44) குடும்பவியல் சட்டங்களின் சுருக்கம்

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்
திருமணச் சட்டங்கள்

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

 

(அல்குர்ஆன்: 4:24)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) “அவ்தாஸ்” என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (சிறை பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:
மேலும், உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். (4:24)
அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா) காலம் முடிந்துவிட்டால், அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர்.

நூல்: (முஸ்லிம்: 2885)

கட்டாயத் திருமணம் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

(அல்குர்ஆன்: 4:19)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

‘(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க மாட்டார்கள். (வாழ அனுமதிக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்) ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!’ எனும் (4:19) வசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4579)

செல்வத்திற்காக அனாதைகளை மணக்கக்கூடாது
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

(அல்குர்ஆன்: 4:3)

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், இந்த (4:3) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கிற அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அனாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் – மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.
இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அனாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல் அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

நூல்: (புகாரி: 4574)

பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்’’ எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:127),128)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள். (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அனாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரிச்ச மரம் உள்பட அவரின் செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணந்துகொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகிறவ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்துவந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போதுதான் ‘தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது’ எனும் (4:128) வசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4600)

உடலுறவுச் சட்டங்கள்

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:223)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!’ எனும் (2:223) இறைவசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4528)

 

மாதவிடாய்

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’’ எனக் கூறுவீராக!

 

(அல்குர்ஆன்: 2:222)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!…’ என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்’ என்று கூறினர்.

நூல்: (முஸ்லிம்: 507)

 

தலாக் சட்டங்கள்

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

 

(அல்குர்ஆன்: 2:232)

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) கூறியதாவது:

மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவரது கணவர் விவாகரத்துச் செய்து ‘இத்தா’ காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே)விட்டுவிட்டார். (எனவே, இது முழு விவாகரத்து ஆகும்.) பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.
அப்போதுதான், ‘அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்’ எனும் (அல்குர்ஆன்: 02:232)வது) வசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4529)

வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 2:240)

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களிடம், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ எனும் (2:240) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (அல்குர்ஆன்: 2:234) மாற்றிவிட்டதே! இதை ‘ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?’ அல்லது ‘இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தை விட்டு மாற்றமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: (புகாரி: 4530)

 

லிஆன் சட்டங்கள்

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். “அவனே பொய்யன்’’ என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். “அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்’’ என்பது ஐந்தாவதாகும்.

 

(அல்குர்ஆன்: 24:6-9)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை ‘ஷரீக் இப்னு சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்‘ என்று கூறினார்கள். அதற்கு ஹிலால் (ரலி), ‘தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்’ என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு ‘தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர்’ என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவியிடம் ஆளனுப்பினார்கள். ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி ‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)’ என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், ‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை’ என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் இப்னு சஹ்மா’வுக்கே உரியதாகும்’ என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், ‘இது பற்றிய இறைச்சட்டம் (லிஆன் விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 4747)

 

பாகப்பிரிவினைச் சட்டங்கள்

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:11)

ஜாபிர் ( ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!’ என்று கேட்டேன். அப்போதுதான் ‘உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்’ என்று தொடங்கும் (4:11) வசனம் அருளப்பட்டது.

நூல்: (புகாரி: 4577)

இரத்த உறவுகளே வாரிசாவார்கள்
பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:33)

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

இந்த (4:33) வசனத்தின் மூலத்திலுள்ள ‘மவாலிய’ எனும் சொல்லுக்கு ‘வாரிசுகள்’ என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகி வந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம்.
‘பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம்’ எனும் (அல்குர்ஆன்: 4:33) வசனம் அருளப்பட்டபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.
பின்னர் இப்னுஅப்பாஸ் (ரலி) கூறினார்:
நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவை தாம் உள்ளன. உடன்படிக்கை செய்து கொண்டவருக்காக மரண சாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.

நூல்: (புகாரி: 4580)