கடனாளிக்கு ஜகாத் கடமையா?
கடனாளிக்கு ஜகாத் கடமையா?
இல்லை.
கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ, அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஜகாத் கடமையில்லை.
ஏனென்றால் இவர் ஜகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்: ஞானமிக்கவன்.
صحيح مسلم 119 – (1886)
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 3832) .
எனவே கடன் வாங்கியவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது தான் அவருடைய முதல் கடமை.
ஒருவருடைய சொத்துக்கள் அவர் பட்ட கடனை விட அதிகமாக இருந்தால் கடன் எவ்வளவு உள்ளதோ அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள சொத்தின் மதிப்பைக் கணக்கிட வேண்டும்.
எஞ்சியுள்ள சொத்துக்கள் ஜகாத் கடமையாகுவதற்குரிய அளவு (நிஸாப்) அல்லது அதை விடவும் அதிகமாக இருந்தால் எஞ்சியுள்ள இந்தச் சொத்துக்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக ஒருவரிடம் 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவருக்கு 5 லட்சம் கடன் உள்ளது என்றால் இந்த 5 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதமுள்ள 45 லட்சங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
கடனாக உள்ள லட்சம் இவருக்கு உரியது அல்ல. கடன் கொடுத்தவர்களுக்கானது. ஏறக்குறைய அமானிதம் போன்றவை. பிறருக்கு உரிய செல்வத்துக்கு நாம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.
ஐம்பது லட்சம் சொத்து இருந்து அறுபது லட்சம் கடனாக இருந்தால் இவர் மீது ஜகாத் கடமை இல்லை. ஏனனில் இந்த ஐம்பது லட்சமும் கடன் கொடுத்தவர்களின் செல்வமாகும். மேற்கொண்டு பத்து லட்சம் கடன் உள்ளதால் இவர் ஜகாத் பெறுவதற்கான தகுதியுள்ளவராகிறார்.