09) பெற்றோருக்கு நலம் நாடுதல்
பிறர் என்று சொல்லும் போது அந்தப் பட்டியலில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும். அவர்களை புண்படுத்துவதோ துன்புறுத்துவதோ பெரும்பாவம். மார்க்கத்திற்கு முரணாக இல்லாத காரியங்கள் அனைத்திலும் அழகிய முறையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும்.
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விரு வரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:23-24) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?” என்றார். ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 5971)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள். “அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு” என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : (புகாரி: 5972)
ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: (புகாரி: 5973)
நமது பெற்றோரை பிறர் திட்டுவதற்கு நாம் காரணமாவதே பெரும் பாவம் என்றால், பெற்றோரை நாமே நேரடியாகத் திட்டுவது, அடிப்பது போன்ற பாவத்தின் பரிமாணத்தை அளவிடவே முடியாது.