03) விபரீதங்களும் தீர்வுகளும்
வட்டி குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஹலாலான தொழில் எது? ஹரமான தொழில் எது? என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். நபிமொழிகளை படிக்கும் போது வட்டி இரண்டு வகைப்படும் என்பதை அறியலாம். ஒரே இனத்தைச் சார்ந்த பொருட்களில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் போது அந்த கொடுக்கல் வாங்கல் சம அளவில் இருக்க வேண்டும். கூடுதல் குறைவுடன் இருக்கக்கூடாது. உதாரணமாக மட்டமான இரண்டு கிலோ பேரீச்சம் பழங்களைக் கொடுத்து தரமான ஒரு கிலோ பேரீச்சம் பழங்களை வாங்குவது கூடாது. இந்த பொருள் மாற்றம் உடனுக்குடன் நடந்தாலும் கூடாது. தவணை அடிப்படையில் நடந்தாலும் கூடாது. இது முதல் வகை வட்டியாகும். பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு சரியாகத் தவிர விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள். நூல் : (புகாரி: 2182)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உபாதா பின் அஸ்ஸôமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நூல் : (புகாரி: 2175)
“”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தங்கத்தைத் தங்கத்திற்கு விற்பதையும் வெள்ளியை வெள்ளிக்கும், தொலிநீக்கப்பட்ட கோதுமையைத் தொநீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலிநீக்கப்படாத கோதுமையைத் தொலிநீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் விற்பதைத் தடை செய்தார்கள்; உடனுக்குடன் சரிக்குச் சரியாக மாற்றிக்கொண்டால் தவிர. யார் அதைவிடக் கூடுதலாகக் கொடுக்கிறாரோ அல்லது கூடுதலாகக் கேட்கிறாரோ அவர் வட்டியைப் பெற்றவர் ஆவார் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். நூல் : (முஸ்லிம்: 3232)
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸôஉக்கு இரண்டு ஸôஉ என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒரு ஸôஉக்கு இரண்டு ஸôஉம் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!’’ என்று கூறினார்கள். நூல் : (புகாரி: 2080)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் “பர்னீ’’ எனும் (மஞ்சளான, வட்டவடிவமான) உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் “இது எங்கிருந்து கிடைத்தது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது; நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸôஉவைக் கொடுத்து அதில் ஒரு ஸôஉ வாங்கினேன்!’’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள். நூல் : (புகாரி: 2312)
தரம் குறைந்த பேரீச்சம் பழத்தைக் கொடுத்து தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவதில் என்ன தவறு இருக்கின்றது? இங்கே பொருளுடைய தரம் வேறுபடுவதால் கூடுதலாக கொடுக்கப்படுகின்றது. இது எப்படி வட்டியாகும்? என்று சந்தேகம் எழலாம். வெளிப்படையில் பார்த்தால் இது வட்டி இல்லை என்றாலும் வட்டியினுடைய சாயல் இதில் இருப்பதால் மார்க்கம் இதையும் வட்டியுடன் சேர்த்துள்ளது. வட்டியின் வாடை கூட தென்படக்கூடாது என்பதற்காக இந்த கொடுக்கல் வாங்கலை நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள். அப்படியானால் தரம் குறைந்த பேரீச்சம் பழம் வைத்திருப்பவர் அதற்கு பதிலாக தரமான பேரீச்சம் பழங்களை வாங்க முடியாதா? என்று சிலருக்கு கேள்வி ஏழலாம். இதற்கான பதிலாக மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள். நம்மிடம் உள்ள பேரீச்சம் பழத்தை ஒரு மதிப்பு போட்டு முதலில் விற்க வேண்டும். பிறகு அந்த பணத்தை வைத்து தரமான பேரீச்சம் பழத்தை வாங்கிக்கொள்ளலாம்.
தங்கத்தைக் கொடுத்து வெள்ளியை வாங்கலாம். வெள்ளியை கொடுத்து தங்கத்தை வாங்கலாம். ஆனால் இந்த வியாபாரம் கடனாக இல்லாமல் உடனுக்குடன் நடக்க வேண்டும்.
உதாரணமாக 10 கிராம் தங்கத்தை கடனாக பெற்றுக்கொண்டு ஒரு மாதம் கழித்து 100 கிராம் வெள்ளி தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்யக்கூடாது. அதே நேரத்தில் 100 கிராம் வெள்ளி கொடுத்து 10 கிராம் தங்கத்தை கடனில்லாமல் உடனுக்குடன் வாங்கினால் இது தவறு கிடையாது.
