02) சாதாரண மனிதர்கள் அறிய முடியுமா ?
இந்த கேள்விக்கு குர்ஆன், ஹதீஸை பார்க்காமலேயே, நமது அறிவை பயன்படுத்தி “முடியாது” என சொல்லிவிடலாம். நமக்கு ஏற்படும் விபத்துகள் வியாபாரத்தில் நஷ்டங்கள், தோல்விகள் இவையனைத்தும் நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு போதுமான சான்றுகளாகும்.
சில நேரங்களில் நாம் பயணம் செய்யும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி இறந்துவிடுகிறோம், சில நேரங்களில் கை கால்களை இழக்கிறோம். நாம் பயணம் செய்யும் இப்பேருந்து விபத்துக்குள்ளாகும் என்ற மறைவான விசயம் தெரிந்திருந்தால், அந்த பேருந்தில் பயணம் செய்வோமா? தன் உயிரை கொடுப்போமா? தன் கை, கால் களைத்தான் இழப்போமா? இப்படிப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்து நாம் விபத்துக்குள்ளாவதற்கு நமக்கு மறைவான விசயங்கள் தெரியாததே காரணமாகும்.
இதைப்போன்று நமது வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்களும் நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு சான்றாகும். நாம் நடத்தும் வியாபாரத்தில் திடீ.ரென அதிக இலாபம் கிடைக்கிறது. சில நேரத்தில் பெரும் நஷ்டத்தை கொடுத்துவிடுகிறது. இப்படி பெரும் நஷ்டங்கள் ஏன் உண்டானது? இதை ஏன் தவிர்க்க முடியவில்லை? என சிந்தித்தால், மறைவான விசயங்கள் அறியும் ஆற்றல் நமக்கு இல்லாததே காரணம் என்பதை விளங்கலாம். இந்த தொழில் செய்தால் நமக்கு நஷ்டம்தான் வரும் என்ற மறைவான விசயம் தெரிந்திருந்தால் யாராவது அந்தத் தொழிலை தொடங்குவாரா? இப்பொருளை வாங்கிவிற்றால் நஷ்டம்தான் வரும் என்று தெரிந்திருந்தால் அப்பொருளை யாரேனும் கொள்முதல் செய்வாரா? இப்படி நஷ்டம் வரும் தொழிலை தொடங்குதல், நஷ்டம் தரும் பொருளை வாங்கு தல், நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு நிதர்சனமான சான்றுகளாகும்.