25) வியாபாரத்தில் நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர்நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப் படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களை செய்கிறார்கள். இலாபத்திற்காக பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனும் மோசமான மனப்போக்கு பலரிடம் முற்றிக்கிடக்கிறது. மார்க்கம் தடுத்த காரியங்கள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. ஆகவே, பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு (தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்து அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத் தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ‘உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ‘ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்துக்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 164)

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவு படுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லி யிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : (புகாரி: 2079)

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!

வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாதுரி ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது. தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்! அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 2140)