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நாணயமாற்று வியாபாரம் செய்துவந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ûஸத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு “உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் பதிலளித்தார்கள்’’என்றார்கள். அது கூடாது’ என அவர்கள் நூல் :(புகாரி: 2061)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தங்கக்கட்டியை தங்கக்கட்டிக்கும் தங்க நாணயத்தை தங்க நாணத்துக்கும் வெள்ளிக்கட்டியை வெள்ளிக்கட்டிக்கும் வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்துக்கும் தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்புக்கும் (சரிக்குச் சரியாக உடனுக்குடன்) விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார். தங்கம் வெள்ளி ஆகிய இரண்டில் வெள்ளி அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெள்ளிக்கு பதிலாக தங்கத்தை உடனுக்குடன் விற்பது தவறல்ல. ஆனால் தவணை முறையில் விற்பது கூடாது. தொலி நீக்கப்பட்ட கோதுமை தொலி நீக்கப்படாத கோதுமை இவை இரண்டில் தொலி நீக்கப்படாத கோதுமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பதிலாக தொலிநீக்கப்பட்ட கோதுமையை உடனுக்குடன் விற்பது தவறல்ல. ஆனால் தவணை முறையில் விற்பது கூடாது. இதை உபாதா பின் ஸôமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (அபூதாவுத்: 2907)
வட்டியில் இன்னொரு வகை உள்ளது. இது தெளிவான வட்டியாகும். நாம் ஒருவரிடத்தில் நம் பொருளை குறிப்பிட்ட காலம் கொடுத்து தவணைக்காலம் முடிந்தவுடன் அந்தப் பொருளை அப்படியே திருப்பி வாங்குவது கடனாகும். இதில் நாம் கொடுத்த பொருளை விட கடன்கொடுத்ததற்காக கூடுதலாக எதையும் பெறவில்லை. நம்மிடமிருந்து கடன் பெற்றவர் கடன் வாங்கியதற்காக கூடுதலாக எதையும் தரவில்லை. அவர் நம்மிடமிருந்து எதை வாங்கினாரோ அதை அப்படியே திருப்பிக்கொடுக்கின்றார். எனவே இந்த வகையில் கடன்கொடுப்பதும் வாங்குவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறு பிறருக்கு கடன் கொடுக்கும் போது கடன் வாங்கியவர் நம்மிடம் வாங்கிய பொருளை திருப்பிக்கொடுப்பதுடன் கடன் பெற்றதற்காக கூடுதல் பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று கூறினால் அப்போது இந்தக் கடன் வட்டியாகி விடுகின்றது. எனவே கடனுக்காக கூடுதலாக பணம் பெறுவது வட்டியாகும். இதை பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கடனில் தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது. அறிவிப்பவர் : உசாமா (ரலி) நூல் : புகாரி (2178)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலி நீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத்தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார். அவற்றின் இனங்கள் வேறுபட்டிருந்தால் தவிர. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (3235)
வட்டிக்கும் வியாபாரத்துக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. எனவே வட்டியும் வியாபாரமும் ஒன்று என்பது தறவானக் கூற்றாகும். வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “”வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல்குர்ஆன்: 2:275) ➚
வட்டி என்பது முன்னரே இவ்வளவு தான் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் வியாபாரத்தில் லாபம் என்பது இவ்வளவு தான் என்று முன்னரே உறுதி செய்ய முடியாது. வட்டி என்பதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்படலாம். வங்கியில் நாம் செலுத்தும் பணத்திற்கு வட்டி இவ்வளவு என்று செலுத்தும் போதே தெரிந்து விடுகிறது. வங்கி நஷ்டமடைந்தாலும் அந்தக் கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லாபம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக வழங்குவதில்லை.
ஒரு பொருளை வியாபாரம் செய்தால் ஒரு முறை மட்டுமே அந்த பொருளில் லாபத்தை பெற முடியும். ஆனால் வட்டியில் ஒரு தொகையை அப்படியே வைத்துக்கொண்டு பல முறை கூடுதலாக பெற்றுக்கொண்டே இருக்க முடியும். வியாபாரத்தில் பொருளை வாங்கியவனும் பொருளை விற்றவனும் இவ்விருவரும் பயனடைகின்றனர். ஆனால் வட்டியில் கடன் வாங்கியவன் கூடுதல் பணத்தை செலுத்துவதன் மூலம் நஷ்டம் அடைகிறான்.
