01) முன்னுரை
இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம் தீவிரவாத மார்க்கம் என்பது போன்ற மாய தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. சிலர் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியைப் பரப்புகிறார்கள்.
உண்மையில் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கம். மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் வாழ் பிராணி நீரின்றி வாழ முடியாதது போல் சமுதாயமின்றி மனிதனால் வாழ முடியாது. அப்படி அவன் சமூகத்தில் வாழும் போது, சக மனிதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன்னை அண்டி நிற்கின்ற பிராணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சுற்றுப்புறச் சூழலை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான வழிகாட்டலை இஸ்லாம் வழங்குகின்றது.
ஏனெனில், மனிதன் அமைதியாக நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக, ஏக இறைவனால் வகுக்கப்பட்ட மார்க்கம் இது. இந்த இறை மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாகவும் சந்தோசமாகவும் இயங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் அனைத்தையும் வழங்குகிறது.
சமுதாய நலனை சீர்குலைக்கும் எல்லா விதமான இடையூறுளை பிரச்சனைகளை அடையாளம் காட்டுவதோடு, அவற்றை முழுமையாக களைவதற்குத் தகுந்த ஆலோசனைஅளிக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் பிறர்நலம் நாட வேண்டும், சமூக அக்கறையோடு வாழ வேண்டும் என்பதும் அவற்றுள் அடங்கும். இது பற்றி இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சில செய்திகளை இந்நூலில் பார்க்க இருக்கிறோம். இஸ்லாம் என்றாலே பிறர்நலம் நாடுவது தான் என்பதைப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
அதற்கு இறைவன் உதவி புரிவானாக.