01) முன்னுரை

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் என்ற சொல் இணைக்கப்பட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற, அறிவற்ற இணைப்பாகும்.

மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும். மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது.

அதனாலேயே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரசுரிக்கின்றது. அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை மிகவும் இழிவாகவும், கேவலமாகவும், உயிரினங்களைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும்.

தளக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறகுக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம்.

இறைவன் மனிதனுக்குப் பயன்பட உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனை படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடனுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான்.