கடன் கொடுத்தவன் அதைப் பெறுவதன் மூலம் லாபம் அடைகிறான். வியாபாரத்தில் பொருளுக்குரிய தொகை மட்டுமே வாங்கப்படுகின்றது. ஆனால் வட்டியில் கடன் கொடுத்த பொருளுடன் இன்னும் கூடுதல் தொகையும் சேர்த்து வாங்கப்படுகின்றது.
நம்முடைய பணம் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு காலம் அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது. நம்முடைய பொருள் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு கால, அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும். இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவன் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போவதில்லை. நோட்டு பழையதாக் ஆனாலும் பனத்தின் மதிப்பு குறையாது. பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளுக்கும் மதிப்பு ஒன்று தான்.
ஆனால் ஒருவனது வீட்டை அல்லது வாகனத்தைப் பயன்படுத்தினால் அதனால் தேய்மானம் ஏற்படுகிறது. இந்த வகையில் வாடகையும் வட்டியும் வேறுபடுகிறது. ஒருவனது பணத்தை நாம் ஏதோ ஒரு துறையில் பயன்படுத்தினால் அதில் லாபமும் நட்டமும் ஏற்படலாம். நிச்சயமான ஆதாயம் இல்லை. ஆனால் ஒரு பொருளை வாடகைக்கு எடுத்தால் அதை நாம் அனுபவித்து விடுவது நிச்சயமானது. எனவே வாடகையை வட்டி என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
மருத்துவம் கல்வி உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுகிறார்கள். வட்டித் தொழில் செய்பவர்கள் இவர்களின் இந்த நிர்பந்தமான நிலையை பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதே இந்த ஏழைகளுக்கு கடினமாக இருக்கும் போது வாங்கியதை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்றால் சிரமப்படுபவர்களை மேலும் சிரமத்தில் சிக்க வைக்கும் மனிதநேயமற்ற செயலாக வட்டி உள்ளது.
இந்த ஏழை குறித்த காலத்துக்குள் கடனை அடைக்க முடியாமல் அவகாசம் கேட்டு தவணைக் காலத்தை நீட்டிக்குமாறு கோருவான். காலம் செல்ல செல்ல கடன் வாங்கியவனுக்கோ திண்டாட்டம். கொண்டாட்டம். ஆனால் கடன் கொடுத்தவனுக்கோ ஒரு நேரத்தில் இவன் செலுத்த வேண்டிய வட்டிப் பணம் இவன் வாங்கிய கடனை விட பன்மடங்காகப் பெருகிவிடும்.
சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் வட்டிக்கே செலவிட்டு வாழ்நாள் முழுவதும் ஏழையாகவே இருப்பான். சொல்லப்போனால் இவன் வட்டி வாங்குபவனுக்கு அடிமையாக மாறிவிடுவான். ஏழையின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் விசப் பூச்சியாக வட்டி வாங்குபவன் இருப்பான். பணம் கைக்கு வராவிட்டால் ஏழையின் வீட்டுக்குச் சென்று அவனை மானபங்கப்படுத்துவதும் ரவுடிகளை வைத்து மிரட்டுவதும் நடக்கின்றது. இதனால் கடன் வாங்கியவன் ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறான்.இப்படி பலருடைய வாழ்வை அழிக்கும் கொடும் பாவமாக வட்டி இருப்பதால் இஸ்லாம் இதைத் தடைசெய்துள்ளது.
வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் விலை உயர்வுக்கான மிக முக்கியக் காரணமாகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது வட்டிக்குக் கடன் வாங்கி உற்பத்தி செய்பவர் விலையை ஏற்றினால் தான் வட்டி கட்ட முடியும் என்பதற்காக விலையை அதிகரித்து விடுவார். மேலும் வட்டிக்குக் கடன் கிடைப்பதால் வக்கற்றவர்களும் களத்தில் இறங்கி சொத்துக்களை வாங்க முயற்சிப்பதால் தேவைகள் அதிகரிக்கின்றன.
