01) முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்.
அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் அண்ணல் நபி அவர்கள், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தொகுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் உலகில் நபி புலவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல நூற்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பொய்யான தகவ ல்களும் கலந்திருக்கின்றன. ஆதாரமில்லாத பல செய்திகள் ஊடுருவி உள்ளன.
எனவே இது போன்ற பொய்யான செய்திகளின் கலவை இல்லாமல் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நூலை தொகுத்துள்ளோம்
நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பாடமாக நடத்துவதற்கு இந்நூல் பேருதவியாக இருக்கும் என்று நம்பிக்கை லைக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஒவ்வொரு காலகட்டமாக நாம் அறிந்து கொள்ளும் போதுதான் பல்வேறு திருமறை வசனங்களின் சரியான கருத்தையும் பல்வேறு நபிமொழிகளின் விளக்கத்தையும் நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களும் அருமை ஸஹாபாக்களும் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்துள்ளர்கள் என்பது நாம் அறிந்து கொள்ள முடியும் இதன் மூலம் இந்த சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை மென்மேலும் வீரியமாக அனைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பதற்கு இத்தொகுப்பு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்று நம்பிக்கை வைக்கின்றோம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அறியாமைக்கால மக்களுக்கு மத்தியில் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களின் குணநலன்களையும் பழக்க வழக்கங்களையும் நாம் அறிந்து கொள்வதற்கும் ‘அவர்களிடம் இருந்த தீய குணங்களை இஸ்லாம் எவ்வாறு அகற்றியது என்பதையும் இந்த வரலாற்று நூலில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு மத்தியில் எவ்வாறு இஸ்லாத்தை எடுத்துரைப்பது, அதில் ஏற்படும் சோதனைகளை நாம் எவ்வாறு தாங்கிக் கொள்வது என்பதற்கும் இறைத்தூதரின் வரலாறு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்த வாழ்க்கை வரலாற்று தொகுப்பினை இயன்ற வரை ஆதாரப்பூர்வமான செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்துள்ளோம்.
அதிலும் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இருந்துதான் அதிகமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம் பொய்பென்று கருதப்படாத கருத்துக்களை வரலாற்று நூற்களிலிருந்தும் ஆதாரமாகக் காட்டியுள்ளோம்.
வரலாற்று நூற்களிலிருந்து கூறப்படும் தகவல்களை மார்க்கச் சட்டங்கள் எடுப்பதற்குரிய ஆதாரமாக கொள்வது கூடாது ஏனெனில் சரியான அறிவிப்பாளர் தொடரில் நபியவர்கள் தொடர்பாக வரும் குர்ஆனிற்கு முரண்படாத செய்திகளை மட்டும்தான் மார்க்கச் சட்டம் வகுப்பதற்குரிய ஆதாரமாகக் கொள்ள வேண்டும் இதையும் இந்நூலை வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.