09) துஆக்களின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும் (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

இஸ்லாமிய வணக்கங்களில் மிகவும் முக்கியமானதும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்கும் உரிய வணக்கம் பிரார்த்தனை (துஆ) ஆகும். ஒரு இஸ்லாமியன் தன் வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் கேட்க வேண்டிய துஆக்கள் பற்றியும் அவற்றின் ஒழுங்குகள் பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.

பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.                                                அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: (அஹ்மத்: 17629)

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சாதாரணமாக சொல்லாமல் வணக்கங்களிலேயே தலைசிறந்தது பிரார்த்தனை என்ற பொருள்படவே நபி (ஸல்) இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒரு அடியான் தன்னை அடிமை என்றும் அல்லாஹ்வை எஜமான் என்றும் உள்ளூர உணர வைக்கும் அம்சங்கள் பிரார்த்தனைகளில் நிரம்ப உண்டு.

(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும் (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

அல்லாஹ்வை விட்டுவிட்டு, உமக்கு நன்மையோ, தீமையோ செய்ய இயலாதவற்றை நீர் பிரார்த்திக்காதீர்! அவ்வாறு நீர் செய்தால் அப்போது அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்!(அல்குர்ஆன்:)இது போன்று பிரார்த்தனை குறித்து ஏராளமான செய்திகள் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் நிறைந்து காணப்படுகின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு சரியான முறையில் பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களில் சிலர் பிரார்த்தனைகளை பித்அத்தான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இன்னும் இது போன்ற மார்க்கத்தில் இல்லாத பல பிரார்த்தனைகளை மக்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

துஆக்களின் பெயரால் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

• தொழுகைக்கு பிறகு செய்யப்படும் கூட்டு துஆக்கள்.

• உணவளித்தவர் வீட்டில் செய்யப்படும் கூட்டு துஆக்கள்.

• மரணித்தவர் வீடுகளில் பல கட்டங்களாக செய்யப்படும் கூட்டு துஆக்கள்.

• உளூச் செய்யும் போது ஒவ்வொரு உறுப்பை கழுவும் போது ஓதப்படும் தனித்தனி துஆக்கள்.

• பராஅத் இரவு துஆக்கள் என்ற பெயரில் ஓதப்படுபவை.

• மிஃராஜ் இரவு துஆக்கள் என்ற பெயரில் ஓதப்படுபவை.

• லைலத்துல் கத்ர் இரவில் ஓதப்படும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான துஆக்கள்.

• விரைவில் திருமணம் ஆவதற்காக ஓதப்படும் துஆ

• குழந்தை பிறந்தவுடன் ஓதப்படும் துஆ

• கடை திறப்பிற்கு ஓதும் துஆ

• புது வீட்டில் ஓதப்படும் துஆக்கள்

• திருமணம் முடிந்தவுடன் கணவன் மனைவியின் நெற்றியை பிடித்து ஓதும் துஆ.

• அனைத்து சந்தர்ப்பங்களில் ஓதப்படும் கூட்டு துஆக்கள்.

பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி: 2697)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.                          அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயி: 1560)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழித்தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி) நூல்: (அஹ்மத்: 16519)

நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் இந்த மார்க்கத்தில் இல்லாததை நிச்சயம் மக்கள் உருவாக்குவார்கள் என்றும் முன்னோர்களின் பாதையை பின்பற்றுவார்கள் என்றும் அவர்கள் குர்ஆன் ஹதீஸில் இல்லாத எதை செய்தாலும் அது மறுக்கப்படும் என்று எச்சரித்து அத்தகைய பித்அத் நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

தவறான புரிதலின் அடிப்படையிலும் இவ்வாறு செய்வதற்கு அதிக நன்மை கிடைக்கும் என்று எண்ணியும் தான் மார்க்கத்தில் இல்லாத பல விதமான பிரார்த்தனைகளை மக்கள் ஓதி வருகின்றனர். இது தவறாகும். இதை விட்டும் மக்கள் விலகிட வேண்டும். எனவே மார்க்கத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக.