சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?
சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?
முஹம்மத் அப்துல் அஜீஸ்
சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.
மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன.
ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது.
மற்றொன்று பிறர் கண்களில் படாமல் மறைப்பது.
நம் கண்களுக்கு நமது முட்டுக்கால்கள் தெரிவதற்குத் தடை இல்லை. ஆனால் மற்றவர்கள் பார்க்காமல் மறைப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த ஒரு குலத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து உங்களில் ஒருவர் நிற்பது போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை(த் தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்றால் நிச்சயம் முட்டுக்காலை மறைத்திருக்க முடியாது. ஆனால் கால்களுக்கும் மேல் ஆடை தூக்கப்பட்டிருப்பதை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஹுதைஃபா (ரலி) அவர்களை அருகில் அழைத்து தம்மை மறைத்துக் கொள்ளச் சொல்லியுள்ளனர். ஒரு சுவரை நோக்கி சிறு நீர் கழித்தார்கள் என்று இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் சுவர் இருந்ததால் ஆடை தூக்கப்பட்டதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் பின்புறம் இருந்து யாராவது பார்க்கக் கூடாது என்பதற்காக மறைத்துக் கொள்ளச் சொல்லியுள்ளனர்.
மேலும் தரைக்கு நெருங்குவதற்கு முன்னால் ஆடையை உயர்த்த மாட்டார்கள் என்று தாரமியில் ஹதீஸ் உள்ளது.
நூல் : தாரிமி
மேலும் சிறுநீர் கழித்தல், உடலுறவு கொள்ளுதல் போன்ற காரியங்களை ஆடையை விலக்கித்தான் செய்ய முடியும். இது குறித்து சிலர் தேவையில்லாமல் குழப்பிக் கொண்ட போது இதைக் கண்டித்து ஒரு வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.
கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் 11:5 வசனத்தைப் பற்றிக் கேட்டேன். சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும் போது வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இந்த வசனத்திலுள்ள தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள் என்பதன் பொருள் என்ன? என்று கேட்டேன். சிலர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள விரும்பும் போது, அல்லது தனியே ஒதுங்கச் செல்லும் போது வெட்கப்பட்டு வந்தார்கள். அப்போது இந்த இறைவசனம் அருளப்பட்டது என்று சொன்னார்கள்.