04) பிறர்நலம் நாடுவதும் தர்மமே!

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

இஸ்லாத்தின் பார்வையில் செல்வத்தை ஏழை எளியோருக்கு கொடுப்பது, நற்பணிகளுக்குக் செலவழிப்பது மட்டுமல்ல, பிறர் நலத்தை நாடும் வகையில் செய்கிற காரியங்கள் அனைத்தும் தர்மமாக கருத்தப்படும்.

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், ‘இறைத் தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்..?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து. தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் முடியவில்லையாயின்’ எனக் கேட்டதற்கு, தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று பதிலளித்தார்கள். தோழர்கள். ‘அதுவும் இயலவில்லையாயின்’ என்றதும் ‘நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி),                  நூல்: (புகாரி: 1445)

மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கு இடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும்.

ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமேயாகும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),          நூல்: (முஸ்லிம்: 1835)

இதே செய்தி புகாரி எனும் நூலில் 2891 வது ஹதீஸாக, சிறு வார்த்தை வித்தியாசத்துடன் வந்துள்ளது. அதில், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட செய்திகள் அனைத்தும் இஸ்லாம் எந்தளவுக்கு எல்லோரும் நலமாக இருப்பதை விரும்புகிறது என்பதற்கு சான்றுகளாக உள்ளன.

மறுமை வெற்றிக்கு வழிகாட்டும் பண்பு

எதிலும் பிரதிபலன் எதிர்பார்ப்பது மனிதனின் இயல்பு அந்த வகையில் அடுத்தவர் நலனில் அக்கறை காட்டினால் என்ன கிடைக்கும் என்று கேட்டால் அதற்கு இஸ்லாம் அழகிய பதில் அளிக்கிறது; மிகப்பெரிய நற்செய்தி கூறுகிறது.

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான்.

யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),          நூல் : (முஸ்லிம்: 5231)

மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தினார். இந்த நற்செயலைச் செய்ததற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),          நூல் : (முஸ்லிம்: 5108)

யார் ‘ரூமா’ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (பொதுச்சொத்தாக ஆக்கியது உங்களுக்குத் தெரியாதா? நபி (ஸல்) அவர்கள் எவர் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார் படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று கூற. நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?” என்று – உஸ்மான் (ரலி) கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.

அறிவிப்பவர் : அபூ அப்திர்ரஹ்மான் (ரலி), நூல் : (புகாரி: 2778)

இந்தச் செய்திகள் சொல்லும் பாடம் என்ன? இந்த உலக வாழ்க்கை அற்பமானது: நிரந்தரம் அற்றது. இதற்குப் பிறகுள்ள மறுமை வாழ்க்கையே நிலையானது. இப்படியிருக்க, இங்குள்ள வாழ்க்கையில் மட்டுமல்ல, மறுமையிலும் அல்லாஹ்வின் அருளை, உதவியைப் பெறவதற்கு பிறர்நலம் நாடும் பண்பு பெரிதும் உதவும். சமூக அக்கறையோடு வாழும் போது நரகத்தில் இருந்து தப்பித்து சொர்க்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்). அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்).

மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்து நல்லறங்கள் புரிந்தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),                     நூல் : (முஸ்லிம்: 1833)