30) பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. அதேசமயம், பகுத்தறிவு இல்லாத பிராணிகள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்: வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலைக் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால்,(போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷ ஐந்துகள் உலவும் இடமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (முஸ்லிம்: 3891)

நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) நூல் : (புகாரி: 5516)

(புகாரி: 5515) வது செய்தியில், பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக இடம் பெற்றுள்ளது. வாயில்லா ஜீவன்களை கொடுமைபப்படுத்துவதும் பாவம் என்பதை பின்வரும் செய்தி மூலம் அறியலாம்.

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : (புகாரி: 3482) (முஸ்லிம்: 2242)

மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே. அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு. (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

ஒரு அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே. (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி ஸல்) அவர்கள். “(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 2363) (முஸ்லிம்: 2244)

ஜீவராசிகளிடம் கருணை காட்டுவதற்கும் இறைவன் நற்கூலி கொடுப்பான் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். அதுமட்டுமல்ல! அவற்றைத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினால் மறுமையில் தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரிக்கை செய்கிறது.

பிறர்நலம் நாடுவது குறித்து இஸ்லாம் போன்று வேறு எந்த கொள்கையாலும் இந்தளவிற்கு தெளிவாக விளக்கிட முடியாது. உண்மையை சொல்வதாக இருப்பின், இதுபோன்று எடுத்துரைக்கும் எந்தவொரு கொள்கையும் எங்கும் இல்லவே இல்லை.

இஸ்லாம் தான் அனைவருடைய நலனும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. தனிநபர் நலன் மற்றும் சமூக நலன் மீது, அனைத்து கோணங்களிலும், கண்ணோட்டத்திலும் கவனம் செலுத்துகிறது. இதுவரை பார்த்த செய்திகள்கூட அவற்றுள் ஒரு பகுதிதான். இன்னும் பற்பல செய்திகள், கருத்துகள் திருக்குர் ஆனிலும் நபிமொழிகளிலும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சமூக சிந்தனைகள் எல்லோராலும் பின்பற்றப்பட்டால், வாழ்க்கை நெறியாகக் கொள்ளப்பட்டால் தெலுங்கானா, காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகள் எழாமல் மனித குலம் அமைதியில் வாழும் அந்த அமைதிக்கும் சமூக நலனுக்கும் மறுபெயர்தான் இஸ்லாம்!