11) வாழ்க்கை துணைக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

குடும்பங்களின் தொகுப்பு தான் சமுகம். சமூகம் சரியாக இருக்க வேண்டுமெனில் குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனும் மனைவியும் சரியாக இருப்பது அவசியம். அவர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை

(அல்குர்ஆன்: 2:187)

எப்படி ஆடை மானத்தையும் குறைகளையும் மறைக்கிறதோ, பாதுகாப்பு அளிக்கிறதோ அவ்வாறு குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். இப்படி குடும்பம் சிறக்க, சமூகம் செழிக்க நிறைய அறிவுரைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: (புகாரி: 56)

ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது.’ இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)                        நூல்: (புகாரி: 1425)