குறைந்த பொருளுக்கு அதிகமானவர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டு இதன் காரணமாகவும் விலைவாசிகள் உயர்கின்றன. தேவைக்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் சொத்து வாங்க அலையும் போது போட்டி குறைவாக உள்ளதால் விலை சீராக இருக்கும். ஆனால் சாப்பட்டுக்கு வழி இல்லாதவர்களும் வட்டிக்குக் கடன் கிடைப்பதால் சொத்து வாங்க அலைகின்றனர். தங்களால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தும் ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர். இப்படி போட்டி அதிகமாகும் போது தானாகவே விலைகள் உயர்கின்றன. ஆக வட்டி எனும் கொடிய சுரண்டல் காரணமாக இரண்டு வகைகளில் விலைவாசிகள் உயர்கின்றன. வட்டி அடிப்படையிலான பொருளாதாரம் தடுக்கப்பட்டால் பெரும்பாலான பொருட்கள் உடனே விலை குறைந்து விடும்.
பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின் பல நாடுகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
* மாதம் ஒன்றுக்கு ஆறு வங்கிகள் என்ற கணக்கில் அமெரிக்க வங்கிகள் திவால் அறிவிப்பு செய்கின்றன.
* கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தியதால் கடனை நம்பி நடத்தப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.
* இவ்வாறு மூடப்பட்டதால் அந்நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மாதந்தோறும் மூன்று லட்சம் பேருக்கும் குறையாமல் வேலையிழந்து வருகின்றனர்.
* நூற்றுக்கு ஆறு பேர் வேலையில்லாமல் இருந்த நிலை மாறி நூற்றுக்கு எட்டு பேர் வேலையில்லாத நிலையை அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் நூற்றுக்குப் பத்து பேருக்கு வேலையில்லை என்ற நிலை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
* இப்படி இலட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்ததால் அவர்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்து விட்டது. அத்தியாவசியமான பொருள்களுக்கு மட்டும் தான் மக்கள் செலவிடுகின்றனர்.
* இதன் காரணமாக ஆடம்பரப் பொருள்களின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களும் ஆட்குறைப்பு செய்கிறார்கள்; அல்லது நிறுவனத்தை மூடுகின்றனர்.
* இப்படி சங்கிலித் தொடராக வேலை இழப்புகளும், நிறுவனங்களின் கதவடைப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
எப்போது எந்த வங்கி திவாலாகும் என்ற அச்சத்தினால் வங்கிகளில் போட்ட பணத்தை மக்களும், பண முதலைகளும் திரும்பப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் வங்கிகள் திருப்பித் தரும் நிலையில் இல்லை. திவாலான வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக 70 ஆயிரம் கோடி டாலர் (முப்பத்தி ஐந்து லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க அரசு ஒதுக்கியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயித்து கொள்ளை அடித்து வந்தன. எண்ணெய் விலையை ஏற்றி நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்றால் அதிலும் மண் விழுந்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் கார்கள் விற்பனையும், கார்கள் உபயோகமும் குறைந்து இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து அரபு நாடுகளுடன் சேர்த்து அமெரிக்காவுக்கும் மரண அடி விழுந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை மட்டும் மக்கள் வாங்குவதால் அதன் விலை ஏறிக் கொண்டே செல்லும் அதே வேளையில் ஆடம்பரப் பொருள்களான கார், பங்களாக்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்தாலும் அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. இந்தப் பாதிப்பு அமெரிக்காவுடன் நின்று விடவில்லை.
உலகின் பல நாடுகளிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. உலகின் மாபெரும் சந்தையாக இருந்த துபையில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வங்கிகள் நஷ்டமடைந்ததால் (அதாவது வட்டிக்குக் கடன் கொடுக்க பயந்ததால்) ஏராளமான வங்கிப் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் சுத்தமாகப் படுத்துவிட்டது.
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன்: 3:130) ➚ இவ்வசனத்தில் (அல்குர்ஆன்: 3:130) ➚ “பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு “”சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது” என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதமாகும். (அல்குர்ஆன்: 2:278) ➚ வசனத்தில் “”வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். “”வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறாமல், “”வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்” என்று பொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய அளவிலான வட்டியும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். (அல்குர்ஆன்: 2:279) ➚ வசனத்தில் “”வட்டியிலிருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமே சொந்தம்” எனக் கூறப்படுகிறது. “”மூலதனமும் சிறிய அளவிலான வட்டியும் சொந்தம்” என்று கூறப்படவில்லை. மாறாக வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. அப்படியானால் “”பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்” என்று (அல்குர்ஆன்: 3:130) ➚ வசனம் கூறுவது ஏன்? பொதுவாக வட்டியின் தன்மையே இது தான். வியாபாரத்துக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இது தான். அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டே செல்லும். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வாங்கிய கடனை விட பல மடங்கு வட்டி அதிகமாகியிருப்பதைக் காணலாம். ஒரு பொருளை நாம் இலாபம் வைத்து விற்பனை செய்தால் அந்த ஒரு தடவை மட்டுமே அப்பொருள் மூலம் இலாபம் அடைகிறோம். ஆனால் ஒரு தொகையை வட்டிக்குக் கொடுத்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல தடவை இலாபம் அடைகிறோம். இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்ற கருத்தை இது தராது.
