08) பொதுவானவை
குழந்தைக்காக இறைவனால் வழங்கப்படும் தன்னிகரற்ற கலப்படம் ஏதுமற்ற உணவு தாய்ப்பாலாகும். தாய்ப்பால் அருந்துவது குழந்தையின் பிறப்புரிமை.ஆனால் சில தாய்மார்கள் இவ்வுரிமையை குழந்தைகளிடமிருந்து தட்டிப் பறித்து விடுகின்றனர்.
தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன்: 2:233) ➚
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்து வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் (மனிதன்) பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன்: 31:14) ➚
கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டாலும் குழந்தைக்கு பாலூட்டுதல் மட்டும் தடைபடக் கூடாது என்கிறான் இறைவன். அதற்கு கூலி கொடுத்தேனும் பாலூட்டச் செய்யுங்கள் ஒருவேளை அதற்கு அறவே வாய்ப்பில்லாத போது செவிலித் தாயை
ஏற்பாடு செய்தாவது பால் கொடுத்து விடுங்கள் எனக் கட்டளையிடுகிறான். உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள் .உங்களுக்கிடையில் நல்ல முறையில் (இதுபற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். (அல்குர்ஆன்: 65:6) ➚
போதுமான அளவு பால் சுரக்கவில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனை தான். ஒவ்வொரு தாயிடமும் அவளது குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கிறது. பால் கொடுப்பது குறையும் போது தான் அதன் சுரப்பும் குறையும். பால் கொடுப்பதால் உடலின் அழகு குறைந்து போகும் என சிலர் எண்ணுகின்றனர் உடலின் வனப்பும், வசீகரமும், ஆரோக்கியமும் பால் கொடுப்பதால் மேம்படுமே தவிர குறைவதில்லை என பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலூட்டுவது குழந்தை, பிறந்த பல மாதங்களுக்கு மீண்டும் கருவுறாமல் தடுக்கும் இயற்கையான, பாதுகாப்பான இடையூறு ஏதுமில்லாத கருத்தடை சாதனம் என்கின்றனர்
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள். பெரும்பாலும் பால் கொடுப்பதை தவிர்ப்பவர்களில் பலர் குழந்தையின் பசி போக்குவதற்குத் தானே பால் கொடுக்கிறோம் அந்தப் பசியை எப்படி போக்கினால் என்ன?
என நினைக்கின்றனர்.
உண்மையில் தாய்ப் பாலூட்டுவது பசிபோக்குவதைத் தாண்டி ஏராளமான பயன்களை குழந்தைக்கு வழங்குகிறது. அக்குழந்தை பாலருந்தும் நிமிடம் முதல் பல்லாண்டுகள் வாழ்ந்து மரணிக்கும் கடைசி நிமிடம் வரை உடலுக்கு தேவைப்படும் அனைத்து வகை ஆற்றலும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளது.
முதல் இரண்டு வருடத்தில் வேகமாக வளரும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்குரிய சத்துக்கள்.
40 வகைப் புற்று நோய் செல்களை அழிக்கும் ஆற்றல்.
அந்தச் செல்கள் உடலுக்குள் நுழையும் போதே தடுத்து நிறுத்தும் மூலக்கூறுகள்
சிறுசிறு விபத்துகளின் போது எலும்பு முறிவதை தடுத்து நிறுத்தத் தேவையான கால்சியம் சத்துக்கள்.
வலிகளைத் தாங்கும் வலிமை, ஆஸ்துமா, நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்ற நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு சக்தி.
தேவையற்ற உடல் பருமனை உருக்கிக் கரைக்கும் உயிரணுக்கள் என எண்ணற்ற நன்மைகளும் மனித வாழ்வின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தரும் ஊக்க மருந்துகளும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளதால் அதைக் குழந்தையின் பிறப்புரிமையாகவே இஸ்லாம் கருதுகிறது.