தலை போனாலும் விலை போகோம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறைத் தூதர்கள், தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க ஆரம்பித்த மாத்திரத்திலேயே கொலை முயற்சி, கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர் நீக்கங்கள், நாடு கடத்தல்கள், சிறைவாசங்கள், சித்ரவதைகள் என்று உடல்ரீதியான சோதனைகளும், கேலி, கிண்டல்கள், பரிகாசங்கள், அவதூறுகள், கடும் விமர்சனங்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், போலியான கூற்றுக்கள் என உள ரீதியான சோதனைகளும் அவர்களைத் துரத்தின, தொலைத்தெடுத்தன.

இத்தனையையும் தாக்குப் பிடித்தவாறு தான் தங்கள் தூதுச் செய்தியை மக்கள் மன்றத்தில் தூதர்கள் தாக்கல் செய்தனர்.
இந்த இரு வகையான இடையூறுகளுக்கு இலக்காகாத தூதர்கள் யாருமில்லை எனுமளவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
கொலை முயற்சிக்கு உள்ளான தூதர்களின் வரலாறுகளையும் அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்கின்றான். அப்படிக் கொலை முயற்சிக்கு ஆளான, குறி வைக்கப்பட்ட ஒரு தூதர் தான் ஸாலிஹ் (அலை) அவர்கள். இதோ அவர்களது பிரச்சாரத்தை அல்லாஹ் மறு ஒலிபரப்பு செய்வதைக் கேளுங்கள்
.

ஸாலிஹ் நபிக்கு எதிரான சமூதின் சதி

அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.
“என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.

உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 27:45-47)

ஸாலிஹ் நபியின் பிரச்சாரத்திற்கு எதிராக ஒன்பது சதிகாரக் கூட்டத்தினர் ஒன்று கூடினர், ஓரணியில் சேர்ந்தனர். ஸாலிஹைத் தீர்த்துக் கட்டுவதாக சபதம் எடுத்து சத்தியம் செய்தனர். தடயம் இல்லாத அளவுக்கு அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்கின்றனர்.
அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.
(அல்குர்ஆன்: 27:48)

ஆனால் அவர்களின் சதியை அல்லாஹ் முறியடித்து விடுகின்றான்.
“அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் “அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம்’ என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம். அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.
(அல்குர்ஆன்: 27:49-53)

இறுதியில் ஸாலிஹ் நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் தான் வென்றனர்.

எரியும் நெருப்பில் இப்ராஹீம் நபி

வரவிருக்கும் ஹஜ் மாதங்கள் ஏகத்துவத்தின் ஈடு இணையற்ற தலைவர் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் நிலையான நினைவைத் தாங்கியவை. அந்த இறைத்தூதர் இப்ராஹீமின் புரட்சிமிகு பகுத்தறிப் பிரச்சாரம் பிரபலமானது. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பரிசாகக் கிடைத்தது என்ன?
இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன்: 37:97)
ஆனால் அல்லாஹ் அதையும் முறியடிக்கின்றான்.
அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம்.
(அல்குர்ஆன்: 37:98)

மூஸாவுக்கு எதிரான கொலை முயற்சி

நான் தான் உங்கள் கடவுள் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் தூதராக அனுப்பப்படுகிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அவர்களது அறிவுப்பூர்வமான, ஆணித்தரமான வாதங்கள் எனும் ஆயுதங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் படுதோல்வியடைந்த ஃபிர்அவ்ன், மூஸாவைக் கொலை செய்யத் துடிக்கின்றான்.
“மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
(அல்குர்ஆன்: 40:26)
அவரைத் தூக்கில் போடுவதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்தான். அதற்குரிய தருணத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கேற்ப, மூஸா தன் சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயலும் போது அவரையும் அவரது சமுதாயத்தையும் ஃபிர்அவ்ன் துரத்தி வருகின்றான். ஆனால் அவனால் அவரை அழிக்க முடியவில்லை. அவனே அழிந்து போனான். தன்னைக் கடவுள் என்று பிதற்றிக் கொண்டிருந்த அவனைக் கடலில் மூழ்கடித்ததுடன் மட்டுமல்லாமல் அவனது பிணத்தை உலக மக்களுக்குப் பாடமாக்கியும் வைத்து விட்டான் வல்ல இறைவன்.
இதை அல்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
“உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!” என்று (இறைவன்) கூறினான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான்.
இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்: 10:89):-92

சாவிலிருந்து தப்பிய சத்தியத் தோழர்

மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய குடும்பத்தாரும் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஃபிர்அவ்னின் குடும்பத்தில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
இறைத் தூதர் மூஸாவுக்கு எதிராக ஃபிர்அவ்ன் எடுக்கும் நடவடிக்கையிலிருந்து அவரைக் காப்பாற்றுகின்றார்.
“என் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்” என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
“என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?” (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் “நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை” என்று கூறினான்.
“என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன்” என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

உண்மை சம்பவங்களை அறிந்தும், புரிந்தும், வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.