27) சபைகளில் பிறர்நலம் நாடுதல்
மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் அடுத்த மக்களின் வீடுகளுக்கு. சபைகளுக்குச் செல்லும் போதும் அங்கிருக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. இதோ சில செய்திகளைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு. அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் மக்கள் நன்கு விளங்கிக்கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் :(புகாரி: 6244)
ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 911)
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்: நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்கள் :(புகாரி: 6290), (முஸ்லிம்: 4400)
அடுத்த மக்களுக்கு அநீதி இழைப்பதை எந்த அளவுக்கு நுணுக்கமாகக் கவனித்து இஸ்லாம் தடை செய்கிறது என்பதற்கு இந்தச் செய்திகளும் சான்றுகளாக உள்ளன.