரீடமான பகுத்தறிவுக்கே முரணானது.

காரணம், பிறப்பால் மனிதர்களிடையே பேதமை கற்பிக்கும் நாம். அதற்கான அடித்தளமான சாதிய வேற்றுமைகளை கூட நாமே தான் உருவாக்கிக் கொண்டோம் என்பதை புரிய மறுக்கிறோம்.

உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் ஒருவனே. மதங்களால் பிரிந்து வழிபாட்டு முறைகளால் நாம் மாறுபட்டாலும், எல்லோரும் மனிதர்கள் என்னும் ஒரே குலமே.

மனிதனே உருவாக்கிக் கொண்ட போலியான சாதிய கட்டமைப்புகளில் மனித குலம் சிக்கிச் சீரழிந்தாலும், நிஜத்தில் அவர்களுக்கிடையே பேதமை கற்பிப்பது என்பது அறிவுடைமையாகாது.

இந்த சாதாரண உண்மையை மனிதன் உணர்ந்து கொள்கின்ற நாள் தான் அகில உலகமும் மன அமைதியையும் உண்மையான சமத்துவத்தையும் காண்கிற நாளாக அமையும்.

இந்த அடிப்படை புரிதலை நோக்கி மனிதர்களை ஒன்றிணைக்க கடவுட் கோட்பாட்டினை நாம் சரியான பார்வையுடன் அணுகுவது அவசியமான ஒன்று.

கடவுள் கோட்பாடு சரிவர புரியப்படுமேயானால், மனிதர்களுடையே தற்போது எழுகின்ற ஏற்றத் தாழ்வு கொண்ட பார்வைகளெல்லாம் எத்தனை அபத்தமானது என்பது விளங்கும்..!