03) ஆட்சி தலைவர் நபிகள் நாயகம்

நூல்கள்: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும். திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல், முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும்.

ஒரு திட்டம் நீண்ட நாட்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் செயல்படுபவரே
தலைவர். எதிர்கால விளைவுகளை ஓரளவு அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பது அவசியம். பெரிய விஷயங்களை நன்கு கவனித்துச் செயல்படுத்தும் அதே வேளையில் சின்ன விஷயமாக இருந்தாலும் அக்கறை செலுத்தி, கவனத்துடன் செயல்படும் பாங்கு உள்ளவராக இருக்க வேண்டும். சிறந்த வல்லமை பெற்றவராக இருப்பதுடன் நேர்மை, நம்பிக்கை, நாணயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஊழல் கறை படியாதவராக, ஆடம்பரத்தில் திளைக்காதவராக, லஞ்ச லாவண்யங்களில் புரளாதவராக இருப்பவரே மக்கள் எதிர்பார்க்கும் தலைவர்.

இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்மறையாகத் தான் தற்போதைய அரசியல்வாதிகள்
திகழ்கிறார்கள். இதில் படித்த அரசியல்வாதி, படிக்காத அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. படிக்காத அரசியல்வாதிக்கும் படித்த அரசியல்வாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
படிக்காதவன் கொள்ளை அடித்து மாட்டிக் கொள்வான். படித்தவன் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பான். நாட்டையே மாற்றுபவன் அறிவாளி! நாட்டை ஏமாற்றுபவன் அரசியல்வாதி!
வக்கற்ற அரசியல்வாதிகளால் வாடும் மக்களின் வயிறெரிந்த வார்த்தைகள் தான் இவை. இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகள் இருந்தால் நாடு ஐந்து வருடமல்ல! ஐயாயிரம் வருடமானாலும் அது உருப்படப் போவதில்லை.

ஒரு நாடு உருப்பட வேண்டுமென்றால் அதை ஆட்சி செய்பவன் உருப்படியாக இருக்க வேண்டும்.ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டுமென்றால் அந்த நாட்டில் நல்லரசு அமைய வேண்டும். நல்லதொரு ஆட்சியாளரே அந்த நாட்டை வல்லமை மிக்க நாடாக மாற்றுவார்.
அதன் முன்னோடியாகத்தான் நபிகளார் அரபுலகத்தில் நல்ல அரசை அமைத்து, பிறகு வல்லரசாக மாற்றினார்கள். இந்த அசுர மாற்றத்திற்கு நபிகளார் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள் தான். பத்தாண்டுகளில் நாடு வல்லரசாக அமைய நபிகளார் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

துணிவு

துணிவு என்பது ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும். அன்பு, இரக்கம் என்று ஒரு புறமும் துணிவு, வீரம் என்று மறுபுறமும் ஒரு மனிதனிடம் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
தன் நாட்டைக் காக்கவும், எதிரிகளிடம் விவேகத்துடன் பல்வேறு பிரச்சனைகளை, சவால்களை
எதிர்கொள்ளவும் ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய பண்பு துணிவு. அதற்கு நபிகள் நாயகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒருநாள் (ஏதோ ஒரு சப்தத்தினால்) மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி சப்தம் வந்த
திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு,
அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். ‘‘அஞ்சாதீர்கள்!
அஞ்சாதீர்கள்!’’ என்று கூறிக் கொண்டே வந்தனர். “(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது” எனவும் குறிப்பிட்டனர்.
நூல்: (புகாரி: 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212)

சேணம் பூட்டாத குதிரையில் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும்
அவசியம். ஒருவேளை எதிரிகள் வந்தால் தன்னந் தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
அபூ தல்ஹாவின் வீடு, நபி (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு, துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்கள்.

எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு நள்ளிரவில், தன்னந்தனியாகஎவ்வளவு
பெரிய வீரரும் போக மாட்டார். அதுவும் மாபெரும் தலைவராக, ஆட்சியாளராக இருப்பவர்கள் இதுபோன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள். ஆயினும், தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு, மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் அந்த மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.