10) நபிகளாரின் சொத்து மதிப்பு
பொதுவாக ஒரு அரசியல்வாதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அனைத்து மக்கள் மீது கடமையாகும். அவர் அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு என்ன? வந்த பின்னர் என்ன சம்பாதித்தார்? எவ்வளவு சேமித்தார்? என மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிக்கு உண்டு.
நபி (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்? நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது. அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது. ஏதாவது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.
தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.
மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.
இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.
நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா? என்றார்கள். அவர் கிடாய் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி)
நூல்: (அஹ்மத்: 17172)
நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நபி (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.