பேரீச்சம் பழம் கோதுமை தங்கம் வெள்ளி உப்பு ஆகிய பொருட்களில் மட்டுமே வட்டி வரும். இவை தவிர வேறு பொருட்களில் வட்டி வராது என்று சிலர் தவறாக கூறி வருகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீûஸ ஆதாரமாக காட்டுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், தொலிநீக்கப்பட்ட கோதுமையைத் தொலிநீக்கப்பட்ட கோதுமைக்கும், தொலிநீக்கப்படாத கோதுமையைத் தொலி நீக்கப்படாத கோதுமைக்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். யாரேனும் கூடுதலாகக் கொடுத் தாலோ, அல்லது கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார். அவற்றின் இனங்கள் வேறுபட்டிருந்தால் தவிர. 30 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (முஸ்லிம்: 3235)
குர்ஆன் ஹதீûஸப் பற்றிய அறிவில்லாதவர்களும் சிந்திக்கும் திறனற்றவர்களும் தான் இப்படிப்பட்ட வாதத்தை வைப்பார்கள். இந்த ஹதீஸில் இவர்கள் கூறுவது போன்று குறிப்பிட்ட இந்தப் பொருட்களில் மட்டுமே வட்டி வரும். வேறு எதிலும் வட்டி வராது என்று நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக் கூறவில்லை. ஒரே இனமாக உள்ள பொருட்களில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் போது கூடுதல் குறைவின்றி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு உதாரணமாகத் தான் பேரீச்சம் பழம் கோதுமை உப்பு ஆகிய பொருட்களைக் குறிப்பிட்டார்கள்.
வட்டி என்ற காரணத்துக்காகவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விற்பனை செய்வதை தடைசெய்கிறார்கள். இந்தக் காரணம் இந்த ஹதீஸில் சொல்லப்படாத மற்ற தானியங்களுக்கும் பொருட்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். எந்த செல்வமானாலும் அதன் மூலம் வட்டி வாங்கக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான். நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (அல்குர்ஆன்: 2:279) ➚ இந்த வசனத்தில் உங்கள் செல்வங்களில் மூலதனம் உரியது என்று அல்லாஹ் கூறுகிறான். எந்த செல்வமானாலும் அதன் மூலம் வட்டி சம்பாதிக்க முடியும். ஆனால் சம்பாதிக்கக் கூடாது என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
வட்டி என்பது மோசடியும் பொருளாதாரச் சுரண்டலுமாகும். இந்த மோசடியை அனைத்து பொருட்களிலும் செய்ய முடியும். பொருள் வேறுபடுவதால் மோசடி இல்லை என்று கூறுவது அறிவீனம். எனவே செல்வம் என்ற வட்டத்துக்குள் வரும் எந்தப் பொருளானாலும் அதில் வட்டி வரும். முஸ்லிம்கள் இதை கண்டிப்பாக வாங்கக் கூடாது.
