39) வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

குடும்பத்தில் பெண்கள் ஒரேயடியாக வேலை வேலை என்று இருந்தால் அதுவே மனச் சோர்வை ஏற்படுத்தக் கூடும். அவ்வப்போது ரிலாக்ஸாக வெளியிடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வர வேண்டும். பூங்காவுக்குச் செல்வது, சில நேரங்களில் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவையெல்லாம் பெண்களின் மனதிற்கு சந்தோஷத்தையும் குடும்ப உறவில் மேலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு நல்ல வாய்ப்பையும் பெற்றுத்தரும்.

மார்க்க வரம்புகளை மீறாத வகையில் கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளைப் பார்க்கலாம்; பீச்சுக்குச் செல்லலாம். இதற்கு ஆண்களுக்கு அனுமதி இருப்பது போல் பெண்களுக்கும் அனுமதி உள்ளது என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

இதுபோன்ற விஷயங்களில் ஆண்களில் பலர் குறை வைத்து விடுகின்றனர். இவ்வாறு பொழுது போக்குவது சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் தாமும் சுற்றுலா செல்லாமல் மனைவியையும் அழைத்துச் செல்லாமல் இருந்தால் கூட அவ்வளவாக வெறுப்பை ஏற்படுத்தாது. தான் மட்டும் நன்றாக ஊர் சுற்றிப்பார்த்து விட்டு, மனைவி மக்களை விட்டு விடுவது வெறுப்பை ஏற்படுத்தும். சில ஆண்கள் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக ஹோட்டலில் சாப்பிடுவார்கள். ஆனால் மனைவியையும், பிள்ளைகளையும் அறவே அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

இதுபோன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வாய்ப்புக்குத் தகுந்த மாதிரியோ, ஒருநாள் வீட்டில் சமைப்பதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று அவரவர் வசதிக்கேற்ப வகை வகையாக ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அழைத்துச் செல்லலாம். ஏனெனில் வீட்டில் அப்படியெல்லாம் வகை வகையாகச் சமைக்க முடியாது.

நண்பர்களோடு போவதைப் போன்று மனைவியோடும் செல்ல வேண்டும். மனைவியுடன் போவதினால் இரண்டு நன்மை கிடைக்கிறது. ஒன்று மனைவியின் ஆசையை நிறைவேற்றிய நன்மை. இன்னொன்று ஹோட்டலுக்கு மனைவியை அழைத்துச் செல்வதினால் அன்றைய தினம் மனைவிக்கு அடுப்பங்கரையிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படியெல்லாம் கணவன்மார்கள் சிந்தித்துக் குடும்பத்தை வழி நடத்திட வேண்டும் என நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

நபியவர்கள் காலத்தில் பெருநாள் தினத்தில் தொழுகை, பிரார்த்தனைக்குப் பிறகு வீர விளையாட்டுக்கள் நடைபெறும். அதனைத் தமது மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பார்க்க ஆசைப்பட்ட போது அதனை நபியவர்கள் அனுமதித்தார்கள்.

பெருநாள் தினத்தில் சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுக்கள்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுக்களைப்) பார்க்க விரும்புகிறாயா?’’ என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்துக் கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்’’ என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது “போதுமா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)’’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: (புகாரி: 950)

நம்மில் பலர், ஆண்கள் விளையாடும் போது பெண்களுக்கு என்ன வேலை? என்று பெண்களின் சிறு விருப்பத்தைக் கூட மார்க்கத்தில் ஏதோ பெரிய பாவங்களைச் செய்வதைப் போன்று நினைத்துச் செயல்படுகின்றனர்.

பெண்களுக்கென தனியான விளையாட்டுக் களான பொம்மைகளை வைத்து விளையாடுவது, பல்லாங்குழி, நொண்டி தொட்டு விளையாடுவது, இதுபோன்ற ஆசைகளைத் தடுக்கக் கூடாது.

