கஅபா ஏன் புனித இல்லமாக்கப்பட்டது?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

கஅபா இருக்கும் இடம் புனிதமாக்கப்படக் காரணம் என்ன? அதன் சிறப்பு என்ன?

உலகம் படைக்கப்படுவதற்கு முன் அந்த இடத்தில் தான் அல்லாஹ் இருந்தான் என்பதால் அது அல்லாஹ்வின் வீடு என்று கூறப்படுவதாகச் சிலர் கூறுகின்றனர். இது சரியா?

அனைத்து நபிமார்களும் அங்கு தான் அடக்கம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படுவதில் உண்மை உள்ளதா?

பதில் :

பூமி படைக்கப்படுவதற்கு முன்னால் அல்லாஹ் கஅபாவில் இருந்தான் என்பது கட்டுக் கதையாகும். பூமி படைக்கப்படுவதற்கு முன் பூமியின் ஒரு அங்கமான கஅபா இருந்திருக்க முடியாது என்பதைச் சிந்தித்தாலே இது கட்டுக்கதை என்பதை அறியலாம்.

அல்லாஹ்வின் வீடு என்று கஅபா மட்டும் சொல்லப்படுவதில்லை. அனைத்து பள்ளிவாசல்களும் அல்லாஹ்வின் வீடுகள் என்று தான் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் அல்லாஹ் அங்கே இருந்தான் என்பதோ அல்லது இப்போது அங்கே இருக்கிறான் என்பதோ அல்ல. அந்த இடத்தின் உரிமையாளன் அல்லாஹ் என்பது தான் இதன் பொருள்.

பள்ளிவாசல் என்று ஒரு இடத்தை நாம் அமைத்துக் கொண்டால் அதில் எந்த மனிதரும் உரிமை கொண்டாட முடியாது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் தான் அவர்களுக்கு உள்ளதே தவிர வேறு உரிமை இல்லை. இதைச் சொல்வதற்காகத் தான் அது அல்லாஹ்வின் இல்லம் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் இருக்கும் உங்களுக்கு மதுரையில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் அது உங்களுடைய இடம் என்று நீங்களும் சொல்வீர்கள். உலகமும் சொல்லும். அந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக அதன் உரிமையாளராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் பொருள். அது போல் தான் அல்லாஹ்வின் ஆலயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களும் உரிமையுடன் வழிபாடு நடத்த இந்த நிலைபாடு அவசியம். ஒரு மனிதன் கஅபாவின் உரிமையாளன் என்றால் அதில் மற்றவர்கள் வழிபாடு நடத்தும் போது உறுத்தல் எற்படும். தயக்கம் ஏற்படும். அந்த மனிதனின் எதிரிகளும், பிடிக்காதவர்களும் வழிபாட்டுக்கு வர முடியாத நிலை ஏற்படும். ஆலயம் அல்லாஹ்வுக்கு உரியது என்ற நிலை இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாது.

மேலும் ஒரு மனிதனுக்குச் சொந்தமான இடம் என்றால் அங்கே அவனுக்கு வேண்டப்பட்டவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். அல்லாஹ்வின் ஆலயம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டால் அங்கே அனைவரும் சமம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும். இது போன்ற காரனங்களால் தான் அல்லாஹ்வின் வீடு எனக் கூறப்படுகிறது. இதை அறியாத வீணர்கள் அல்லாஹ் அங்கே குடியிருப்பதாக எண்ணிக் கொண்டு கதை கட்டியுள்ளனர்.

மேலும் விபரத்திற்கு

அங்கு தான் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும் தவறான கருத்து.

குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் மதீனாவில் அமைந்திருப்பதே இந்தக் கூற்றைப் பொய்யாக்கப் போதுமாகும். மேலும் பல நபிமார்களின் அடக்கத்தலம் ஜெருசலமில் உள்ளதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இக்கூற்று கப்ருகள் உள்ள இடங்களில் பள்ளிவாசல் கட்டக் கூடாது என இஸ்லாம் கூறும் சட்டத்திற்கு முரணாகவும் அமைந்துள்ளது. நபிமார்களின் கப்ருகளானாலும் அவற்றின் மேல் பள்ளிவாசல்களைக் கட்டுவது கூடாது.

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் கஅபா’வாகும். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் தியாக வரலாறை உணர்த்தும் ஆலையமாக கஅபா உள்ளது. இதன் காரணத்தால் இறைவன் இதற்குப் பல சிறப்புகளை வழங்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன்: 3:96)

அபய பூமி

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத்தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.

