03) பிறர்நலம் நாடுமாறு உறுதிமொழி
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்ட மக்களுக்குப் பல விசயங்களைக் கட்டளையிட்டார்கள். அதன்படி, அன்றாட வாழ்வில் அவசியம் கடைபிடிப்பதாக பல விசயங்களை நபித்தோழர்கள் இறைத்தூதரிடம் உறுதி மொழியாகக் கொடுத்தார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும். ஸகாத் வழங்குவதாகவும். ஒவ்வொரு முஸ்லிலிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க. ‘அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும். உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்.
எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக் குரிய பரிகாரமாகிவிடும்.
இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்று சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) (புகாரி: 18, 3893, 6073)
அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்குரிய கடமைகளை செய்வதும், அடுத்த மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதும் நபித்தோழர்கள் வழங்கிய உறுதிமொழியில் பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இதன் மூலம் பிறர்நலம் நாடும் உன்னதமான பண்பினை முஹம்மது நபி எந்தளவிற்கு அழுத்தமாக மக்களிடம் வலியுறுத்தினார்கள் என்பதை விளங்கலாம்.