23) குடிமக்களின் நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மற்ற நேரங்களிலும் வழக்கத்தைவிடக் கூடுதலாக அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள். முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத்துரையுங்கள்; சிரமமானதை எடுத்துரைக்காதீர்கள். மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்துப் பழகி (அன்பு செலுத்திக் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி), நூல் : (புகாரி: 3038)

நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளனான அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 3731)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்துகொள்ளுங்கள்: பொதுமக்களுக் குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனைவிட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: (முஸ்லிம்: 3579)

இன்று தலைவர்கள் தைரியமாக ஊழல் செய்வதற்கும். ஊதாரித்தனம் செய்வதற்கும் அராஜகம் புரிவதற்கும், அநீதி யிழைப்பதற்கும் அடிப்படைக் காரணமே, தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது; தண்டிக்க முடியாது என்ற எண்ணம் தான். ஆனால் இஸ்லாம் இத்தகைய தலைவர்களை மறுமை யில் இறைவன் பிடித்து விடுவான் என்று எச்சரிக்கை செய்கின்றது. இந்த மறுமை பயம் மட்டுமே தலைவர்களை தவறு செய்வதிலிருந்து காக்கும் அரண் என்று தெளிவுபடுத்துகின்றது