07) பிறர்நலம் நாடிய நபிகளார்
பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.
(நபியவர்கள் ஹிரா குகையில் இருந்தபோது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர் களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு “எனக் கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.)
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்: (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர் களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : (புகாரி: 3)
உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1810)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 6)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கி னார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று. என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : (முஸ்லிம்: 4629)
நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி), நூல் : (புகாரி: 707)
ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “”தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்த துண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமை யானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமே யாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன்.
‘கர்னுஸ் ஸஆலிப் என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.
உடனே. மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலு முள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் சரிஉங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். உடனே, “(வேண்டாம்:) ஆயினும், இந்த நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாமென சொன்னேன்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : (புகாரி: 3231)
நீதி, நேர்மை தர்மம், பெருந்தன்மை, மன்னித்தல், உதவி செய்தல், பிறருக்காக பிரார்த்தனை செய்தல் என்று மக்களுக்கு நலன் தரும் நற்பண்புகளின் மொத்த உறைவிடமாக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். இந்த மாபெரும் உண்மையை முஹம்மது நபியின் வாழ்க்கையை திறந்த மனதோடு படிக்கும்போது தெளிவாக அறியலாம். அந்த மாமனிதரை முன்மாதிரியாக ஏற்று சிறப்பாக வாழுமாறு இஸ்லாம் அகிலம க்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.