09) மக்களிடத்தில் மனிதநேயம்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள்.

ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல. என்னருமை மாற்று மத அன்பர்களே! உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கண்டிக்கவில்லை.

மனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு உயிரை அறியாயமாகப் பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன்: 5:32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர் ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: (புகாரி: 2376)

இஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்து கொண்டால் இறைவன் அதற்காகவும் சுவனம் என்ற நற்கூயை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.