ஒருவர் வட்டியிலிருந்து விடுபட முடிவெடுத்துவிட்டால் இதற்கு முன்பு அவர் வாங்கிய வட்டிப் பணத்தை மக்களிடம் திருப்பிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப் பணத்தை அவர் தவறான அடிப்படையில் சம்பாதித்து இருந்தாலும் அதை அவரே வைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியை அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:275) ➚
ஆனால் இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறு திருந்தியவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே நாம் செய்த பாவத்துக்கு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவது அவசியம். வட்டிப் பாவத்தில் ஈடுபட்டதால் இதற்காக மனம் வருந்தி இனி ஒருக்காலும் இந்த பாவத்தில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியுடன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
வட்டி வாங்கிக் கொண்டிருந்தவர் அதிலிருந்து விடுபட முடிவு செய்துவிட்டால் இவர் கடனாக கொடுத்த அசல் தொகையை மட்டும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம். கடன் வாங்கியோர் இவருக்கு வட்டிப் பணத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் அந்தப் பணத்தை வாங்கக்கூடாது. அசலை மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அல்குர்ஆன் (2 : 278)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டியை ஹராம் என்று அறிவித்தவுடன் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வர வேண்டியிருந்த வட்டியை தள்ளுபடி செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.(முஸ்லிம்: 2334)
எனவே இனி வட்டி ஏதும் வர வேண்டியது இருந்தால் அதை வாங்கக்கூடாது. வட்டி இல்லா கடன் அல்லாஹ் சிலருக்கு அவர்களின் தேவையை விட அதிகமாக வாரி வழங்குகிறான். அவர்கள் இந்த செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காக கணக்கு வழக்கில்லாமல் இறைவன் அள்ளித்தருகின்றான். எனவே சிரமப்படுபவர்கள் கடன் கேட்டு வந்தால் வசிதியுள்ளவர்கள் வட்டி வாங்காமல் அவர்களுக்கு கடன்கொடுத்து உதவ வேண்டும்.
கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அவகாசம் கேட்டால் அவகாசம் அளிக்க வேண்டும். விரும்பினால் அந்தக் கடனை தள்ளுபடியும் செய்யலாம். செல்வந்தர்கள் இவ்வாறு தாராள மனதுடன் நடந்துகொண்டால் இறைவன் அவர்களிடத்தில் தாராளமாக நடந்துகொள்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!’ என்று கூறினார். உடனே, “அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!’ என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!’ இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நூல் : (புகாரி: 2077)
அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “”உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், “”இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ், “”இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான். (முஸ்லிம்: 3181)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே சச்சரவிட்டுக்கொள்ளும் (இருவரின்) சப்தத்தைக் கேட்டார்கள். அவ்விருவரின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யுமாறும் மென்மையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், “”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, “”நல்லறத்தைச் செய்யமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொன்னவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “”நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார். (முஸ்லிம்: 3171)
நட்டம் வராத வகையில் கடன் கொடுக்கலாம் எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுக்கின்றோமோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி கேட்கக் கூடாது. நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) நூல்: (புகாரி: 2176)
இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே 4000ரியால் மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாகக் கேட்டு வாங்கினால் அது வட்டி என்பதில் சந்தேகமில்லை. எனவே கடன் கொடுக்கும் போதே, இன்ன கரன்ஸியின் அடிப்படையில் கடன் தருகிறேன்; அதே கரன்ஸி மதிப்பின் அடிப்படையில் தான் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கடன் கொடுக்கலாம். உதாரணமாக 4000ரியால்கள் கடன் கொடுக்கும் போது, அப்போதைய இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்குப் போட்டு 44,000ரூபாய் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கடன் கொடுக்கிறீர்கள்; கடன் வாங்கியவர் திருப்பித் தரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. அதாவது 44,000ரூபாய்க்கு 4200ரியால்கள் வருகின்றது என்றால், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 200ரியால்கள் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம். 36 அது போல் 44000 ரூபாய்க்கு 3800 ரியால் என்று மதிப்பு குறைந்து விட்டால் 3800 தான் வாங்க வேண்டும். 4000 ரியால் கொடுத்ததால் 4000 ரியால் தான் தர வேண்டும் என்று கேட்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் ரியால் அடிப்படையில் கடன் கொடுக்கவில்லை. இந்திய ரூபாயின் அடிப்படையில் தான் கடன் கொடுத்தீர்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! (அல்குர்ஆன்: 5:1) ➚
ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன. எனவே கடன் கொடுக்கும் போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் போகலாம். 4000ரியால்கள் கொடுத்ததற்கு, 3800ரியால் மட்டுமே திருப்பிக் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.
