01) முன்னுரை

நவீன வடிவங்களில் வட்டி

இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற காரியங்களை முற்றிலுமாக தடைசெய்யக்கூடிய அற்புதமான மார்க்கம். மனிதனை துன்புறுத்துகின்ற அனைத்து பாவங்களும் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் காரணமாக இருக்கின்றன.

மனிதன் தன்னுடைய சுயநலத்தாலும் குறை மதியினாலும் இது போன்ற பாவங்களை துணிந்து செய்யக்கூடியவனாக இருக்கின்றான். இத்தகைய பாவங்களில் வட்டி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வட்டி மிகப்பெரிய பொருளதார சுரண்டலாகவும் மோசடியாகவும் இருப்பதால் இஸ்லாம் இதை முழுவதுமாக தடைசெய்துள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இது சாதாரண வணிகம் என்று கூறி இதைத் தொழிலாக செய்பவர் அதிகம் இருக்கின்றனர். முஸ்லிம்மல்லாதவர்கள் தான் இவ்வாறு இருக்கின்றார்கள் என்றால் நமது சமுதாயத்திலும் பலர் இதை ஒரு பாவமாக கருதாமல் சர்வசாதாரணமாக இதன் மூலம் சம்பாதித்து வருகிறார்கள்.

தற்காலத்தில் வட்டி நவீன வடிவங்களில் பல்வேறு பெயர்களில் பரவியுள்ளது. வட்டி கூடாது என்றால் இந்த காலத்தில் வாழ்வது மிகவும் கடினம் என்று பலர் சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் வட்டி ஆக்கிரமித்துள்ளது. வட்டியைப் பற்றி சரியான தெளிவும் ஈமானிய உறுதியும் இல்லாதவர்கள் இதில் இலகுவாக சிக்கிவிடுகின்றனர். இப்படிப்பட்ட காலம் வரும் என்பதை நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே எச்சரித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.                                                                     அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : (புகாரி: 2083)

இஸ்லாமிய சமுதாயம் இந்த பாவத்தில் விழக்கூடாது என்றால் வட்டியைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பது அவசியம். இதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். பல்வேறு பணிகளுக்கிடையில் தனியே நேரம் ஒதுக்கி இந்நூலை முழுமையாக வாசித்து சரிபார்த்துக்கொடுத்த பாசத்திற்குரிய பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு எஸ். அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.சி