(அல்குர்ஆன்: 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த “துஆ’வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

 

 حدثنا موسى ، حدثنا وهيب ، حدثنا عمرو بن يحيى ، عن عباد بن تميم الأنصاري ، عن عبد الله بن زيد رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم : ” أن إبراهيم حرم مكة ودعا لها، وحرمت المدينة كما حرم إبراهيم مكة، ودعوت لها في مدها وصاعها مثل ما دعا إبراهيم عليه السلام لمكة “.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனிதமாக்கினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்தார்கள். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும்) அபிவிருத்தி செய்யுமாறு பிரார்த்தனை செய்துள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி)

(புகாரி: 2129)

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

“இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!”

(அல்குர்ஆன்: 2:126)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

“கஅபா’ ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(அல்குர்ஆன்: 105:1-5)

மேலும் ஒரு படையினர் கஅபா’வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியைப் பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

حدثنا محمد بن الصباح ، حدثنا إسماعيل بن زكرياء ، عن محمد بن سوقة ، عن نافع بن جبير بن مطعم ، قال : حدثتني عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ” يغزو جيش الكعبة، فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم. قالت : قلت : يا رسول الله، كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم، ومن ليس منهم ؟ قال : ” يخسف بأولهم وآخرهم، ثم يبعثون على نياتهم “.

“ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!” எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 2118)

இறைவன் “கஅபா’ ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

கொலை, போர் செய்தல் கூடாது

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

حدثنا إسحاق ، حدثنا أبو عاصم ، عن ابن جريج ، قال : أخبرني حسن بن مسلم ، عن مجاهد ، أن رسول الله صلى الله عليه وسلم قام يوم الفتح، فقال : ” إن الله حرم مكة يوم خلق السماوات والأرض، فهي حرام بحرام الله إلى يوم القيامة لم تحل لأحد قبلي، ولا تحل لأحد بعدي، ولم تحلل لي قط إلا ساعة من الدهر لا ينفر صيدها، ولا يعضد شوكها، ولا يختلى خلاها ، ولا تحل لقطتها إلا لمنشد “. فقال العباس بن عبد المطلب : إلا الإذخر يا رسول الله ؛ فإنه لا بد منه للقين والبيوت. فسكت، ثم قال : ” إلا الإذخر فإنه حلال “. وعن ابن جريج ، أخبرني عبد الكريم ، عن عكرمة ، عن ابن عباس بمثل هذا، أو نحو هذا. رواه أبو هريرة ، عن النبي صلى الله عليه وسلم.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப்படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே” என்று கேட்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு “இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 4313, 1834)

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 22:25)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

حدثنا أبو اليمان ، أخبرنا شعيب ، عن عبد الله بن أبي حسين ، حدثنا نافع بن جبير ، عن ابن عباس، أن النبي صلى الله عليه وسلم قال : ” أبغض الناس إلى الله ثلاثة : ملحد في الحرم، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ بغير حق ليهريق دمه “

“அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர் கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 6882)

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

حدثنا علي ، حدثنا سفيان ، عن الزهري ، عن سعيد ، عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال : ” لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد : المسجد الحرام، ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى “.

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:

புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

1. அல் மஸ்ஜிதுல் ஹராம்,

2. மஸ்ஜிதுன் நபவி,

3.மஸ்ஜிதுல் அக்ஸா”

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 1189)

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது “கஅபா” ஆலயம் சென்று “ஹஜ்” செய்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான் : அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

(அல்குர்ஆன்: 3:97)

அளவற்ற நன்மை

“கஅபா’ ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

حدثنا عبد الله بن يوسف ، قال : أخبرنا مالك ، عن زيد بن رباح ، وعبيد الله بن أبي عبد الله الأغر ، عن أبي عبد الله الأغر، عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : ” صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه، إلا المسجد الحرام “.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1190)

حدثنا إسماعيل بن أسد ، قال : حدثنا زكريا بن عدي ، قال : أنبأنا عبيد الله بن عمرو ، عن عبد الكريم ، عن عطاء ، عن جابر، أن رسول الله صلى الله عليه وسلم قال : ” صلاة في مسجدي أفضل من ألف صلاة فيما سواه، إلا المسجد الحرام، وصلاة في المسجد الحرام أفضل من مائة ألف صلاة فيما سواه “.

“மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: இப்னுமாஜா 1396,(அஹ்மத்: 14167)

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

حدثنا إبراهيم بن المنذر ، حدثنا الوليد ، حدثنا أبو عمرو ، حدثنا إسحاق ، حدثني أنس بن مالك رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال : ” ليس من بلد إلا سيطؤه الدجال، إلا مكة والمدينة، ليس له من نقابها نقب إلا عليه الملائكة صافين يحرسونها، ثم ترجف المدينة بأهلها ثلاث رجفات فيخرج الله كل كافر ومنافق “.

“மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூற்கள்:(புகாரி: 1881),(முஸ்லிம்: 5236)