வெளிநாட்டு கரன்ஸிகளின் மதிப்பு மட்டுமல்ல! இந்தியாவிலேயே பண மதிப்பு நாளுக்கு நாள் மாறிக் கொண்டு தான் வருகின்றது. ஒரு நாட்டின் பண மதிப்பு குறைவதற்கும், உயர்வதற்கும் அந்த நாட்டை ஆள்பவர்களின் நிர்வாகத் திறனே காரணம். தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பண மதிப்பு குறைந்து போகின்றது. ஆட்சியாளர்களின் நிர்வாகக் குளறுபடிகளால் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு, கடன் கொடுத்தவர்கள் நட்டமடைந்து வருகின்றனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஒரு பவுன் நகை 12 ஆயிரமாக இருக்கும் போது நாம் ஐந்து பவுன் நகை வாங்குவதற்காக 60 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறோம். அவசரத்துக்காக 37 ஒருவர் கடன் கேட்கும் போது 60 ஆயிரத்தைக் கொடுக்கிறோம். அவர் ஆறு மாதம் கழித்து திருப்பித் தரும் போது ஒரு பவுன் விலை 15 ஆயிரமாகி விடுகிறது. இப்போது 60 ஆயிரம் ரூபாயில் ஐந்து பவுன் வாங்க முடியாது. நான்கு பவுன் தான் வாங்க முடியும். கடன் கொடுக்காமல் அப்போதே நகையாக வாங்கி இருந்தால் நாம் ஐந்து பவுன் வாங்கி இருக்க முடியும். கடன் கொடுத்ததால் நமக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு பவுன் அதாவது 15 ஆயிரம் ரூபாய். இதன் காரணமாகத் தான் கடன் கொடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
நாம் கடன் கொடுக்கும் போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும் போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத் தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.
இன்றைக்கு பலர் கடன் வாங்குவதின் விபரீதத்தை உணராமல் எந்தத் தேவையுமின்றி சர்வ சாதாரணமாக கடன் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களை வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது.
அவசியமான தேவைகளுக்கு கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையில்லாமல் கடன் வாங்குவது நல்ல செயல் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது.
“”அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்: (முஸ்லிம்: 3832)
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, “”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “”அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள். பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “”நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்” என்றார்கள். நூல் : (முஸ்லிம்: 3830)
நபி (ஸல்) அவர்கள் கடனில் விழுந்துவிடக் கூடாது என்று அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். கடன் வாங்குவது ஆபத்தான செயல் என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’
பொருள் : இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுôகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “”தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள். நூல் : (புகாரி: 832)
கடன் வாங்கிவிட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸô தொழுகை நடத்த மறுத்துவிட்டார்கள்.
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : இறுதித்தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸô கொண்டுவரப்பட்டது. “இவர் கடனாளியா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித் தோழர்கள் இல்லை’’ என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸô கொண்டு வரப்பட்டபோது, “இவர் கடனாளியா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம்! என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!’’ என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு’’ என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல் : (புகாரி: 2295)
எனவே இயன்ற வரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தேவைக்காக கடன் வாங்கினால் அதை திருப்பிக்கொடுப்பதற்கு சூழ்நிலை அமையும் போது தாமதிக்காமல் உடனே கடனை அடைத்துவிட வேண்டும். ஏனென்றால் கடனை வாங்கிவிட்டு நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதும் பாவமான செயலாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (புகாரி: 2288)
ஒரு மனிதனிடம் நாம் கடன் வாங்கும் போது, எவ்வளவு வாங்குகிறோமோ அதை விட அதிகமாக நல்ல முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றது. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கும் வரை வளைந்து குனிந்து பணிவுடன் வாங்கி விடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்கும் போது கடன் கொடுத்தவரை அலையாய் அலைக்கழிப்பதையும் இழுத்தடிப்பதையும் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. திருப்பிக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதலாகவே கொடுங்கள் என்று மார்க்கம் கூறுகின்றது.
கடன் கொடுத்தவர் எதையும் கூடுதலாகக் கேட்காமல், கடன் பெற்றவர் தாமாக விரும்பி கடனை அடைக்கும் போது எதையேனும் அதிகப்படுத்திக் கொடுத்தால் அதில் தவறில்லை. உதாரணமாக ஒருவன் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டு, கொடுக்கும் போது ஆயிரமோ, இரண்டாயிரமோ கூடுதலாக, தானாக முன்வந்து கொடுத்தால் அது தவறு கிடையாது. இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, (அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள், அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது 42 என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களீல் சிறந்தவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 2305, 2306, 2390, 2392, 2393, 2606, 2609)
நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கினால் அதை விட அதிகமானதையே கொடுப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீசும் தெளிவுபடுத்துகின்றது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளிவாசலில் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள். நூல்: (புகாரி: 2603)
கடன் வாங்கியவர் தாமாக விரும்பி, வாங்கிய கடனை விட அதிகமாகத் தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். கடன் கேட்கும் போது கூடுதலாக தருவேன் என்று வாக்குறுதி கொடுப்பதும் இதை நிபந்தனையாக பேசுவதும் வட்டியாகும். இவ்வளவு கூடுதலாகத் தர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடன் கொடுத்தால் அது வட்டியாகி விடும். அதே போன்று திருப்பிக் கொடுப்பவர் இன்ன தொகைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, கூடுதலாகக் கொடுத்தால் அதுவும் கூடாது.
