மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மீடியாக்களுக்கு எதிராக நாம் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கக் கூடாது?

பதில்:

நமது நாட்டில் உள்ள அதிகமான நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் தங்கள் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்தே தீர்ப்பு அளிக்கின்றனர். இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

பிராணிகளை வதை செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது. குருவி வேட்டையாடுவோரையும், பறவைகளை விற்பனை செய்வோரையும் தண்டிக்கும் நீதிமன்றங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க என்ன காரணம்?

அப்பட்டமாக பிராணிகள் வதை செய்யப்படுவது தெரிந்தும் இதை அனுமதிக்க ஒரே காரணம் ஜல்லிக்கட்டு மதத்தின் பெயரால் நடத்தப்படுவது தான்.

அதே நேரத்தில் ஆடு மாடு ஒட்டகம் உணவுக்காக அறுக்கலாம் என்று சட்டத்தில் அனுமதி இருந்தும் ஒட்டகம் குர்பானி கொடுக்க நீதி மன்றம் தடை போட்டது. தடையை மீறி அறுப்போம் என்று அறிவித்த பின்னர் மாநில அரசின் தலையீட்டின் காரணமாக தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது.

இதிலிருந்து நீதிபதிகள் சட்டத்தைப் பார்த்து தீர்ப்பளிக்காமல் தங்கள் மத நம்பிக்கையைச் சார்ந்தே தீர்ப்பளிக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவர் சில நாட்கள் அதிக பட்சம் 90 நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள். குண்டாஸ், மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். இப்படித்தான் இந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படுகிறது.

ஆனால் முஸ்லிம்கள் மட்டும் பத்து ஆண்டுகள் பதினான்கு ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்தனர். இருக்கின்றனர்.

கீழ் நீதிமன்றங்களும், மேல் நீதி மன்றங்களும் முஸ்லிம்களுக்கு மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யும் உரிமையை வெளிப்படையாக மறுத்து வந்தன. வருகின்றன.

குண்டு வெடிப்பு வழக்கு என்று காரணம் சொல்லப்பட்டாலும் அதிலும் உண்மை இல்லை. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரத்தினருக்கு ஜாமீன் கிடைக்கிறது. முஸ்லிமுக்கு மட்டும் கிடைப்பதில்லை என்றால் என்ன அர்த்தம்? நீதிபதிகள் சட்டப்படி நடப்பதில்லை. முஸ்லிம் என்ற வெறுப்பின் காரணமாகவே இப்படி நடக்கிறார்கள்.

பட்டியல் போடுவதாக இருந்தால் ஒரு நூலாக எழுதும் அளவுக்கு நீதி மன்றங்களின் பாரபட்சமான போக்குக்கு உதாரணங்கள் உள்ளன.

வேறு விஷயங்களுக்கு நீங்கள் பொது நல வழக்கு தொடர்ந்தால் அதில் நியாயம் வழங்க வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்கள் கருதுவது போல் நீதிபதிகள் பலரும் கருதும் நிலையில் வழக்கு போடுவதால் என்ன பயன்? அது எழுத்துரிமை என்று தீர்ப்பளித்து நியாயம் வழங்குவார்கள்.

முஸ்லிம் சமுதாயம் சம்மந்தப்பட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகாமல் பேச்சு வார்த்தை மூலமும் அரசியல் நடவடிக்கை மூலமும் போராட்டம் மூலமும் சந்திப்பது தான் அறிவுடமை.