12) குர்ஆனின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்து விட்டது.

(அல்குர்ஆன்: 10:57)

உன்னத குர்ஆனின் உண்மைச் சிறப்பை உணராத முஸ்லிம்கள்

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக கருணை இறைவனால் காருண்ய நபிக்கு அருளப்பட்ட வேதமே திருமறைக் குர்ஆன் ஆகும். உலகம் நெடுகிலும் கோடான கோடி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேதம் குர்ஆன் ஆகும். அவ்வேதம் திக்கற்று நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் உரைகல். கண்மூடிப் பழக்கங்களை மண்மூடிப் போகச் செய்வதற்காக அரும்பாடுபட்ட நல்லவர்களின் சரித்திரத் திரட்டு.

ஒரு மனிதனின் அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தும் இறையச்சம், மனத்தூய்மை, கொள்கை உறுதி, நற்பண்புகள் இவற்றைப் போதிக்கும் போதனைக் களஞ்சியம். தீண்டாமை, பெண்சிசுக் கொலை, தீவிரவாதம், மனித உரிமை மீறல், பெண்ணடிமைத்தனம், திருட்டு, கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சமூக விரோதச் செயல்களையும், வட்டி, விபச்சாரம், மது, சூது போன்ற சமூகத் தீமைகளையும் வேரறுக்கும் வேதம். திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை, பொருளாதாரம், கொடுக்கல் வாங்கல் இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வழிபாடுகளையும் பண்பாடுகளையும் கற்றுத் தரும் வாழ்வியல் வழிகாட்டி.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. (அல்குர்ஆன்: 2:185)

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணமும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும் உங்களிடம் வந்து விட்டது.                              (அல்குர்ஆன்: 10:57)

இவ்வாறாக திருக்குர்ஆனின் சிறப்புகள் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். உலகம் நெடுகிலும் பலர் குர்ஆன் வேதத்தைப் படித்து உள்ளம் கனிந்து இஸ்லாம் நோக்கி விரைந்து வருகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களில் சிலரோ திருக்குர்ஆனை அணுகும் முறையில் தவறிழைத்து சில பித்அத்தான காரியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

திருக்குர்ஆனின் பெயரால் நடைபெறும் பித்அத்கள்.

»குர்ஆனை ஓதி முடித்தவுடன் ஹத்முல் குர்ஆன் என்ற துஆவை ஓதுதல்.

»இறந்தவருக்கு யாஸீன் ஓதுதல்.

»இறந்தவருக்காக குர்ஆனை ஓதி ஹதியா செய்தல்.

»பராஅத் இரவில் மூன்று யாஸீன் ஓதுதல்.

»குர்ஆனின் மீது சத்தியம் செய்தல்.

»குர்ஆனை முத்தமிடுதல்.

»ஒவ்வொரு குறிப்பிட்ட நோய்க்கும் குறிப்பிட்ட வசனங்களில் நிவாரணம் இருப்பதாக கூறுதல்.

»திருமண வீட்டில் புதுமணத் தம்பதிகளுக்கு முன் குர்ஆனைத் திறந்து வைத்திருத்தல்.

»மக்தப் மதரஸாக்களில் யஸ்ஸர்னல் குர்ஆனை முடித்து குர்ஆனை ஓதத் துவங்கும் முன் சக்கரை வைத்து பாத்திஹா ஓதுதல்.

இன்னும் இது போன்ற பித்அத்தான பல காரியங்களைத் திருக்குர்ஆனின் பெயரால் மக்கள் அரங்கேற்றி வருகின்றனர். மனித குலத்திற்கு நேர்வழி காட்ட வந்த குர்ஆனில் சத்தியக் கருத்துக்கள் நிறைந்திருக்க அவற்றை விளங்காமல் அக்குர்ஆனைக் கொண்டே பித்அத்களை அரங்கேற்றி வருகின்றனர்.

பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : (புகாரி: 2697)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயி: 1560)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையாக(இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல்: (அஹ்மத்: 16519)

நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்றும் எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் திருக்குர்ஆன் தொடர்பான பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். இதை விட்டும் மக்கள் விலகிட வேண்டும். எனவே மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.