கடனை முழுவதுமாக ஒப்படைக்கும் நேரத்தில் கடன் வாங்கியவர் தானாக விரும்பிக் கொடுப்பது வட்டியாகாது. மாறாக இது மார்க்கத்தில் சிறப்பித்து சொல்லப்பட்ட விசயமாகும்.
கடன் வாங்கியவர் அதை திருப்பிச் செலுத்தும் போது விரும்பி கூடுதலாகக் கொடுப்பது தவறில்லை. ஆனால் கடனை அடைப்பதற்கு முன் கடன் கொடுத்தவருக்கு அவர் கடன் கொடுத்ததற்காக அன்பளிப்பு வழங்குவது வட்டியாகும். இவ்வாறு அன்பளிப்பு கொடுத்தால் கடன் கொடுத்தவரை திருப்திபடுத்தி மேலும் அவகாசம் கேட்கலாம். சீக்கிரமாக பணம் கேட்கமாட்டார் என்ற நோக்கத்திற்காக இந்த அன்பளிப்பு கொடுக்கப்படுகின்றது. இது வாங்கிய கடனுக்காக கொடுக்கப்படுவதால் இதுவும் வட்டியாகும்.
அபூ புர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), “”நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் (நபி (ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே” என்று கேட்டார்கள். பிறகு, “”நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கின்றீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து, அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்” என்று சொன்னார்கள். நூல் : (புகாரி: 3814)
பொதுவாக வட்டி வாங்குவதும் வட்டி கொடுப்பதும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நிர்பந்தமான நேரங்களில் இது போன்ற ஹராமான விசயஙகள் அனுமதிக்கப்பட்டதாகிவிடும். ஒருவருடைய உயிரை காப்பாற்ற பணம் தேவைப்படுகின்றது. உதவி செய்யவோ கடன் கொடுக்கவோ யாரும் முன்வரவில்லை.
வட்டிக்கு கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர். இந்நிலையில் உயிரைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. இது மாதிரியான நிர்பந்தமான நேரங்களில் வட்டிக்கு கடன் வாங்கினால் அல்லாஹ் குற்றம்பிடிக்கமாட்டான். நிர்பந்தமான நிலை ஏற்படும் போது மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் குறுக்கே நிற்காது. நமது உயிரை காப்பதற்குரிய வழி என்னவோ அதை கையாள வேண்டும் என்றே மார்க்கம் கூறுகின்றது. இணைவைப்பது தான் பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும். நிர்பந்தத்தில் ஒருவர் இணைவைப்பு வார்த்தைகளை கூறினால் அல்லாஹ் அதை கூட மன்னிக்கின்றான். அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர. (அல்குர்ஆன்: 16:106) ➚
இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான். பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி, நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 2:173) ➚
நிர்பந்தமான நிலையில் தடை செய்யப்பட்டவை அனுமதிக்கப்படும் என்பது உண்மையே. அது நிர்ப்பந்தம் தானா என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்கட்டும். இது நிர்பந்தம் தான் என்று அவருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் உண்மையில் எந்த நிர்பந்தமும் இல்லாமல் வாயளவில் நிர்பந்தம் என்று கூறி வட்டிக்கு கடன் வாங்கினால் உலகத்தில் மனிதர்களின் விமர்சனத்திலிருந்து தப்பித்தாலும் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க இயலாது. மருத்துவம் செய்வதை நிர்பந்தமான நிலை என்று கூறலாம்.
ஆனால் ஓட்டு வீட்டை மாடி வீடாக மாற்றுவது ஒரு வீட்டை இரண்டு வீடாக கட்டுவது சந்ததிகளுக்கு இடம் வாங்கிப் போடுவது வாகனம் வாங்குவது இது போன்ற காரணங்களுக்காக வட்டி கட்டுபவர்கள் இருக்கின்றார்கள். இவையெல்லாம் கூடுதல் வசதியை பெருக்கிக்கொள்வதாகும். இதில் எந்த நிர்பந்தமும் இல்லை. இது போன்ற காரணங்களுக்காக வட்டிக்கு கடன் வாங்கினால் நரகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.