05) அனைவரும் நலம் நாட வேண்டும்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

சமூகத்தில் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. அடுத்தவர் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இதோ நபியின் எச்சரிக்கையைக் கேளுங்கள்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக் கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் (உங்களது பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),              நூல் : (புகாரி: 5188)

பெற்றோர். உடன் பிறந்தவர்கள். வாழ்க்கைத் துணை. குழந்தைகள், உறவினர்கள். நண்பர்கள். அண்டை வீட்டினர், ஊர் மக்கள் என்று அனைத்து மக்களும் நலமாக இருக்க வேண்டு மென நினைப்பதோடு இயன்றளவு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; நல்லுதவி புரிய வேண்டும்.

இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள சில வசனங்களைப் பாருங்கள்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவி னர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய் யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரை யும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 4:36)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ‘நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக் காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன்: 2:215)

“அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்” என்று இஸ்ராயீ லின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.            (அல்குர்ஆன் 2:83)