11) புகழை விரும்பவில்லை
நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மூலம் செல்வம் சேர்க்காவிட்டாலும் புகழுக்காவது
ஆசைப்பட்டார்களா? எனக் கேள்வி எழலாம். நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே
கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற
அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2433, 2055, 2431)
கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. அள்பா என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஒரு கிராமவாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராமவாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும் என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2872, 6501)
எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம். இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து
கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபியவர்களை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபி (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. ‘எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்’ என்று கூறினார்கள். “இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்” எனவும் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2821, 3148)
இது நபி (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள்.
மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக
இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத
ஒன்றாக இருந்தது. உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபியவர்களை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்குக் கோபமே வரவில்லை.
மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபியவர்கள் அணிந்திருந்தனர்.
அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடலின் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது.
அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.
நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட,
ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை
எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார்.
அவர் கடுமையாக இழுத்ததால் நபி (ஸல்) அவர்களின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.
நூல்: (புகாரி: 3149, 5809, 6088)
சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.
உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான முஹம்மது நபியை, முன் பின் அறிமுகமில்லாத ஒரு
கிராமவாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்தவனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது.
உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்
என்று கோரிக்கை வைக்க முடிகின்றது. இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபியவர்களால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?