குடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்?

மற்றவை: மாற்றுமதத்தோரின் கேள்விகள்

கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும்? இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே? இதற்கு என்ன பதில்?

இறைவன் செய்யும் எதுவும் தக்க காரணத்துடன் தான் இருக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தக்க காரணம் இருக்கும் என்பதால் அந்தக் காரணங்கள் அனைத்தும் மனிதனுக்குத் தெரியும் என்பது அர்த்தமல்ல.

இப்போது குடல்வால் பற்றி கேட்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் ஏராளமான விஷயங்கள் பற்றி ஞானமில்லாமல் கடவுளைக் கேள்வி கேட்டார்கள். அவற்றின் பயன்கள் குறித்து இப்போது மனிதன் கண்டறிந்து விட்டான். குடல்வால் எனும் உறுப்பு மனிதனுக்கு ஏன் என்ற கேள்வியும் இது போன்றது தான்.

ஆனால் இது கூட சரி இல்லை. ஏனெனில் குடல்வால் எனும் உறுப்பால் ஒரு பயனும் இல்லை என்று நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து இப்போது உடைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீற்று எனும் இணைய தளத்தில் குடல்வால் மூலம் மனிதனுக்கு நன்மை உள்ளது என்று கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நமது உடலில் சிறு குடலும், பெருங்குடலும் இணையும் இடத்தில் குடல்வால் என்றொரு உறுப்பு உள்ளது. ஒரு புழுவின் வடிவத்திலான பை போன்ற இந்த உறுப்பு நான்கு அங்குல நீளமும், அரை அங்குல விட்டமும் உடையது. இந்தக் குடல்வால் உடலுக்கு தேவையில்லாத உறுப்பு என்றே கருதப்பட்டது. மூளை, இதயம், தோல் போன்ற உறுப்புகள் மனிதன் உயிர்வாழ அவசியமானவை. ஆனால் குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர் வாழமுடியும். டான்ஸில், ஞானப்பல், உடல் ரோமம் போன்றவையும் உடலுக்கு தேவையற்ற உறுப்புகள் என்றே கருதப்படுகின்றன.

நகங்கள், கால் பெருவிரலின் ரோமங்கள், காதுகளின் தொங்கு தசை இவையெல்லாம் மனிதன் உயிர் வாழ அவசியம் தானா? இந்த தேவையற்ற உறுப்புகள் உடலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமன்றி, நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகி நம்முடைய நிம்மதியைக் கெடுக்கின்றன. இது போன்ற தேவையற்ற உறுப்புகளை நாம் நம்முடைய உடலில் இருந்து ஏன் அப்புறப்படுத்தக் கூடாது என்பது போன்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல. நம்முடைய உடலில் தேவையற்ற உறுப்புகளாகக் கருதப்படுபவை நாம் எந்த இடத்தில் வாழ்கிறோம் என்பதையும், எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் பொறுத்து அவசியமான உறுப்புகளாக மாறி விடுகின்றன. நவீன மருந்துகளை உற்பத்தி செய்வதில் இது பற்றிய ஆய்வுகள் பயன்படுகின்றன. மேலும் நம்முடைய மூதாதையர்களைப் பற்றிய அறிவும் இந்த ஆய்வுகள் மூலம் நமக்குக் கிடைக்கிறது. வில்லியம் பார்க்கர் என்னும் அறிஞர் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுடையவர். ஆனால் அவருடைய ஆய்வு அவரையறியாமலேயே குடல்வால் பற்றிய ஆய்விற்கு இட்டுச்சென்றது. உணவைச் செரிக்கும் வேலையை சிறுகுடல் செய்யும் போது, குடல்வால் வெறுமனே அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.

மனித உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் நன்மை செய்பவையும், தீமை செய்பவையும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவைச் செரிக்க வைப்பதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செழிக்கச் செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சமம். இவ்வாறு செழிப்படைந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உயிர்ப் படலங்களாக குடல்வாலின் சுவர்களை ஆக்கிரமித்துக் கொண்டு தீமை செய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. குடல்வால் எனும் உறுப்பு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உடலைத் தாக்கும் போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெளிப்பட்டு உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதும் வில்லியம் பார்க்கரின் கருத்தாகும்.

என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஞ்ஞானி வில்லியம் பார்க்கர் அவர்களின் ஆய்வின் மூல நூலை வாசித்தவர்கள் இது பற்றிய பகுதியை அனுப்பினால் அதையும் இத்துடன் இணைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் படைப்பில் ஒரு பயனும் அற்றவை என்று மனிதன் நினைத்தால் அதை அவன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தமே தவிர பயன் இல்லை என்று அர்த்தமல்ல.

ஆதாரத்துக்கு பார்க்க

https://www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html

www.dukemagazine.duke.edu/issues/030408/depqa.html