10) உயிரினங்களிடத்தில் மனிதநேயம்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்
ஐந்து அறிவு உயிரினமாக இருக்கின்ற விலங்கினங்களைக் கூட சித்திரவதை செய்யக் கூடாது என்று இஸ்லாம் அழுத்தந் திருத்தமாக பதிய வைக்கின்றது. மேலும் உயிர்களுக்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான நற்பலன் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.
ஒரு மனிதர் பாதையில்
நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) நூல் (புகாரி: 2363)