12) உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்
தம்மைப் போன்று. தமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென எல்லோரும் நினைக்க வேண்டும். அவர்களிடம் பொறாமைப்பட்டோ, போட்டிப் போட்டுக் கொண்டோ அவர்களுக்கு கெடுதல் செய்ய துணிந்துவிடக்கூடாது. எப்போதும் நம்முடன் பிறந்தவர்களின் நலனிலும் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக்) செய்து விடுமாறு (கணவனிடம் கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள வேண்டாம்!” என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 2140)
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 5122)
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 7072)
கத்தியைக் காட்டுவதே பாவம் எனும்போது வெட்டி வீழ்த்துவது பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மனிதர்கள் அனைவரும் ஆதம் நபியின் வாரிசுகள் என்பதால் சகோதரத்துவ உணர்வோடு நடக்க வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. இப்படியிருக்க, ஒருவர் தம்முடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யாமல் புறக்கணிப்பதை அநீதி இழைப்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளுமா? சிந்தித்துப் பாருங்கள்.