20) அநீதி இழைக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்
நெருக்கடியான சூழ்நிலையில் மாட்டித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள். அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றவர்கள் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பிறரால் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாசாவைப் பின்தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும்படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும் படியும். சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும். சலாமுக்கு பதில் கூறும்படியும். தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக் கூறுகையில் அவருக்கு (யர்ஹமுகல்லாஹ் – இறைவன் உங்களுக்கு கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ் சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: (புகாரி: 1239, 5175)
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 2444)