வயதுக்கு தகுந்த மாதிரி ரசனைகள் இருக்கும். அதற்கெல்லாம் கணவன்மார்கள் தடை செய்யக் கூடாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள்.தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

நூல்: (புகாரி: 6130)

இந்தச் சம்பவத்தில் நபியவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ரலி) அவர்களின் தோழியர்கள் நபியவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்களை அழைத்து, ஆயிஷா (ரலி) அவர்களுடன் விளையாடச் சொல்வார்கள். தன் மனைவியின் ஆசையை நபியவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

விளையாட்டு என்பது கணவருக்குப் பயந்து மாய்கிற விஷயம் ஒன்றுமல்ல. விளையாடுவது, விளையாட்டைப் பார்ப்பது என்பதெல்லாம் மார்க்கம் அனுமதித்த காரியம். இதைச் செய்வதற்கு கணவன்மார்களுக்குப் பயப்படத் தேவையில்லை.

கணவன் வந்ததால் சக தோழியர் ஏன் ஓடவேண்டும்? பெண்களும் பெண்களும்தானே விளையாடுகிறார்கள். அதில் என்ன தவறு? என்று நபியவர்கள் இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

மார்க்கம் ஹராமாக்கிய காரியத்தில் மட்டும் தான் கடிவாளத்தைப் பிடித்து இழுக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்கிற விஷயமாக இருந்தால் கணவன்மார்கள் விட்டுவிட வேண்டும். ஆணுக்கு இருக்கிற ஆசாபாசங்கள் பெண்களுக்கும் இருக்கத் தான் செய்யும் என்று நினைத்து ஆண்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே மேற்கண்ட சம்பவத்தில் நபியைப் பார்த்து ஓடி ஒளிந்த ஆயிஷாவின் தோழிகளை அழைத்துக் கொண்டு வந்து, என் மனைவியுடன் நன்றாக விளையாடிக் கொண்டிருங்கள் என்று சொன்னதன் மூலம், வந்திருந்த பெண்களின் பயத்தையும் போக்குகிறார்கள்; மனைவிக்கும் பயத்தைப் போக்குகிறார்கள். இதுபோன்ற செயல்கள் மூலம், கணவருக்குப் பயந்து கொண்டு மனைவிமார்கள் அடிமை போன்று வாழ வேண்டாம் என்பதை நமக்கு நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

சில வீடுகளில், கணவருக்கு அருகில் நிற்பதற்குக் கூட மனைவிமார்கள் அஞ்சுவதைப் பார்க்கிறோம். கணவர் வந்தால் மனைவி தரையில் அமர்ந்துகூட இருக்க மாட்டார்கள். ஏன்? மாமியார், மருமகளை விளாசித் தள்ளிவிடுவார். வீட்டுக்காரர் வரும் போது சாகவாசமாக அமர்ந்திருப்பாயோ? என்று பல மாமியார்கள் மிரட்டி வைத்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இவை மார்க்கம் அனுமதிக்காதவை. இதை விளங்காமல் பல மாமியார்கள் செயல்படுவது கண்டனத்திற்குரியது. இதனால் தான் குடும்பங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே இதுபோன்று பெண்கள், பெண்களோடு பேசிக் கொண்டிருப்பது, விளையாடிக் கொண்டிருப்பது, நாம் வரும் போது அமர்ந்திருப்பது, நாம் கீழே உட்கார்ந்து இருக்கும் போது மனைவி நாற்காலியில் உட்காருவது ஆகியவற்றின் மூலம் பெண்கள் நம்மை அவமரியாதை செய்துவிட்டார்கள் என்று நினைக்கக் கூடாது.

அதேபோன்று கணவன், மனைவி சேர்ந்து கூட விளையாடலாம். நம்மில் பலர் மனைவிமார்களை இயந்திரமாக நினைத்துச் செயல்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் நபியவர்கள் அப்படியல்ல.

நான் நபி (ஸல்) அவர்களுடன் சில சமயங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடத்தில், ‘‘முன்னே செல்லுங்கள், முன்னே செல்லுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் “ஓட்டப் பந்தயப் போட்டிக்கு வா’’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்குச் சென்று அவர்களை முந்தினேன். அப்போது என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை.

என் உடல் பருமனானது. நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப் பந்தயம் பற்றி) மறந்து விட்டேன். (பின்னர் ஒரு நாள்) அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் “முன்னே செல்லுங்கள், முன்னே செல்லுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் “ஓட்டப் பந்தயத்துக்கு வா’’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு, சிரித்துக் கொண்டே “அதற்குப் பதிலாக இது’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: (அஹ்மத்: 25075)